இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

கிரேஸி மோகன் ஒரு நகைச்சுவை ஞானி: கமல் இரங்கல்!

திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்பது தான் உண்மை...

News image
Updated On :10 ஜூன் 2019, 10:21 am

எழில்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் (1952 - 2019) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 66.

இன்று காலை 11 மணி அளவில் கிரேஸி மோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.

1952-ல் பிறந்த கிரேஸி மோகன், 1983-ல் பொய்க்கால் குதிரை படத்தின் மூலமாகத் திரையுலகுக்குள் நுழைந்தார். 1989-ல் அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக கமல் - கிரேஸி கூட்டணி இணைந்தது. அதன்பிறகு இந்தக் கூட்டணி மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் எனப் பல படங்களில் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தது.

கிரேஸி மோகனின் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நண்பர் கிரேஸி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

கிரேஸி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்பது தான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர் .

அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன?

மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன்.

அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.