

மங்காத்தா மறுவெளியீட்டால் திரௌபதி - 2 திரைப்படத்துக்கு கவனம் கிடைக்கவில்லை என மோகன். ஜி கூறியுள்ளார்.
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படம் நேற்று (ஜன. 23) திரையரங்குகளில் வெளியானது. வரலாற்று கால கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர், டிரைலரால் படம் பேசப்பட்டதால் உலகளவில் 400க்கும் அதிகமான திரைகளில் இப்படம் வெளியானது.
ஆனால், அன்றைய நாளே நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படமும் மறுவெளியீடானதால், திரௌபதி -2 படத்திற்கு கவனம் கிடைக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில், இயக்குநர் மோகன். ஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திரௌபதி - 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.
மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள். திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களைக் கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் ஜி” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட விடியோவில், “மக்களை மட்டுமே இனி நான் நம்பியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள் தயவுசெய்து படத்தைப் பற்றி பேசி, மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.” எனத் தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.