
தனது அம்மாவின் ரூ. 25,000 கடனை அடைப்பதற்காகதான் முதலில் நடிக்க வந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, 1997ஆம் ஆண்டு நேருக்குநேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது, இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் சூர்யா அளித்த நேர்க்காணல் ஒன்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் நடிக்க வந்ததே, தனது அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ. 25,000 கடனை அடைக்கதான் என்று தெரிவித்துள்ளார்.
நேர்க்காணலில் உரையாடிய நடிகர் சூர்யா, கல்லூரி படிப்புக்கு பிறகான தனது முதல் வேலை குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உரையாடினார்.
அப்போது சூர்யா பேசியதாவது:
“நடிப்பதற்கு முன்னதாக பனியன் நிறுவனம் ஒன்றில் முதலில் 15 நாள்களுக்கு ரூ. 750 ஊதியத்துடன் பயிற்சி பெற்றேன். பிறகு 3 ஆண்டுகளில் மாத ஊதியம் ரூ. 8,000-ஐ எட்டியது.
மேலும், பனியன் நிறுவனத்தில் பெற்ற அனுபவத்தின் மூலம் தனது தந்தையின் முதலீட்டை பயன்படுத்தி சொந்தமாக நிறுவனம் தொடங்கும் திட்டத்தில் இருந்தேன், நடிக்கும் எண்ணம் கற்பனையில்கூட இருந்ததில்லை.
ஆனால், எனது அப்பாவுக்கு தெரியாமல் ரூ. 25,000 கடனாக அம்மா வாங்கிய கடனால் அனைத்தும் மாறியது. எங்களின் வங்கி இருப்பு ஒன்றரை லட்சம் ரூபாய்கூட இல்லை என்று அம்மா குறிப்பிட்டார்.
நடித்ததற்கான சம்பளத்தை பெறுவதற்கு யாருக்கும் எனது அப்பா அழுத்தம் தரவில்லை. அவர்களாக கொடுக்கும் வரை காத்திருந்தார். அதே சமயத்தில், அப்பாவுக்கு பத்து மாதங்களுக்கு மேலாக வேலை இல்லாமல் இருந்தது.
ஒரு நடிகரின் மகனாக எனக்கு பல வாய்ப்புகள் வந்தது. மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகள் அனைத்தையும் மாற்றியது.
அம்மா பெற்ற கடனை அடைப்பதற்காக படத்தில் நடிக்க முன்வந்தேன். கடன் அடைக்கப்பட்டது. எனது சினிமா பயணம் தொடங்கியது, நான் சூர்யா ஆனேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.