/

நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை!

நடிகர் ஜெய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை பரிந்துரை..

News image
Updated On :22 செப்டம்பர் 2017, 11:08 am

எழில்

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் ஜெய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் அவருடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ஜெய், சென்னை அடையாறு இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெய் புதன்கிழமை இரவு தியாகராய நகர் பகுதியில் நடைபெற்ற மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஆடி காரில், தனது நண்பரான நடிகர் பிரேம்ஜியுடன் அடையாறு இந்திரா நகர் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஜெய், மதுபோதையில் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. 

அடையாறு மேம்பாலத்தில் இருந்து கார் இறங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த இருவரும் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக போலீஸார், ஜெய் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அடையாறு போக்குவரத்து அலுவலருக்கு அடையாறு போக்குவரத்துப் புலனாய் பிரிவு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் விரைவில் ரத்தாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.