83 ஓடிடி விமர்சனம்: சுவாரசியமான நிஜக்கதை

கிட்டத்தட்ட கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அது சரியும் கூட.
83 ஓடிடி விமர்சனம்: சுவாரசியமான நிஜக்கதை

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 83 படம் என்னவிதமான புதுத்தகவலையும் சுவாரசியத்தை அளித்து விடும்? 1983 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டத்தைப் பலமுறை தொலைக்காட்சியிலும் யூடியூபிலும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். பல கதைகள் கேட்டிருக்கிறார்கள். படத்தில் என்ன புதுமை இருந்துவிட முடியும்?

இந்த எண்ணம் படம் பார்க்கத் தொடங்கிய பிறகு அப்படியே மாறிவிடுகிறது. உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு இந்திய அணிக்குப் போட்டி நிர்வாகம் விடுத்த அழைப்பை பிசிசிஐ அலட்சியமாகக் கையாள்வதும் பிசிசிஐயிலேயே இந்திய அணியைக் கேவலமாக எண்ணுவதும் இங்கிலாந்தில் பலரும் இந்திய அணியை அவமானப்படுத்துவதும் என உலகக் கோப்பைப் போட்டிக்குச் செல்லும் முன்பு இந்திய அணி எதிர்கொண்ட மனிதர்கள், சம்பவங்கள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. இப்படி ஆரம்பித்ததா இந்திய அணியின் வெற்றிப் பயணம் என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விடுகின்றன ஆரம்பக் காட்சிகள்.

1983 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கபில் தேவ் எந்தளவுக்கு மிகப் பெரிய காரணமாக இருந்தார் என்பதுதான் படத்தின் மையக் கதை. கிட்டத்தட்ட கபில் தேவ் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அது சரியும் கூட. 1983 உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் கூட கபில் தேவ் மோசமாக விளையாடவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் - கபில் தேவ் தான். 8 ஆட்டங்களில் 303 ரன்கள். பந்துவீச்சில் 12 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி ரேட் - 2.91. அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடமும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 8-ம் இடமும் பிடித்தார். இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது என்கிற ஒன்று வழங்கப்படவில்லை. ஒருவேளை அது இருந்திருந்தால் நிச்சயம் கபில் தேவுக்குத்தான் கிடைத்திருக்கும். அதனால் இந்தப் படத்தில் கபில் தேவை மையப்படுத்தி காட்சிகள் வைக்கப்பட்டிருப்பது அதீதமாகத் தெரியவில்லை. எவ்வளவு உண்மை இவையெல்லாம் என்றுதான் ஒவ்வொரு காட்சியும் எண்ண வைக்கின்றன. 

கபில் தேவின் வாழ்க்கை வழியாக அறிவுரைகள் சொல்லப்படுவது, போட்டியில் இந்திய அணி எதிர்கொண்ட நெருக்கடியான தருணங்களில் அணியினரைத் தெம்பூட்டுவது என கபில் தேவின் மகத்தான பங்களிப்பைத் திரைக்கதையில் சரியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கபிர் கான். கபில் தேவை இன்னும் உயர்வாக எண்ண வைத்துள்ளது படம். கபில் தேவாக நடித்த ரன்வீர் சிங்கும் நம் ஊர் ஸ்ரீகாந்தாக நடித்த ஜீவாவும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து விட்டார்கள். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாத கபில் தேவ் 175 ரன்கள் அடித்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தை கண் முன்னே நிறுத்தி ரகளை செய்திருக்கிறார்கள். திரையரங்கில் இந்தக் காட்சிகளைப் பார்த்திருந்தால் மைதானக் கொண்டாட்டத்தை அனுபவித்திருக்கலாம், படத்துடன் நிஜ கிரிக்கெட் காட்சிகளையும் அவ்வப்போது இணைத்து புல்லரிக்க வைத்துவிட்டார்கள். சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது கட்டாயம் 83-க்குக் கிடைக்கும். சிறந்த படத்தொகுப்புக்கான விருதும்.

இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றி இந்தியாவில் அமைதிச் சூழலை உருவாக்கி மக்களிடையே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியது. சச்சின் போன்ற பலரை ஆர்வத்துடன் கிரிக்கெட் பக்கம் தள்ளியது. உலகக் கோப்பையை இந்திய ரசிகர்கள் தொலைக்காட்சி, வானொலி வர்ணனை வழியாக எப்படியெல்லாம் பார்த்து ரசித்தார்கள் என்பது தத்ரூபமாகக் காட்டப்பட்டுள்ளது. 1983 உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்புடைய எந்த நிகழ்வையும் தவறவிடவில்லை. இவ்வளவு கச்சிதமாகவா ஒரு படத்துக்குத் திரைக்கதை அமைப்பார்கள்! படமும் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது. விளம்பரதாரராக ஏராளமான பெரு நிறுவனங்கள் ஆனால் இந்தப் படம் பிரத்யேகமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கானது. கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கு படமும் பிடிக்க வாய்ப்பில்லை.

விளையாட்டுப் படங்களில் ஒரு ரோதனை, படத்தின் நாயகன் கடைசியில் நினைத்ததைச் சாதிக்கும்போது அவருடைய தந்தையையோ பயிற்சியாளரையோ மைதானத்துக்குள் அனுமதிக்க விட மாட்டார்கள். பரபரப்பை ஏற்படுத்துகிறார்களாம். இந்தப் படத்தின் கடைசியிலும் கபிலின் மனைவியை மைதானத்துக்குள் மீண்டும் அனுமதிக்க மாட்டார்கள். (படத்தில் உள்ள எல்லாச் சம்பவங்களும் உண்மையாக நடந்தவைதான் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.) கவாஸ்கர், ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரங்களுக்கு வேறு நடிகர்களைத் தேர்வு செய்திருக்கலாம். ரிச்சர்ட்ஸாக நடித்தவரிடம் கடைசி வரிசை பேட்டரின் உடல்மொழியே தென்பட்டது. இறுதிச்சுற்றில் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்சை அழகாக ஓடிச்சென்று கபில் பிடிக்கும் காட்சி படத்தில் சரியாக அமையவில்லை. ஆட்டத்தின் காணொளியிலேயே கபிலின் கேட்ச் சரியான கோணத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும். அந்த உணர்வு படக்காட்சியில் கிடைக்கவில்லை. 

படம் பார்க்கும் போது தோன்றியது - கிரிக்கெட் வீரர்களில் பாரத ரத்னா விருது முதலில் கபில் தேவுக்கே வழங்கியிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com