வாட் நெக்ஸ்ட் சிம்பு?!

இனி நாங்கள் பார்க்கப்போகும் சிம்பு பீப் சாங் சிம்புவாக இல்லாமல் பீப்பிள் ஹீரோ சிம்புவாக புது அவதாரம் எடுப்பாரோ என்று!
வாட் நெக்ஸ்ட் சிம்பு?!

மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ வெளிவந்து இரண்டு நாட்களுக்குள் படத்தைப் பற்றிய நல்லவிதமான விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. போலவே படம் குறித்து ‘இதில் என்ன இருக்கிறது? தினமணி எல்லாம் இந்தப் படத்தைப் பாராட்டி எழுதும் அளவுக்கு தினமணியின் தரம் தாழ்ந்து விட்டதா?’ என்று திட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை கருத்துக்களின் அடிப்படியில் வெகுஜன ரசனையின் அடிப்படையில் மணி ரத்னத்தின் இத்திரைப்படம் பி அண்ட் சி ஆடியன்ஸை திருப்திப்படுத்தி இருக்கிறது என்று தான் சினிமா விமர்சகர்கள் சொல்கிறார்கள். அக்னி நட்சத்திரம், மெளனராகம், நாயகனுக்கு அடுத்தபடியாக அப்படியோர் எதிர்பார்ப்பையும், திருப்தியையும் இத்திரைப்படம் அளித்திருக்கிறது என்றால் அது மெய்.

செக்கச் சிவந்த வானத்தைப் பொருத்தவரை ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தபோதும் படத்தின் ஆடியோ ரிலீஸ் அன்று இரண்டு இரண்டு நட்சத்திரங்களின் பெயர்களை உச்சரித்த போது தான் ஆடியன்ஸ் சைடிலிருந்து கைதட்டல் அதிர்ந்தது. அவர்களில் ஒருவர் ‘மக்கள் நாயகன்’ விஜய் சேதுபதி, மற்றொருவர் சிம்பு. விஜய் சேதுபதியாவது தொடர்ச்சியாகப் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கைதட்டல் குவிவதில் ஆச்சர்யப் பட ஏதுமில்லை.

ஆனால் சிம்பு என்ன செய்தார் என்று அவருக்கு இன்னமும் இத்தனை ரசிகர்கள் கூட்டம் குவிந்து கிடக்கிறது என்பது தான் புரியாத புதிர்.

சிம்புவைப் பொருத்தவரை அவருக்கான ‘ஃபேன் பேஸ்’ (ரசிகர் படை) அப்படியே தான் இருக்கிறது என்பதை இந்தக் கைதட்டலில் உணர முடிந்தது. படத்தைப் பற்றி அருண் விஜய் அளித்த நேர்காணலில் அவர் தன்னைப் பற்றி பேசியதைக் காட்டிலும் சிம்புவையும், அரவிந்த் சாமியையும் பற்றியே அதிகம் பேசினார். அவர் சிம்புவைப் பற்றிச் சொன்னது, சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்ற பொதுவான குற்றச்சாட்டு ‘செக்கச் சிவந்த வானத்தில்’ கிடையவே கிடையாது. அவர் எங்கள் அனைவரையும் போல படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து தன்னுடைய கடமையை மிகச்சரியாகச் செய்தார். இப்போது அவருக்கு மெச்சூரிட்டி வந்து விட்டது. இது தான் சரியான நேரம். இனி சிம்பு மீதான பழைய குற்றச்சாட்டுகள் எல்லாம்  மறையும். இதையே தொடக்கமாக வைத்துக் கொண்டு சிம்பு தனது அடுத்தடுத்த படங்களை மிகப்பொறுப்பாக முடித்துக் கொடுக்கலாம். என்றார்.

நடிகர் தியாகராஜன் சிம்பு குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவலும் இப்படியாகத்தான் இருந்தது. ‘சிம்புவை அவரது சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடிக்கும். காண்ட்ரோவர்ஸிகள் அவசியம் தான். நடிகர்கள் என்றால் எல்லா நேரமும் அமைதியாகவே இருந்து கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும். அவ்வப்போது சிம்பு மாதிரியும் இருக்க வேண்டும். இந்த திரைப்படம் அவருக்கு மிகச்சிறந்த கம் பேக். இனி சிம்பு தனக்கான இடத்தை இதன் மூலம் உறுதிப் படுத்திக் கொள்வார் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

நடிகர் அரவிந்த் சாமியும் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே சிம்பு குறித்து மேற்படியான விமர்சனத்தையே அளித்திருந்தார். ‘அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார் என்று சொல்வார்கள். இங்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்புக்கு சிம்பு சரியான நேரத்தில் வந்து சரியான அளவில் ஒத்துழைப்பு அளிக்கிறார்’ என்று கூறியிருந்தார்.

இவர்கள் அனைவரும் சொல்வதைப் பார்த்தால் நேரம் தவறாமை விஷயத்தில் சிம்பு திருந்தி விட்டார் என்பதைப் போலத்தான் தெரிகிறது.

அப்படியானால் வாட் நெக்ஸ்ட் சிம்பு?!

இனி உங்களிடமிருந்து அடுக்கடுக்காக சமூகப் பொறுப்புணர்வும், அக்கறையும் வாய்ந்த நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கலாமா?

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் பெங்களூரி சகோதர, சகோதரிகளிடம் ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டு சமாதானப் படுத்தியவர் நீங்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறோம். இனி நாங்கள் பார்க்கப்போகும் சிம்பு பீப் சாங் சிம்புவாக இல்லாமல் பீப்பிள் ஹீரோ சிம்புவாக புது அவதாரம் எடுப்பாரோ என்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com