விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் கைதான மலையாள ராப் பாடகர்! ஏன்?

பிரபல மலையாள ராப் பாடகர் வேடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
மலையாள ராப் பாடகர் வேடன்
மலையாள ராப் பாடகர் வேடன்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

கேரளத்தின் கொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகரான வேடன், ஜாமினில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் தற்போது வனத் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கடந்த சில நாள்களாக கஞ்சா வழக்கில் கைதாகி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல ராப் பாடகரான வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி (வயது 25) என்பவரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று (ஏப்.28) மேற்கொண்ட சோதனையில் 6 கிராம் அளவிலான கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கஞ்சா பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட பாடகர் வேடன் கைது செய்யப்பட்டு பின்னர் நேற்று இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸினால் தற்போது மீண்டும் வனத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராப் பாடகரான வேடன் தனது பாடல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு புலி அல்லது சிறுத்தை போன்ற வனவிலங்கின் பல்-ஐ டாலராகக் கொண்டு நெக்லெஸ் அணிந்துள்ளார்.

இதுகுறித்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் வேடனுடன் பழகிய இலங்கையைச் சேர்ந்த ரெஞ்சித் கும்பிடி என்பவர் தனக்கு அந்த நெக்லஸை பரிசளித்ததாகவும் அது வனவிலங்கின் உண்மையான பல் என்பது தனக்குத் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அவரையும் ரெஞ்சித்தையும் இன்று (ஏப்.29) காலை கைது செய்த அம்மாநில வனத் துறையினர் பெரும்பாவூரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்ட அதிகாரிகள் 2 நாள்கள் அவகாசம் கேட்ட நிலையில் அவரைக் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் ராப் பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் வேடன், எழுதி பாடிய குதந்த்ரம் (மஞ்சுமல் பாய்ஸ்) எனும் பாடல் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களிடையேவும் பிரபலமானது .

சாதிய அடக்குமுறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான தனது பாடல்கள் மூலம் மிகப் பெரியளவிலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வேடன் தற்போது அமலாக்கத்துறை மற்றும் வனத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அடுத்தடுத்து கைதான மலையாளத் திரைப் பிரபலங்கள்! பின்னணியில் யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com