பிக்பாஸ் பிரபலமும் சின்னத்திரை நடிகையுமான மைனா நந்தினி, புதிய தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சில்லறை விற்பனை புடவைக் கடையை தொடங்கியிருப்பதாக மைனா நந்தினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி.
விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ், கல்யாணம் முதல் காதல் வரை, வேலைகாரன் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் அழகி, மருதாணி ஆகிய தொடர்களிலும், கலைஞர் தொலைக்காட்சியில் அமுதா ஒரு ஆச்சரியக்குறி என 10க்கும் அதிகமான தொடர்களில் மைனா நந்தினி நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி திரைப்படங்களிலும் மைனா நந்தினி நடித்துவருகிறார். 2009-ல் வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி, வம்சம், நம்ம வீட்டுப் பிள்ளை, சர்தார், விருமன் என பல்வேறு திரைப்படங்களிலும் மைனா நடித்து புகழ் பெற்றுள்ளார். நவம்பர் ஸ்டோரி, சட்னி சாம்பார் என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் மைனா நந்தினி பங்கேற்கிறார்.
சொந்தத் தொழில் தொடங்கும் நடிகைகள்
சின்னத்திரையில் புகழ் பெற்ற மைனா நந்தினி, புதிய தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பொன்னூஞ்சல் சாரீஸ் என்ற பெயரில் புதிய புடவை விற்பனைத் தொழிலைத் தொடங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
புடவைகளை மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை செய்யும் வகையில் இந்தத் தொழிலை ஆரம்பித்துள்ளார்.
புடவை விற்பனைக்கான விளம்பரங்கள் மற்றும் புடவை குறித்த விளக்கங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
நடிகை சைத்ரா ரெட்டி பால் பண்ணை நடத்திவரும் நிலையில், புடவைக் கடையையும் தொடங்கினார். இதேபோன்று நடிகை ஸ்நேகாவும் புடவைக் கடையை நடத்தி வருகிறார்.
அவர்கள் வரிசையில் தற்போது மைனாவும் புடவை விற்பனைத் தொழிலைத் தொடங்கியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.