நயன்தாரா எனும் புதுவரலாறு!

கதாநாயகிகளை மையமாகக் கொண்டு எத்தனை படங்கள் வந்தாலும்.. விதை நயன்தாரா போட்டது!
நயன்தாரா எனும் புதுவரலாறு!


இன்றைக்கு கதாநாயகிகளை மையமாகக் கொண்டு வரும் படங்களுக்கு சந்தை மதிப்பு இருக்கிறதென்றால், அதற்கு விதை நயன்தாரா போட்டது. மாயா திரைப்படத்திலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கிய அவர், டோரா, அறம், கோலமாவு கோகிலா என பெரும் வெற்றிநடையைப் போட்டார்.

திரைப்பயணத்தில் இப்படியொரு மாற்றத்தை மேற்கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்த நயன்தாரா, கதைத் தேர்வுகளில் கவனம் காட்டினார். நடிகர்கள் அடுத்தகட்டத்துக்கு உயர காதல், நகைச்சுவைப் படங்களைக் காட்டிலும் ஆக்ஷன் படங்களையும், அரசியல் படங்களையும் தேர்வு செய்வர்.

இதே பாணியைக் கையிலெடுக்கிறார் நயன்தாரா. வெறும் த்ரில்லர் படங்களை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என எண்ணி, அழுத்தமான கதைகள், ஆக்ஷன் கதைகள் என களமிறங்கினார்.

இப்படி தேர்வு செய்த ஒரு கதைதான் கோபி நயினாரின் அறம்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக மனதில் நிற்கக்கூடிய, அதேநேரத்தில் தனது பயணத்துக்கும் பொருத்தமாக இருக்கக்கூடிய மதிவதனி பாத்திரத்தை வலிமையுடன் ஏற்கிறார். இதுவரை இருந்த அனைத்து டெம்ப்ளேட்டுகளையும் உடைக்கிறார். 

படத்தில் பாடல்கள் இல்லை (கதையோட்டத்தோடு பின்னணியில் வரும் பாடல்கள் தவிர). படம் முழுக்க வெறும் இரண்டே காஸ்ட்யூம்கள்தான். அதுவும் சேலைதான்.

படம் என்ன பேசுகிறது?

படத் தலைப்பு, டீசர், டிரெய்லர்கள் எல்லாம் படத்தின் மீது ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

படம் வெளியான 2017-ம் ஆண்டு என்பது விவசாயிகள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை உள்ளிட்டவை சமூக ஊடகங்களில் பெரும் கவனங்களை ஈர்த்த சூழல். இயக்குநர் கோபி நயினார் கெட்டிக்காரர். இதைப் பயன்படுத்திக்கொண்டு, படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் படம் பேசக்கூடிய கதைக்களத்தை துளியளவுகூட கசியவிடவில்லை.

அறம் தண்ணீர் பிரச்னையைப் பேசப் போகிறது.. அறம் விவசாயிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தப்போகிறது.. என்ற வகையில்தான் டீசர், டிரெய்லர்கள் எடிட் செய்யப்பட்டிருந்தன.

தண்ணீர் பிரச்னைதான்போல என்பதை உறுதி செய்யும் வகையில் படத்தின் முதல் காட்சியும் தண்ணீரிலிருந்தே தொடங்கும். ஆனால், கதையின்படி காணாமல்போன குழந்தையைத் தேடும்போது, தாயைப் பின்தொடர்ந்து வரும் கேமிரா, அப்படியே ஆழ்துளைக் கிணற்றுக்குள் வேகமெடுத்து இறங்கும்.

முன்பே சொன்னதுபோல பட விளம்பரங்களிலும் சரி, படத்தின் கதைக்களத்துக்கு அழைத்துச் சென்ற பயணத்திலும் சரி.. இது ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் பிரச்னையைப் பற்றிய படம் என்பதை மிகக் கவனமாக சொல்லாமலே அழைத்து வந்தார் கோபி நயினார். இதன் பயனை, கிணற்றுக்குள் இறங்கும் அந்த ஒற்றை கேமிரா ஷாட்டில் உணரலாம்.

