தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் படங்கள் அதற்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் பாண்டிராஜ் படத்துக்கு முக்கியத்துவம்...


சிவகார்த்திகேயன், தற்போது மூன்று படங்களில் நடித்துவருகிறார்.
கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது.
ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் இயக்கங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ், 24 ஏஎம் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, நாச்சியார் படத்தில் நடித்த இவானா போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஹீரோ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அறிவியல் தொடர்பான நவீனக்கதையில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூலை 7 அன்று தொடங்கியது.
இதுதவிர, சிவகார்த்திகேயனின் 17-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - அனிருத்.
இந்நிலையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாண்டிராஜ் படம் தான் அடுத்து வெளிவரவுள்ள சிவகார்த்திகேயன் படமாக இருக்கப் போகிறது. ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் படங்கள் அதற்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் பாண்டிராஜ் படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?
தற்போதைய நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் உள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்திய அவருடைய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு அமையவில்லை. இதனால் பலவிதமான மாற்றங்கள் உருவாகியுள்ளன.
தற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்துக்குத் தற்போது இடைவெளி விடப்பட்டு, பாண்டிராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து இயக்கும்படி ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் முதலில் வெளியான பிறகே ஹீரோ படம் வெளிவரவுள்ளது. இதையடுத்து ரவிக்குமார், விக்னேஷ் சிவன் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...