
மண்டாடி - திரை விமர்சனம்
நடிகர் சூரி நடிப்பில் உருவான மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
முக்கடல் சூழந்த நிலமான தமிழகத்தில் வங்கக் கடலையும் அதன் காற்றையும் வாங்கி நிற்கும் முகவைப்பட்டினம் என்கிற ஊரில் கதை நிகழ்கிறது. முதல்காட்சிலேயே அந்த ஊரில் படகுப்போட்டியில் புறக்கணிக்கப்பட்ட முகவை மைந்தன்ஸ் அணியின் கேப்டனான மாரி (நடிகர் மிதுன்) எதிர்தரப்பு அணியான சுனாமி ரைடர்ஸ் கேப்டனை கொல்ல முயற்சிக்கிறார். ஊரே பரபரப்பாக கேப்டனின் அப்பாவான சாட்டைப் புலி (நடிகர் சுஹாஸ்) மாரியைக் கொல்ல ஆள்களை அனுப்புகிறார். தப்பித்துச் செல்லும் மாரி சென்னையில் வசிக்கும் முகவை ஊர்க்காரரான முத்துக்காளியிடம் (நடிகர் சூரி) அடைக்களமாகிறார். ஒருகட்டத்தில் மாரியை எதிர்தரப்பு விடாமல் சுற்ற, 20 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு போன முத்துக்காளி, மாரியுடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். ஊருக்கு வந்ததும் படகுப்போட்டியால்தான் இவ்வளவு பிரச்னைகள் என்பதை அறிந்துகொண்ட சூரி, மாரி சார்ந்திருக்கும் முகவை மைந்தன்ஸ் அணியைப் படகுப்போட்டிக்காக தயார் செய்யும் வேலைகளைச் செய்கிறார். மிகச்சிறந்த படகுப்போட்டி வீரரான சூரி ஏன் ஊரைவிட்டு போனார்? சூரிக்கும் - சுஹாஸுக்கும் இடையே என்ன பிரச்னை? முகவை மைந்தன்ஸ் அணி படகுப்போட்டியில் வென்றதா? என்கிற மீதக்கதையைக் கடலிலும் கரையிலும் சொல்லியிருக்கின்றனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய மண்டாடி திரைப்படம் முக்கியமான முயற்சியாகவே தெரிகிறது. தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையைப் படமாக்குவது என்றாலே அவர்கள் எப்படி கடலுக்குள் செல்கிறார்கள்? விதவிதமான மீன்களை எப்படி பிடிக்கிறார்கள்? கரையில் அவர்களுக்காகக் காத்திருக்கும் காதலியுடன் சேர்ந்தார்களா என்கிற பாணியிலேயே நம்மூர் படங்கள் இருக்கின்றன. ஆனால், மீனவர்களின் வாழ்வியல் திரைப்படமான மண்டாடியில் மீன்பிடிப்பதையே காட்டாமல் அவர்களின் பாரம்பரிய படகுப்போட்டியை முதல்முறையாக முழுநீளத் திரைப்படமாக எடுத்து கவனம் ஈர்க்கிறார் மதிமாறன்.
கடலோடிகளின் வாழ்வியல்களில் ஒன்றான பாய்மரப்படகுப் பந்தயம் என்பது வெறும் கடலுக்குச் சென்று வரும் சாதாரண விளையாட்டு அல்ல; மாறாக, காற்றையும் நீரின் திசையையும் துல்லியமாக உணர்ந்து இயற்கையுடனான அறிவை வளர்ப்பது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல அதனைச் சுற்றி கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் சுவாரஸ்யம் குறைவாகத் தெரிந்தாலும் சூரி ஊருக்குள் வந்ததும் கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. சூரி - சுஹாஸ் இடையே புகைந்துகொண்டிருக்கிற பகை என்ன? எனக் காட்சிக்குக் காட்சி ஆர்வம் மேலோங்குகிறது. இடைவேளை சண்டைக்காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இடைவேளைக்குப் பின் பிளாஷ்பேக் காட்சிகளில் சத்யராஜ் கதாபாத்திரம் யார்? அவருடனிருந்த சூரியும் சுஹாஸும் ஏன் எதிரிகளாகின்றனர் என்பதை விளக்கமாகச் சொல்லியிருக்கின்றனர். ரசிக்கும்படி இருந்தாலும், அக்கூடுதல் காட்சிகளால் கிளைமேக்ஸ் படகுப்போட்டியின் மீதான அழுத்தம் குறைகிறது.

வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பந்தயம் என்பது அறிவு போன்ற கவனிக்கத்த வசனங்கள் இருந்தாலும் ராமநாதபுரத்தில்தான் கதை நடக்கிறது என்பதை நம்ப முடியாத அளவிற்கு வட்டார மொழிகளுக்கான வசனங்கள் குறைவாக இருக்கின்றன. மேலும், வழக்கமான நட்பு, காதல், துரோக வசனங்களே இதிலும் இடம்பெற்றுள்ளன. இரு நண்பர்கள் பகையாளியாக மாறுவதைப் பல திரைப்படங்களில் விதவிதமாக எடுத்துவிட்டதால் இப்படத்தின் சில காட்சிகள், ’அந்தப்படம் மாதிரி இருக்கே’ என எண்ண வைக்கிறது. முக்கியமாக, கோர்வையில்லாமல் படத்தின் ஆரம்பத்தின் சில காட்சிகளுக்குப் பின் 20 ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுச் சென்ற நாயகன் சூரி திடீரென ஊருக்குள் வருவது நம்பகத்தன்மைக்கு எதிராக அமைந்துவிடுகிறது. ஏன் ஊரைவிட்டுச் சென்றார் என்பதற்குப் பின்பான காரணத்தில் இன்னும் வலுவைச் சேர்த்திருக்கலாம்.
கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களை எழுதிய விதங்கள் என திரைப்படமாக ஆங்காங்கே குறைகள் தென்பட்டபடியே இருக்கின்றன. ஆனால், அக்குறைகளையெல்லாம் மிஞ்சும்படியாக கடலிலேயே எடுக்கப்பட்ட படகுப்போட்டி காட்சிகள் ஆச்சரியப்படுத்துகின்றன. தமிழ் சினிமாவில் இதற்கு முன் கடலையும் படகைச் செலுத்தும் காட்சிகளையும் இவ்வளவு எதார்த்தமாக யாரும் திரைக்குக் கொண்டு வரவில்லை. மண்டாடி அதில் முன்னோடி திரைப்படமாக இருக்கும். இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் படகுப்போட்டிகள் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர், எடிட்டர் பிரதீப் ஈ ராகவ், சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் என மூவரும் போட்டிபோட்டு தங்களின் திறமையைக் காட்டி மிகச்சிறந்த காட்சி அனுபவத்தைக் வழங்கியுள்ளனர்.
நடிகர் சூரி நன்றாக நடிப்பில் மெறுமேறிவிட்டார். மண்டாடியில் கூடுதலாக உடல் உழைப்பையும் செலுத்தி படகுப்போட்டிக்கான காட்சிகளில் ஆச்சரியப்படுத்துகிறார். கடலிலேயே எடுக்கப்பட்ட காட்சிகளில் எந்தத் தடுமாற்றமும் இல்லாத மீனவராகவே சூரி திரையில் தெரிந்தது அவரது நடித்திறனுக்கு இன்னும் கதைகள் தேவை என்பதையே காட்டுகின்றன. காதல் மற்றும் சண்டைக்காட்சிகளிலும் புதிய சூரி தெரிகிறார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோவாக எல்லா தகுதிகளும் இருக்கிறது.

நடிகர் சுஹாஸ் தெலுங்கில் பிரபல நடிகராக இருந்தாலும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். சூரிக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் அவருக்கான காட்சிகளும் பலமாக எழுதப்பட்டுள்ளன. சுனாமி ரைடர்ஸ் அணியை வழிநடத்தும் பயிற்சியாளராக, அதே ஊரில் பெரிய செல்வாக்குடன் இருக்கும் முக்கிய புள்ளியாகவும் இருக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளுக்கும் தற்போதைய காட்சிகளுக்கும் சுஹாஸ் நல்ல நடிப்பு வித்தியாசத்தைக் காட்டியிருப்பது பலம். ஆனால், தமிழில் கனமான குரலை அவருக்கு டப்பிங் குரலாக வைத்துள்ளனர். சில காட்சிகளில் அது கைகொடுத்தாலும் சில காட்சிகளில் விலகலையும் கொடுக்கிறது.
நடிகர் சத்யராஜ் இடைவேளையில் அறிமுகமாகும் காட்சிக்கு விசில் சத்தம் கேட்கிறது. அந்த அளவு அவருக்கான கதாபாத்திரம் வலுவாக எழுதப்பட்டிருக்கிறது. கடல் மேல் இருக்க வேண்டிய மரியாதையும் நம்பிக்கையையும் மண்டாடியாக அவர் சொல்லும் வசனங்கள் கவனிக்க வேண்டியவை. நடிகை மகிமா நம்பியார் உணர்வுப்பூர்வமான நடிப்பைக் கச்சிதமாகக் கொடுத்துள்ளார். அழுதுகொண்டே சூரியைத் திட்டும் காட்சியில் கவனிக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர், எடிட்டர் பிரதீப் ஈ ராகவ், சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் என தொழில்நுட்ப கலைஞர்கள் அசத்தலான உழைப்பைக் கொடுத்திருக்கின்றனர். கடலுக்குள் படகுப்போட்டியை கழுகுப்பார்வையில் படமாக்கியது; படகில் இருப்பவர்களின் உடல்மொழியை விதவிதமான கோணத்தில் காட்டியது என ஒளிப்பதிவாளர் அபாரமான பங்களிப்பைச் செய்திருக்கிறார். படகுக்காட்சிகளை எடுத்ததற்கும் அதனைச் சரியாக எடிட் செய்ததற்குமே எஸ். ஆர். கதிர் மற்றும் பிரதீப் ராகவுக்கு விருதுகள் வழங்கலாம். இப்படகுக்காட்சிகளாலேயே மண்டாடி அதிகம் பேசப்படும்.
ராமநாதபுரம் மீனவர்களின் பாரம்பரிய கடலோடி விளையாட்டான பாய்மரப்படகு போட்டி பிற்காலத்தில் ஃபைபர் படகுப் போட்டியாக மாறியதால் மரப்படகுகளுக்கான தொழிலில் ஏற்பட்ட மாற்றங்கள்; அதன்பின் உள்ள நுணுக்கமான வியாபார நோக்கங்கள் என முழுமையான கதையைச் சில குறைகளுடன் சொன்னாலும் மண்டாடி கவனிக்க வேண்டிய, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய கதையாகவே திரைக்கு வந்திருக்கிறது!
The movie Mandaadi, starring actor Soori, has been released in theaters today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




