
விஜய் தொலைக்காட்சியின் பொன்னி தொடரில் நடித்துவரும் நாயகி வைஷ்ணவி விபத்தில் சிக்கியுள்ளார்.
கடந்த சில நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் இடம்பெறாத நிலையில், அவர் விபத்திற்குப் பிறகு சிகிச்சைப் பெற்றுவரும் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு தடைகளைத் தாண்டி பயணிப்பதற்கு சினிமாவின் மீதான அர்ப்பணிப்பும் இலக்கும்தான் காரணம் எனப் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த்தை நீண்ட நாள்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு மீண்டும் தொடரில் கவனம் செலுத்தி வந்தார் வைஷ்ணவி. இதனிடையே கடந்த சில நாள்களாக வைஷ்ணவி தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பப்படாமல் கதைக்களம் நகர்ந்துகொண்டிருந்தது.
பொன்னி தொடரில் இருந்து வைஷ்ணவி விலகிவிட்டாரா? என்ற கேள்விகளும் சமூக வலைதளப் பக்கங்களில் எழுந்தன.
இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்தால் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் விடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
அந்த விடியோவில், தனது கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். முழுவதுமான குணமடையாத நிலையில், கையில் குச்சியுடன் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்றுள்ளார்.
சமீப நாள்களாக வைஷ்ணவியின் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் அவரின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வைஷ்ணவி,
''இந்தத் துறையில் (சினிமா) சவால்கள் உங்களை அழுத்தியெடுக்கும். அங்கீகாரத்துக்காக மட்டும் நான் இந்தத் துறையில் இல்லை, என்னுள் இருக்கும் சிறப்பை வெளிக்கொண்டுவரும் சந்தர்ப்பமாகவே ஒவ்வொரு நாளையும் பார்க்கிறேன். திரையில் தெரியும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் திரைக்கு பின்னால் பலமணி நேர முன்னேற்பாடுகளும், அர்ப்பணிப்புகளும் இருக்கும். ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு தொடரும் ஒரு பெரும் பயணத்தின் பலனாகவே இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.