இது என் இந்தியா அல்ல: கெளரி லங்கேஷ் கொலை குறித்து ஏ.ஆர். ரஹ்மான் வருத்தம்!

நான் அதற்காக மிகவும் வருந்துகிறேன். இத்தகைய சம்பவங்கள் இந்தியாவில் நடந்தால் அது என் இந்தியா அல்ல...
இது என் இந்தியா அல்ல: கெளரி லங்கேஷ் கொலை குறித்து ஏ.ஆர். ரஹ்மான் வருத்தம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ஒய்எம் மூவிஸ் இயக்கி தயாரித்துள்ள ஒன் ஹார்ட் திரைப்படம், இன்று வெளியாகியுள்ளது. ஒன் ஹார்ட், இந்தியாவின் முதல் கான்சர்ட் படம் என்று குறிப்பிடப்படுகிறது. 2 வருடங்களுக்கு அமெரிக்காவில் 14 நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தினார் ரஹ்மான். அவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அதைத் தற்போது ஒரு திரைப்படம் போல தொகுத்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது ரஹ்மானிடம், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் பதில் அளித்ததாவது: 

நான் அதற்காக மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற விஷயங்கள் இந்தியாவில் நடக்கவேண்டாம் என நினைக்கிறேன். இத்தகைய சம்பவங்கள் இந்தியாவில் நடந்தால் அது என் இந்தியா அல்ல. என் இந்தியா முன்னேறுகிற, அன்பு கொண்ட நாடாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறினார்.  

கன்னட பத்திரிகையின் ஆசிரியரும், சமூக செயல்பாட்டாளருமான கெளரி லங்கேஷ், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். பெங்களூரு பசவனகுடியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்ட கெளரி லங்கேஷ், இரவு 7.56 மணிக்கு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தனது இல்லத்துக்கு காரில் வந்துள்ளார். காரில் இருந்து இறங்கி வீட்டின் முகப்பு நுழைவு வாயிலைத் திறந்து வளாகத்தினுள் சென்றவர் கதவை மூடத் திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் கெளரி லங்கேஷின் தோள்பட்டையின் இடது பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கெளரி லங்கேஷ், தப்பி வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அப்போது, கால் இடறி கீழே விழுந்த கெளரி லங்கேஷை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் 7 சுற்று சுட்டுள்ளனர். இதில், இதயத்தில் 2 குண்டுகள் துளைத்ததால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 0.32 கைத்துப்பாக்கியால் கெளரி லங்கேஷ் சுடப்பட்டது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com