'மெகா ஸ்டார்' - 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் மம்மூட்டி

பாவனைகளைத் தாங்குகிற முகம் இருந்தால் போதும் நடிப்பிற்கு மொழி ஒரு தடையே இல்லை என்கிறார் சாப்ளின்.
'மெகா ஸ்டார்' - 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் மம்மூட்டி
'மெகா ஸ்டார்' - 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் மம்மூட்டி

பாவனைகளைத் தாங்குகிற முகம் இருந்தால் போதும், நடிப்பிற்கு மொழி ஒரு  தடையே இல்லை என்கிறார் சாப்ளின்.

இப்படி உலகம் முழுக்கத் தங்களின் உணர்ச்சிகர நடிப்புகளால் நம்மை  வீழ்த்துவதற்கு  சிலர் இருந்தாலும் மண்ணின் சிந்தனைக்கும், பண்பாட்டிற்கும் அடங்கிய  ஒரு படம் சாதாரண பார்வையாளனுக்கு ஏற்படுத்துகிற தாக்கம் மிக அதிகம். நம்முடைய வாழ்க்கைச் சூழலில் உருவான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரமாக யார் ஏற்று நடிக்கிறார்களோ அவர்களே கொண்டாடப்படுவார்கள். ஆனால், கதாநாயக பிம்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாளைத் தள்ளுவது ? அப்படி ஒரு முழு கலைஞனாக  தன்னை நிரூபித்த நடிகர் மம்மூட்டி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்கிற மம்மூட்டி சிறுவயதில் இருந்தே  நாடங்களில் நடித்த பயிற்சி இருந்ததால் தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகும் போது அவர் சட்டக் கல்லூரி மாணவர். 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று வெளியான 'அனுபவங்கள் பாலிச்சக்கல் ' என்கிற படமே அவருடைய முதல் படம். பின் நடித்து முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் குடும்பத்தின் நெருக்கடி காரணமாக படிப்பை முடித்தார். பின் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய பின்பே மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில்  மலையாள சினிமாவில் பெரிய மாற்றங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தது. தீவிர இலக்கியம் படைத்துக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சினிமாவை நோக்கி வந்தனர். முக்கியமாக எம்.டி.வாசுதேவ நாயர், பத்மராஜன் , கே.ஜி ஜார்ஜ் ,  போன்றவர்கள் மலையாள சினிமாவின் முகத்தை மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில்  அவர்களின் நுட்பமான எழுத்துக்கு மிகச்சரியாக பொருந்திப்போனவர் மம்மூட்டி.

ஆரம்பத்திலிருந்து இப்போது வரை மம்மூட்டி என்கிற நடிகனை எப்படித் தொகுத்துக்கொள்வது என நினைக்கும் போது முகத்தின் நேர் எதிர் உணர்ச்சிகளான  சிரிப்பும் அழுகையுமே தோன்றுகிறது. இயக்குநர் பரதன் இயக்கிய 'அமரன்' என்கிற படத்தின் இறுதிக்காட்சிக்கு  முந்தைய காட்சியில் கள் அருந்தியபடி தன்னுடைய பொலிவான கன்னத்தின் தசைகள் மேலேற  அத்தனை பற்களும் தெரியுமளவு தொடர்ந்து சிரிக்கும் மம்மூட்டியின் முகம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இன்னொன்று மம்மூட்டியின் அழுகை. தான் ஏற்று நிற்கிற கதாபாத்திரத்தின் துயருக்கே  சென்று அதீத நடிப்பு என்கிற பேச்சிற்கு இடமில்லாமல்  கண்ணீர் சிந்துகிற காட்சிகள் உண்மையில் பார்வையாளனை உடைக்கக் கூடியது. அப்படி ஹரிஹரன் இயக்கித்தில் வெளியான 'ஒரு வடக்கன் வீரகதா' திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் யாராலும் வெல்ல முடியாத சந்துவானா மம்மூட்டியிடம் ' இதுவரை உன்னை யாரும் தோற்கடித்ததில்லை நான் வெல்கிறேன் வாலை எடுடா ' எனும் போது ஒரு சின்ன புன்னகையை வெளிக்காட்டி விட்டு ' யார் சொன்னார்கள் ? என்னை யாரும் தோற்கடித்தது இல்லை என்று ? சிறுவயதில் என் அப்பா   இறந்து  என்னைத் தோற்கடித்தார். பெரும் அன்பை வைத்திருத்த என் குரு என்னிடமிருந்து  விலகிச் சென்று தோற்கடித்தார். பணமும் , வசதியும் இல்லாததால் நான் விரும்பியவள் என்னை  விட்டுச்சென்று தோற்கடித்தாள் . இப்படி வாழ்நாள் முழுக்க நான் தோற்றுக்  கொண்டே தான் இருந்தேன் " என்கிற வசனத்தை பேசியபடி  கண்களில் நீர் படர நிற்கும் மம்மூட்டியை பாராட்டாத திரைவிமர்சகர்கள் குறைவு.

