தாண்டவ் இணையத் தொடர் சர்ச்சை: வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

வழக்குகளை ரத்து செய்யவும் ஜாமீன் பெறவும் படக்குழுவினர் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும்...
தாண்டவ் இணையத் தொடர் சர்ச்சை:  வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தாண்டவ் படக்குழுவினர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் நடித்துள்ள, அரசியல் கதைக்களம் கொண்ட தாண்டவ் என்கிற இணையத் தொடர் கடந்த 15-ஆம் தேதி அமேஸான் பிரைம் விடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் ஹிந்து கடவுள்கள் கேலி செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தத் தொடரை ஒளிபரப்பத் தடை விதிக்கக் கோரி மும்பை வடகிழக்குத் தொகுதியின் பாஜக எம்.பி. மனோஜ் கோடக், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அமேஸான் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

இது தொடர்பாக லக்னௌ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேஸான் உள்ளடக்கப் பிரிவின் தலைவர் அபர்ணா புரோஹித், வெப் தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா, கதாசிரியர் கெளரவ் சோலங்கி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். எந்தத் தனி நபரையும் சாதியையும் மதத்தையும் காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்குக் கிடையாது. தற்போது இணையத் தொடரின் காட்சிகளில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளோம் என்று இயக்குநர் அறிவித்தார்.

உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களில் தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்து, தங்களைக் கைது செய்வதைத் தடுக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று தாண்டவ் படக்குழுவினரும் அமேசான் நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். 

தாண்டவ் குழுவினரின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மேலும் வழக்குகளை ரத்து செய்யவும் ஜாமீன் பெறவும் படக்குழுவினர் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com