ரூ. 1 கோடி வரி செலுத்தியுள்ளேன்; எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க உரிமை உண்டு: அமலா பால்

ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடனும் முன்வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும்படி...
ரூ. 1 கோடி வரி செலுத்தியுள்ளேன்; எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க உரிமை உண்டு: அமலா பால்

வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக நடிகை அமலா பால் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அமலாபால் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை, புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்தார். குறைந்த தொகையை சாலை வரியாகச் செலுத்தியுள்ளார் எனப் புகார் எழுந்தது. இதேபோல, புதுவையில் போலி முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார்களுக்கு குறைந்த சாலை வரியைச் செலுத்தி பலர் மோசடி செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி போக்குவரத்து செயலருக்கும், காவல்துறை முதுநிலை எஸ்.பி.க்கும் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக புதுவை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறை சட்டவிதிகள்படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இவை இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால் தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். புதுச்சேரி திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்றை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசி நகலையும் இந்த முகவரியிலிருந்து தந்துள்ளார். இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை அமலா பால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேசவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஓர் இந்தியக் குடிமகனாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது. தாய்நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தைத் தொலைத்துவிட்டு சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமைப்படுத்தப்பட்டதாக எண்ணுவதற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும் சொத்துகளையும் நியாயப்படுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன். ஒருவேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் அல்லது பெங்களூரில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ? கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்தபோது, அங்கும் இந்திய ரூபாய்தான் பயன்பாட்டில் உள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும். இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்தியபிறகும்கூட, பொதுமக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையைக் குலைக்கும் நோக்குடனும் முன்வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளைக் களைந்து, ஒரு இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.
 
குறுகிய நோக்கில் சின்னச் சின்ன ஆதாயங்களுக்காக, சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்குத் தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்றதாழ்வுகளைக் களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com