மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை கெளரவிக்கும் விதமாக மாநில அரசால் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
புனீத் ராஜ்குமார்
புனீத் ராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை கெளரவிக்கும் விதமாக மாநில அரசால் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை கர்நாடக திரைப்பட வர்த்தகசபை சார்பில் நடிகர் புனீத்ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,  “நடிகர் புனீத்ராஜ்குமாரை கௌரவிப்பதற்கு ஏராளமான ஆலோசனைகள் கூறப்படுகின்றன. நடிகர் புனீத்ராஜ்குமாருக்கு தேசிய விருது அளிப்பது குறித்து எனது அரசு திறந்த மனதுடன் இருக்கிறது. அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தேசிய விருதுக்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பலருடன் விவாதித்த பிறகு, நடிகர் புனீத்ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதை இங்கு அறிவிப்பாக வெளியிடுகிறேன். பெற்றோர்களான‌ நடிகர் ராஜ்குமார், அவரது மனைவி பார்வத்தம்மா ராஜ்குமாரின் நினைவிடங்களை போல நடிகர் புனீத் ராஜ்குமாரின் நினைவிடமும் மேம்படுத்தப்படும்.

இளம் வயதில் இருந்தே ஏராளமான திறமைகளை கொண்டிருந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலேயே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர். கலைத்துறையில் ஏராளமான வெற்றிகளை குவித்திருந்தாலும் குணத்திலும் நடத்தையிலும் அடக்கமானவராக திகழ்ந்தார். அடக்கத்தில் அவரது தந்தை டாக்டர்.ராஜ்குமாருக்கு நிகராக விளங்கினார்.

நடிகர்புனீத் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலத்தையும், இறுதி சடங்கையும் அமைதியான முறையில் நடத்த ஒத்துழைத்த அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் புனீத்ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வரவேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய சித்தராமையா, நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட வேண்டும். அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் புனீத் ராஜ்குமாரின் பெயரில் திரைப்பட நடிப்புக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கர்நாடக அரசை அவரது மூத்த அண்ணன் நடிகர் சிவராஜ்குமார் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவதை வரவேற்றனர்.

'கர்நாடக ரத்னா' விருது பெறும் 10-ஆவது விருதாளர் நடிகர் புனீத் ராஜ்குமார். இந்த விருது நிறுவப்பட்ட 1992-ஆம் ஆண்டில் கவிஞர் குவெம்பூவுடன் இணைந்து இந்த விருதை முதன்முதலாக பெற்றவர் புனீத் ராஜ்குமாரின் தந்தை நடிகர் ராஜ்குமார். இவர்களை தவிர, முன்னாள் முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா(அரசியல்), விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் (அறிவியல்), தேவிபிரசாத் ஷெட்டி(மருத்துவம்), பீம்சென் ஜோஷி(இசை), சிவக்குமார சுவாமிகள்(சமூகசேவை), ஜே.ஜாவரேகௌடா(கல்வி, இலக்கியம்) ஆகியோர் இதற்கு முன்பு 'கர்நாடக ரத்னா' விருது பெற்றிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com