நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக, விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை கோயம்பேடு சாலையில் குவிந்தனர்.
சாலிகிராமத்திலிருந்து 10.30 மணிக்குப் புறப்பட்ட விஜயகாந்த் ஊர்வலம், 1.30 மணிக்குத்தான் தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது. தற்போது தேமுதிக அலுவலகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேட்டில் குவிந்து வருகிறார்கள். இதனால், அப்பகுதியே மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
1980களில், முக்கிய கதாநாயாகர்களின் வரிசையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் விஜயகாந்த். அவரது நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அப்படத்தின் மூலம், கேப்டன் என்ற பட்டத்தை அவரது ரசிகர்கள் சூட்டி மகிழ்ந்தனர். அது முதல் இது வரை கேப்டன் என்ற பட்டப்பெயருக்குச் சொந்தக்காரரானார் விஜயகாந்த்.
திரைத்துறையில் இருக்கும்போதே, அவரது தன்னலமற்ற மக்கள் சேவை, தமிழ் மீதான பற்று, தமிழ்நாட்டின் மீதான பாசம் என அனைத்தும், அவரை அரசியல் பக்கம் கொண்டு சேர்த்தது.
விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கை..
நடிகராக மக்கள் மனங்களில் இடம்பிடித்த விஜயகாந்த், நடிகர் சங்கத் தலைவராக பதவியேற்றபோதுதான், அவரது சிறந்த ஆளுமை வெளிப்பட்டது. நடிகர் சங்கத்துக்கு இருந்த கடனை அடைத்து, தலைநிமிரச் செய்த புகழ் விஜயகாந்த்தையே சாரும்.
தனது ரசிகர்களுக்காக 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தார். திரைத்துரையில் நட்சத்திரமாக மின்னியது போல, அவர் அரசியலிலும் தனக்கென தனி முத்திரைப் பதித்தார். கட்சித் தொடங்கிய சில ஆண்டுகளில், இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளைத் தாண்டி எதிர்க்கட்சி என்ற மிக முக்கிய அந்தஸ்தைப் பெற்றார். 2011 - 2016ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். விருதாச்சலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு முறை எம்எல்ஏ பதவியையும் வகித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு நல்ல நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டதால், ஊழலுக்கு எதிராகவும் ஏழை மக்களுக்காகவும் குரல் கொடுத்ததன் மூலமும் அவரது அரசியல் பயணம் விரைவாகவே வெற்றிப்பாதையை நோக்கிச் சென்றது.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளைப் பெற்றது தேமுதிக. இது 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10.3 சதவீதமாக அதிகரிக்கத் தொடங்கியது. மற்றவர்களைப் போல நிதி திரட்டாமல், சொந்த நிதிச் செலவில் கட்சியை நடத்தியதே விஜயகாந்த்தின் தனிச்சிறப்பாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுகவை விட அதிக இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. 7.9 சதவீத வாக்குகளுடன், தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.
எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்துக்கும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும் பேரவையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இது கட்சிக் கூட்டணியிலும் எதிரொலித்தது.
ஆனால், அதன்பிறகு, தேமுதிகவின் வீழ்ச்சி தொடங்கியது என்றே சொல்ல வேண்டும். அதிமுகவிலிருந்து வெளியேறியது தேமுதிக. படிப்படியாக அடுத்த மக்களவைத் தேர்தல், பேரவைத் தேர்தல்களில் வாக்குகள் குறைந்தன. அதன் தாக்கம் 2019 மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி, 2021 சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் இணைந்தது போன்றவை, தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அரசியலில், விஜயகாந்த் கோலோச்சி வந்த நிலையில், அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல், அரசியல் சரிவுக்குக் காரணமாக அமைந்ததாகவே இது பார்க்கப்பட்டது.
தொடர்ந்து அவரது உடல்நிலை சரிவடைய, அரசியலிலும் தேமுதிகவின் செல்வாக்கும் சரிவைக் கண்டது. அதன் காரணமாகவே, அவரது உடல்நிலையையும் தாண்டி, தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு, அவர் அழைத்துவரப்பட்டார். இது, தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்தான் பார்க்கப்பட்டது.
கடைசியாக.. டிசம்பர் 14..
டிசம்பர் முதல் வாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும், டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தேமுதிக பொதுச் செயலாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவே விஜயகாந்த் பங்கேற்ற கடைசி கூட்டமாக அமைந்திருந்தது.