கலையை நோக்கி செல்கிறவன் வேறு எதையும் பெரிதாக நினைக்கமாட்டான் என்பதற்கு உதாரணம் அவருடைய படத் தேர்வுகள் தான்.  அப்படி அபாரமான திரைக்கதைகளால் உருவான பல படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்திருக்கிறார் . திடீரென கல்லூரி மாணவராக புரட்சி பேசுவார் , அப்படியே அடுத்த படத்தில் கரைவேட்டி கட்டிக்கொண்டு பெரிய இடத்து பையனாகவும் , ஒன்றும் அறியாத மீனவனாகவும் , மூளை வளர்ச்சியில்லாதவனாகவும் , வாளைத் தூக்கி சுத்தும் வீரனாகவும் மாறி மாறி தன்னை நிரூபித்துக்கொண்டிருந்தார்.

தான் மதிக்கிற கலைக்கு உண்மையாகவும்  நேர்மையாகவும்  இருக்க வேண்டும் என நினைப்பதால் தான் தன்னை விட வயதில் இளையவரான, அப்போது ஒரு படத்தில் கூட வேலை செய்யாத  திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் அவரைச் சந்தித்த போது 'யாருடா நீ' என்றிருக்கிறார். 'எழுத்தாளன் . உங்களுக்காக திரைக்கதை எழுதியிருக்கிறேன்' என்றபடி தன்னுடைய திரைக்கதையை காட்டியிருக்கிறார். வாங்கிப்படித்த மம்மூட்டி தான் அமர்ந்த இருக்கையில் லோகியை அமரச் செய்திருக்கிறார். அப்படி கலைஞர்களை மதித்து  அவர் சென்று  கொண்டிருந்த இடங்கள் ஏராளம்.

தமிழில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் சூர்யா(ரஜினி)  தன்னுடைய சொந்த தம்பி என்கிற விசயத்தை மறைத்து தேவாவுடன் நிற்கிற காட்சியில் 'ஏன்' என்கிற கேள்விக்கு சூர்யா 'நீ என் நண்பன் ' என்னும் போது மம்மூட்டி அழுதுகொண்டே கட்டிப்பிடிக்கும் அந்தக் காட்சியில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் பார்வையாளர்கள் என்றும் நினைத்து உருகும் காட்சி. நீண்ட  இடைவெளிக்குப்  பின் ராமின் இயக்கத்தில் வெளியான 'பேரன்பு' படத்தில்  ஆட்டிசம் பாதித்த தன் மகளின் எதிர்பாலின தேவைகளை அறியவரும் போது ஒரு தகப்பனாக அதை கண்ணீரில் எதிர்கொள்கிற அந்த காட்சிக்காகவே  மம்மூட்டி என்றும் நினைக்கப்படுவார் . 

ஒருவகையில் அவர்  ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் மிகக்குறைவு. அப்படித் தன்னை மெருகேற்றிக்கொண்டு  நடித்ததால் தான் இன்று 50 ஆண்டுகளைக் கடக்கும் நிலையில் ஆறு மொழிகளில்  400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ' ஒரு வடக்கன் வீரகதா' 'தனியாவர்த்தனம் ' ' பழசி ராஜா' 'அமரன்' ' அரணையுட வீடு' ' தளபதி' ' பேரன்பு' போன்ற படங்கள் அவருடைய மிக முக்கியமான படங்கள்.

சிறந்த நடிப்பிற்காக 3 முறை தேசிய விருதும் , 6 முறை மாநில விருதுகளும் , பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கும் மம்மூட்டி 70 வயதை நிறைவு செய்ய இருக்கும் நிலையில் இன்றும் அதே உத்வேகத்துடன் இளமையுடன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யப்படுத்துகிறது. சமீபத்தில் வெளியான 'ஒன்' 'த ப்ரைஸ்ட் ' போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வெற்றிப்படமாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com