நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகா குறித்து பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளன.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மொழி ரசிகர்களிடமும் படத்தைச் சேர்ப்பதுடன் அதிக நேர்காணல்களில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
அப்படி, சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், நெறியாளர், “ஏன் மும்பைக்கு குடியேறிவிட்டீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு சூர்யா, "என் குடும்பத்துடன் நிறைய நேரங்களைச் செலவிட்டதில்லை. குழந்தைகள் விஷயத்திலும் அப்படித்தான். கணவன் மனைவியாக இருந்தாலும், ஜோதிகா எனக்கு உறுதுணையான மிகச்சிறந்த தோழி. வழிகாட்டி. ஜோதிகா 18 வயதில் மும்பையிலிருந்து சென்னைக்கு நடிக்க வந்தவர். சினிமா, என் குடும்பம் என 27 ஆண்டுகள் சென்னை வாழ்க்கைதான். அவருக்கும் தன் பெற்றோருடன் இருக்க வேண்டும் என ஆசை இருக்காதா? ஆண்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ பெண்களுக்கும் அந்த விருப்பங்கள் இருக்கும். இதையெல்லாம் நான் மிக தாமதமாகவே புரிந்துகொண்டேன்.
இதையும் படிக்க: தலைவனே - கங்குவா பாடல் வெளியீடு!
ஜோதிகாவுக்கும் நண்பர்கள், சுயசம்பாத்யம், விடுமுறைகள் உள்பட பல தேவைகள் உண்டு. அதையெல்லாம் ஏன் நிராகரிக்க வேண்டும்? எல்லாமும் நமக்காகவே (ஆண்) இருக்க வேண்டும் என ஏன் நினைக்கிறோம்? அவர்களுக்கென வாழ்க்கையும் சுதந்திரமும் உண்டு. மும்பைக்குக் குடியேறிய பின்பே ஜோதிகாவுக்கு பாலிவுட்டில் ஸ்ரீகாந்த், டப்பா கார்டெல் உள்ளிட்ட கதையம்சமுள்ள படங்கள் கிடைத்தன. நிறைய அறிமுக இயக்குநர்களின் கதைகளைக் கேட்டு அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.
குழந்தைகளின் படிப்புக்குமான நகரமாக இருக்கிறது. நல்லவேளையாக இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மாதத்தில் 10 நாள்களாவது என் குடும்பத்துடன் இருக்க மும்பை வருகிறேன். இங்கு, என் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், நடைப்பயிற்சி செல்வதும், மகனுடன் கூடைப்பந்து விளையாடுவதுமாக இருக்கிறேன்.” எனத் தெரிவித்தார். சூர்யாவின் இந்த பேச்சு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.