அண்டை மாநிலமான கேரளத்தில் திரைத்துறையைச் சார்ந்த முன்னணி நடிகர்கள் உள்பட முக்கிய நபர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
நடிகர்கள் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு ஆகிய 4 முக்கிய மலையாள நடிகா்கள் மீது நடிகையொருவா் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான பிருத்விராஜ் கருத்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை(ஆக. 26) செய்தியாளர்களுடன் பேசிய அவர், குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் பிருத்விராஜ்.
நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் செய்தியாளர்களுடன் பேசியதாவது, ஹேமா குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை வெளியிடுவது அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்குவது குறித்து சிந்திக்க இந்த அறிக்கை முக்கியமானது. அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது என்பதை அறிய உன்களைப் போல நானும் காத்திருப்பதாகப் பேசியுள்ளார்.
“குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும். நான் செல்லும் படப்பிடிப்பு தளம் மட்டும் பாதுகாப்பானதா என்பது குறித்த அக்கறை மட்டும் இருந்தால் அது போதாது, ஒட்டுமொத்த திரைத்துறையும் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்வதும் என் கடமை.
இந்த பிரச்னையை சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது. ஹேமா குழுவிடம் முதல் ஆளாக விளக்கமளிக்கச் சென்ற நபர் நான் தான்.”
”விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுந்தண்டனை வழங்க வேண்டும், அப்போதுதான் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், அப்போதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.”
”மலையாள திரைத்துறை கலைஞர்கள் கூட்டமைப்பான ’ஏஎம்எம்ஏ’, பாலியல் புகார்கள் குறித்து நடவடிக்கைளை முறையாக எடுக்கவில்லை. கடும் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.
நான் பணிபுரியும், என்னைச் சார்ந்த படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட இடங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளதை நான் உறுதிசெய்வேன்.”
“நான் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லிவிட்டுக் கடந்து செல்வதுடன், நமது பொறுப்பு ஓய்ந்துவிடக் கூடாது. நீங்களும்(ஊடகங்கள்) பொறுப்பேற்க வேண்டும், தலைப்புச் செய்திகளாகப் பதிவிட்டுக் கடந்து சென்றுவிடுவதுடன் ஊடகங்களின் பொறுப்பு ஓய்ந்து விடக்கூடாது. நீதி கிடைப்பதை உறுதி செய்ய நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்.”
“மலையாள திரையுலகில் அதிகார வர்க்கம் இருப்பதை ‘இல்லை’ என மறுக்க முடியாது. ஆனால், நான் அதுபோன்ற அமைப்பால் அவர்களால் பாதிக்கப்படவில்லை. அதேவேளையில், அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளோரின் குறைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். அத்தகைய அதிகார வர்க்கம் இருக்குமாயின், அவர்களுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.”
“மலையாள திரைத்துறை கலைஞர்கள் கூட்டமைப்பான ’ஏஎம்எம்ஏ’-இன் தலைமைப் பொறுப்பில் பெண்களும் இருக்க வேண்டும். கேரள அரசு சினிமா சார்ந்த நபர்களுக்காக தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டால், அதன்மூலம் திரைத்துறையில் உள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு கிட்டும்.”
இறுதியாக அவர் குறிப்பிடுகையில், ”மலையாள சினிமாவில்தான் இதுபோன்ற தவறு முதன்முதலாக திருத்தப்பட்டுள்ளது என்பது இந்திய சினிமா வரலாற்றில் பதிவாகப் போகிறது. திரைத்துறையில்தான் இது முதன்முதலில் நிகழ்ந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டும்” என்று பேசியுள்ளார் பிருத்விராஜ்.