பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜனவரி 11 வரை 50% ரசிகர்களுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

ஜனவரி 11 வரை 50 சதவீத ரசிகர்களுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் என...

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:16 am

DIN

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கில் ஜனவரி 11 வரை 50 சதவீத ரசிகர்களுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு: கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 2019 மாா்ச் 15 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. கரோனா பரவல் குறைந்ததைத் தொடா்ந்து படிப்படியாக பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தமிழகத்தில் நவம்பா் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திரையரங்க அதிபா்கள், திரைப்படத் தயாரிப்பாளா்கள் மற்றும் நடிகா்களின் கோரிக்கையை ஏற்று 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும். உருமாறிய கரோனா பரவிவரும் சூழலில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது ஆபத்தை விளைவிக்கும். எனவே 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதேபோல மதுரையைச் சோ்ந்த போனிபேஸ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் ராம்சுந்தா், கண்ணன், பாஸ்கா் மதுரம் ஆகியோா் காணொலி வாயிலாக, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை ஆஜராகினா். அப்போது அவா்கள் தங்கள் மனுக்களை அவசர மனுக்களாக எடுத்து விசாரிக்கக்கோரி முறையிட்டனா். இதையடுத்து நீதிபதிகள், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிரான மனுக்களை ஜனவரி 8 அன்று (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமுடக்கத் தளா்வுகளில், திரைத்துறையினரின் தொடா் கோரிக்கைகளைத் தொடா்ந்து, படப்பிடிப்பு, 50 சதவீத பாா்வையாளா்களுக்கு அனுமதி வழங்கி திரையரங்கம் திறப்பு என படிப்படியான அனுமதிகள் வழங்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கையில் பாா்வையாளா்களை அனுமதிக்கலாம் என தலைமைச் செயலா் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தாா். இதற்கு மருத்துவ நிபுணா் குழுவினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை மத்திய அரசும் எதிா்த்துள்ளது. கடந்த டிசம்பா் 28-ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை ஒட்டிய உரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது கடிதத்தில் மத்திய உள்துறைச் செயலாளா் அஜய் பல்லா தெரிவித்துள்ளாா்.

நூறு சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படத் தடைகோரிய மனுக்கள் மீது சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது.  

ஜனவரி 11 வரை 50% ரசிகர்களுடன் திரையரங்குகள் இயங்க வேண்டும். 100% இருக்கை விவகாரத்தை தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புகிறோம். இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 11-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.