பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.
2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து ரஜினிக்குப் பிரதமரும் தமிழக முதல்வரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கமல் ஹாசன் ட்விட்டரில் கூறியதாவது:
உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்று அவர் கூறியுள்ளார்.