/

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது ஏன்?: ஜெயா பச்சன் விளக்கம்!

ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ரவி சுர்புர் கூறியதாவது: அவருக்கு இடது தோள்பட்டையில் ஏற்கெனவே வலி இருந்தது. தற்போது அது அதிகமாகியுள்ளது...

News image
Updated On :14 மார்ச் 2018, 5:50 am

எழில்

ராஜஸ்தானில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடுமையான முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மும்பையில் இருந்து மருத்துவர் குழு விரைந்து சென்று அவருக்கு சிகிச்சையளித்தது.

அமீர் கான் நடிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் தயாராகி வரும் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' என்ற திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். அதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்று வரும் படிப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் சென்றுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அமிதாப் ஒரு சுட்டுரைப் பதிவை வெளியிட்டார். 'எனது உடல் நிலையைப் பரிசோதிக்கவும், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் மருத்துவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' என்று அதில் அவர் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்களும், திரைத் துறையினரும் அமிதாபின் உடல் நிலை குறித்து அச்சம் தெரிவித்தினர்.

அதன் தொடர்ச்சியாக, அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் திரண்டனர். மாநில முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் அமிதாப் விரைவில் குணமடைய வேண்டும் என சுட்டுரையில் தெரிவித்தது மேலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. இறுதியில் அவரது மனைவி ஜெயா பச்சன், அதுதொடர்பாக விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:

அமிதாப் நலமாக உள்ளார். முதுகு வலி, கழுத்து வலி அவருக்கு உள்ளது. படத்துக்காக அணிந்த ஆடைகள் எடை கூடுதலாக இருந்ததால் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. மற்றபடி அவர் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். 

ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ரவி சுர்புர் கூறியதாவது: அவருக்கு இடது தோள்பட்டையில் ஏற்கெனவே வலி இருந்தது. தற்போது அது அதிகமாகியுள்ளது. எனவே தனியார் மருத்துவர்கள் இங்கு வந்து அவரைக் கவனித்துக்கொண்டார்கள் என்றார்.

ஜோத்பூரின் தலைமை மருத்துவ அதிகாரி சுரேந்தர சிங், அமிதாப் உடல்நிலை குறித்து கூறியதாவது: தனியார் மருத்துவர்கள் அவர் உடல்நிலையைக் கவனித்துக்கொள்கிறார்கள். எங்களிடமிருந்து எவ்வித உதவியையும் அவர்கள் கோரவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.