குழந்தை விழுந்த பதற்றம் அந்த ஒரு ஷாட்டிலேயே நமக்கு தொற்றிவிடும்.. அதை முன்பே எங்கேனும் சொல்லியிருந்தால், நாம் அதை எதிர்பார்த்திருப்போம், பதற்றம் நமக்கு கடத்தப்பட்டிருக்காது. அப்போது தொடங்கிய பதற்றம்தான்.. காப்பாற்றுவதற்கு தொழில்நுட்பங்களே கிடையாது.. நடைமுறையில் குழந்தையைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை.. 36 அடியிலிருந்து 96 அடிக்கு குழந்தை சரிவது என இறுதியில் குழந்தை மீட்கப்படும் வரை நம்முள் பதற்ற உணர்வு நம்முள் நீடித்துக்கொண்டே இருக்கும்..

இதுவே படத்திற்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. 

இந்தக் கதைக் களத்தை நம்பி தேர்வு செய்ததே நயன்தாராவுக்கு முதல் பாராட்டாக அமைந்தது. பிறகு, நடிப்புக்கு. குழந்தையைக் காப்பாற்ற வரும் ஐஏஎஸ் அதிகாரியாக அவரது நடிப்பில் முந்தையப் படங்களுடன் ஒப்பிடுகையில் பெரும் முதிர்ச்சி தென்பட்டது. 

சர்ச்சைகள் மட்டுமே நயன்தாரா கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த நேரத்தில், இந்த நடிப்பும், கதைத் தேர்வும் மதிப்பையும் மரியாதையையும் தட்ட வைத்தது.

படத்தின் இறுதியில் குழந்தை மீட்கப்பட்டவுடன் வரும் உணர்ச்சி வெளிப்பாடு மதிவதனியுடையது மட்டுமல்ல. நயன்தாராவினுடையதும்தான்.

குழந்தையை மீட்பதில் மதிவதனி எதிர்கொண்ட சிக்கல்கள்தான், தனிப்பட்ட வாழ்க்கையில் நயன்தாரா எதிர்கொண்ட சர்ச்சைகள். சக்திக்கு அப்பாற்றபட்டு மதிவதனி எடுத்த தைரியமான முடிவுகள்தான், திரைத் துறையில் நயன்தாரா எடுத்த முடிவுகள்.

படத்தில் எடுக்கும் தைரியமான முடிவுகளின் விளைவு, குழந்தை காப்பாற்றப்படுவது. தனித்துப் படம் நடிக்க முன்வந்தாலும், அறம் போன்ற படங்களினுடைய வெற்றியே திரைத் துறையில் நயன்தாரா எடுத்த தைரியமான முடிவுகளின் விளைவு.

கதையில் மக்கள் பக்கம் நின்று, அவர்களது ஆதரவைப் பெற்ற நம்பிக்கையில், ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்து இரண்டாவது இன்னிங்ஸை வலிமையுடன் துவங்குவதில் முடிகிறது மதிவதனியின் கதை.

ஆனால், அறத்தின் வெற்றியில் இருப்பது முடிவல்ல. நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸினுடைய பெரும் தொடக்கம் அது.

இந்தத் தொடக்கத்தின் அடுத்தக் கட்டம்தான் கோலமாவு கோகிலா. தமிழ் சினிமா வரலாற்றில், முன்னணி நடிகர் அல்லாது நடிகையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு முதன்முறையாக அதிகாலை 5 மணி காட்சி கிடைக்கிறது.

இவர் போட்ட 'அற' விதையில்தான் இன்றைக்குப் பல நடிகைகள் தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் பயணத்தைத் தொடங்குகின்றனர். 

நயன்தாரா எனும் புதுவரலாறு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com