
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.
தற்போதுஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை சமீபத்தில் அறிவித்தனர்.
இந்நிலையில் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் அந்தமான் சென்ற பூஜா ஹெக்டே ஜூலை முதல் வாரம்வரை அங்கு படப்பிடிப்பு நடத்தவிருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இங்கு அவரது பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாயகியாக நடிக்கும் பூஜா கதையை முன்னகர்த்த மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் இதுவரையில்லாத புதிய தோற்றத்திலும் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.