17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒரு குடும்பமும் ஒரு கொலையும்... பரிமளா அண்ட் கோ - திரை விமர்சனம்!

பரிமளா அண்ட் கோ திரை விமர்சனம்....

News image

Simply

Updated On :6 ஜூன் 2026, 9:33 am IST

பரிமளா அண்ட் கோ - திரை விமர்சனம்

2/5

எஇயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி நடிப்பில் உருவான பரிமளா அண்ட் கோ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்த்து சிக்கனமாக வாழும் நடிகர் ஜெயராம் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழ வேண்டுமென வாழ்ந்து வருகிறார். அப்பாவித்தனமும் நகைச்சுவை முகமும் கொண்ட மனைவியாக ஊர்வசி, சேட்டையான மூத்த மகள் (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி), சாந்தமான இளைய மகள் (அவந்திகா) என மிடில் கிளாஸுக்கு உண்டான பக்குவத்துடன் வாழ்ந்து வர, ரௌடிகள் என்றாலே இந்த பகுதியில்தான் இருப்பார்கள் என தமிழ் சினிமாவின் மாறாத வடசென்னைப் பகுதியைக் காட்டி, அங்கிருக்கும் ரௌடியான நடிகர் சாண்டி, ஜெயராம் மகளைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார். இது தெரிந்தும், சாண்டியை எதிர்க்க முடியாமல் ஜெயராமும் மகள்களும் அதிருப்தியாக இருக்கின்றனர். ஒருநாள் சாண்டி கொல்லப்படுகிறார். ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஜெயராம் குடும்பத்துடன் சாண்டியுடன் தொடர்புடைய மற்ற கதாபாத்திரங்களும் விசாரணைக்குள் வருகின்றனர். யார்தான் அந்தக் கொலையைச் செய்தது? என்கிற கேள்வியை மையமாக வைத்து நகரும் கதைக்கு பரிமளா அண்ட் கோ எனப் பெயரிட்டு இயக்கியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

இயக்குநர் பாண்டிராஜ் திரைப்படங்களில் குடும்ப உணர்வுகளும் அதனைச் சுற்றிய நகைச்சுவை காட்சிகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. சாதாரண உணவு மேஜைக் காட்சியைக் கூட பயன்படுத்தி சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு கொண்டவர். படம் ஆரம்பமாகும்போதே ஜெயராம் குடும்பத்தின் சிக்கன வாழ்க்கை, சிக்கனம் என்றாலே அதனைச் சுற்றிய நகைச்சுவை என ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. கொலை சம்பவத்திற்குப் பின் காவல்துறை விசாரணையில் ஜெயராம், ஊர்வசியைச் சமாளிக்கும்போது சில சிரிப்புச் சத்தங்கள் எழுகின்றன.

ஆனால், பரிமளா அண்ட் கோவில் கிரைம் கதையுடன் டார்க் காமெடிகள் இடம்பெற்றாலும் அவை சோபிக்கவில்லை. ஜெயராம், ஊர்வசி போன்ற பார்த்தாலே நம்மைச் சிரிக்க வைக்கிற திறமையாளர்கள் இருந்தும் கூட பலவீனமான எழுத்தால் இழுவையாகவே படம் செல்கிறது.

Listicle image

சில இடங்களில் ஊர்வசியின் நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைத்தாலும், பல காட்சிகளில் சிரிக்க வேண்டுமா? எனக் கேட்க வைக்கிறது. பாடி சேமிங்கை (தோற்றக் கிண்டல்) நகைச்சுவை என நம்பும் போக்கும் பார்வைகளும் எப்போது மாறும் என்பதும் தெரியவில்லை. யோகி பாபு நகைச்சுவை வசனங்கள் இந்தத் தரத்திலேயே இருக்கின்றன. கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், போதைப்பொருளுக்கு எதிரான கருத்து என எவையும் முழுமை கூடாமல் இருப்பது பெரிய பலவீனம். பாண்டிராஜுக்கும் நயன்தாரா குடும்பத்துக்கும் என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. தலைவன் - தலைவி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவை வைத்து, ‘புரிஞ்சுக்கோங்க.. அவங்க நார்மல் பீபுள் கிடையாது’ என விக்னேஷ் சிவன் - நயன்தாரா குறித்து வைரலான விடியோவை மறு ஆக்கம் செய்தது போல் செய்தார். இப்படத்தில் நயன் மகன்களான உயிர் - உலக்கின் பெயரை யோகி பாபுவுக்கு வைத்து அவரைக் கிண்டல் செய்யும் காட்சிகளையும் வைத்துள்ளார். இதெல்லாம் நகைச்சுவையா?

காமெடியை விடுவோம், கதையென என்ன இருக்கிறது? போகிற போக்கில் முடிச்சுகளை அவிழ்த்தால் அது நல்ல கிரைம் சஸ்பென்ஸ் கதையாக மாறிவிடுமா? மேம்போக்காக எழுத்தப்பட்ட திரைக்கதையில் எந்த பரபரப்பும் இல்லாமல் செல்கிறது. த்ரிஷ்யம் படம் போல் எடுக்க வேண்டுமென நினைத்து அந்தக் சில காட்சிகளை வைத்து அதனை நினைவுப்படுத்துவதுடன் சரி. சில காட்சிகளை எடுப்பதற்கான திட்டமிடலும் நடிகர் ஜெயராமின் மகள்களாக நடித்த சஞ்சனா, அவந்திகாவின் நடிப்பும் நன்றாக இருந்தன. ஆனால், கதையா இது? என்கிற கேள்வியில் அதற்கும் மதிப்பில்லாமல் போய்விடுகிறது. சாதாரண இந்தக் கதைக்கு நடிகர்கள் பட்டாளமே நடித்தும் எந்த வகையிலும் அவை கைகொடுக்காமல் போனது பெரிய ஏமாற்றம். மிஷ்கின், சிங்கம் புலி என காத்திரமான நடிகர்கள் பலர் இருந்தும் மசாலா தூவுவது போல பயன்படுத்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கிய படங்களிலேயே கடைசி இடம் பிடித்த படம் இதுவாகத்தான் இருக்கும்.

movie review of director pandiraj's parimala and co starring by jayaram and urvashi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.