என்றும் அழாத நான் ஏன் அழுகிறேன்?: கிரேஸி மோகனின் ‘ரமணாயணம்’ அனுபவம்!
ரமணர் முக்தி அடைந்த பகுதி வரும்போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது...


பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (1952 - 2019) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66.
இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.
ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை குறித்து கிரேஸி மோகன் எழுதியுள்ள வெண்பா நிகழ்ச்சி கர்நாடக இசையுடன் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 27 அன்று நடைபெற்றது. ரமண மகரிஷியின் வாழ்க்கை குறித்து ‘ரமணாயணம்’ என்ற தலைப்பில் 425 வெண்பாக்களை எழுதியுள்ளார் கிரேஸி மோகன். இந்த வெண்பாக்களின் தொகுப்பு இ-புத்தகமாக வெளியாகி உள்ளது. இந்த வெண்பாக்களை பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், கர்நாடக இசையுடன் கூடிய நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட் அரங்கில் நடைபெற்றது. ராஜ்குமார் பாரதி இசையமைத்த வெண்பாக்களை கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ் பாடினார். இந்த நிகழ்ச்சியில், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இசைக் கலைஞர் ஜி.எஸ்.மணி, அம்பிகா காமேஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதுகுறித்து தினமணி கதிர் இதழுக்கு கிரேஸி மோகன் அளித்த பேட்டி:
எல்லாம் ரமணரின் அருள். நான் ஒரு நாள் மதுர பாரதி எழுதிய ‘ரமண சரிதம்’ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ரமணரின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவில் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு நாள் காலையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். 24 மணிநேரத்தில் 425 வெண்பாக்களை எழுதி விட்டேன். ரமணர் முக்தி அடைந்த பகுதி வரும்போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. என்றும் அழாத நான் ஏன் அழுகிறேன் என்று என் மனைவிக்கு தெரியவில்லை.
"என்ன ஆயிற்று?'' என்று என்னிடம் கேட்டார். ""ரமணர் முக்தி அடைந்து விட்டார்'' என்று கூறினேன். ""எனக்கு முக்தி பற்றி ஒன்றும் தெரியாது'' என்று கூறியவாறு வேறு வேலை பார்க்கச் சென்று விட்டார். ராமாயணம் போல் காண்டமாக இதைப் பிரித்து 11 காண்டங்கள் எழுதியிருந்தேன். கவிதை எழுத எனது நண்பன் சு.ரவி "ஆனா' போட்டுவிட்டு "பூனா' போய்விட்டான்.
என்னுடைய எழுத்துகளுக்கெல்லாம் ஆதார ஸ்ருதி என்னுடைய இளவல் "மாது' பாலாஜி தான்.
இதை இசையோடு பாடலாமே என்று ஒருவர் சொல்ல அதற்கும் பாலாஜிதான் ஆரம்பித்து ராஜ்குமார் பாரதி இசையில், கர்நாடக இசை பாடகி காயத்ரி கிரீஷ் பாட ஒரு கச்சேரியே நடத்தி விட்டார்கள். இது இசை பாடல் வரிசையில் இல்லை என்று எனக்கும் தெரியும். ஆனாலும் பல்வேறு ராகங்களில் சுமார் 70 வெண்பாக்களை சிறப்பாக இசை அமைத்து, அதை வார்த்தை சுத்தமாகப் பாடினார் காயத்ரி கிரீஷ். உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் இவர்கள் இருவருக்கும் தான் இந்த பெருமை எல்லாம் செல்ல வேண்டும். மேடையில் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் இதை எங்கள் அமுதசுரபியில் வெளியிட்டு எங்களால் குறைந்த தொகை தான் கொடுக்க முடியும் என்று சொல்ல, விரும்பி இதை ரமணரின் பிரசாதமாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதையும் "பிரஸ்' சாதம் என்று ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...