கமலைக் காப்பாற்றவா, விக்ரமில் மாஸ் ஹீரோக்கள்?

கமல்ஹாசன் இருந்ததால் ஒப்புக்கொண்டார். அதே இடத்தில் விஜய் அல்லது அஜித் இருந்தால் சூர்யா நடித்திருப்பாரா என்பதும்  ‘அவர்களால்’ நடிக்க வைக்கப்பட்டிருப்பாரா என்பதையும்...
கமலைக் காப்பாற்றவா, விக்ரமில் மாஸ் ஹீரோக்கள்?

                                                                                                                       
எந்த மொழி சினிமாவிலும் பெரும்பாலும் நாயகனின் தோற்றத்திற்கும் புகழிற்கும் சற்று குறைவான ஆள்களையே வில்லனாக நடிக்க வைப்பது வழக்கம்.(ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு)

ஆனால், சமீப காலமாக உலகளவில் இதன் போக்கு மெல்ல மாற்றம் அடைந்து வருகிறது. நாயகனை விட வில்லனையே பெரிதாகக் கட்டமைப்பதும், அவனுக்கான நியாயத்தை உருவாக்கும் படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. 

நாயகனே வென்றாலும், சிலர் வில்லன் சமூகத்தால் சீரழிந்தவன் என்கிற கருத்துடன் ஆதரவுகளை வழங்குவதைப் பார்க்க முடிகிறது.

இதற்கான காரணம், நம்முடைய ரசனையாக இருந்தாலும் எதிர் கதாப்பாத்திரத்தைப் போற்றுவது ஒருவகையான மனநிலை மாற்றம் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

உலக சினிமாவிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம்  ‘மின்னல் முரளி’. உள்ளூர் சூப்பர் ஹீரோவான டோவினோ தாமஸ், மக்களைக் காப்பாற்றும் கதையாக இருந்தாலும் நீண்ட நாள்களாக அந்தப்படத்தைப் பற்றிய கருத்துக்களில் அதிகமும் வில்லனான குரு சோமசுந்தரம் இடம்பெற்றிருந்ததுதான் ஆச்சரியம். மேலே சொன்ன ‘சமூகத்தால் சீரழிந்தவன்’ என்கிற ஒற்றைப் புள்ளியைப் பிடித்து படத்தின் உண்மையான நாயகன் இவன்தான் என்கிற முடிவுக்கு பலரும் வந்திருந்தனர்.

அதே பாணியில் இல்லாமல் சற்று விலகிய வில்லன்களின் பட்டாளமாக கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என ரசிகர்களின் நாடியை துடிக்க வைக்கும் அளவிற்கு ‘விக்ரம்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்தனை நாயகர்கள் நடித்திருப்பது நல்ல முயற்சியாக இருந்தாலும் இது மாற்றத்திற்கான திரைப்படமா அல்லது வெறும் வியாபார தந்திரம்தானா என்கிற கேள்வியும் எழுகிறது.

சமீபத்தில் பேட்டியில் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், ‘விக்ரம் ஒரு முயற்சி. எம்ஜிஆர் - சிவாஜி, நான் - ரஜினி எல்லாரும் இணைந்து நடித்திருக்கிறோம். மீண்டும் அடுத்த தலைமுறையில் அந்த சூழல் உருவாக வேண்டும்’ என்றதுடன் திரைப்படம் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியபோது ‘படப்பிடிப்பின்போது எடிட் செய்யப்படும் காட்சிகளை கமல் சார் பார்க்கவில்லை’ என்றார்.

உலக சினிமாவை அறிந்தவர், உள்ளூர் சினிமாவின் மொழியை மாற்றியவர், தமிழ் திரை உலகத்திற்கு பெரிய பங்களிப்பைச் செய்தவர் ஏன் நீண்ட நாள்களுக்குப் பின் தான் நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகளை பார்க்க மறுத்தார்? இத்தனை நாயகர்களை வைத்து உருவான படத்தில் ஹீரோவான கமலுக்கு மிகக்குறைந்த காட்சிகளே இருந்ததில் விக்ரம் முழுக்க வெறும் வியாபாரத்தைச் சார்ந்தே எடுக்கப்பட்ட திரைப்படமா எனத் தோன்ற வைக்கிறது.

கமல் என்றாலே உருவாகும் புதிய திரை அனுபவத்திற்கான ஆவல் எதுவும் இல்லாமல் விக்ரம் உருவாகியிருப்பது ஒருவகையில் அவருடைய தீவிர ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான்.

அதே நேரம், தன்னுடைய பிம்பத்தை பெரிதுபடுத்தாமல் மற்ற இளம் நடிகர்களுக்கு அதிகமான இடத்தைக் கொடுத்தது நல்ல முன்னெடுப்பு.

 ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில்  ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் கூட்டணி கொடுத்த பெரிய வெற்றியை தமிழ் சினிமாவிலும் முயன்று பார்க்கலாம் என்பதில் விக்ரம் ஒரு ‘முன்மாதிரியான’ பணியைச் செய்திருக்கிறது. அதற்கு காரணம் விஜய் சேதுபதியோ,  ஃப்ஹத் ஃபாசிலோ அல்ல. சூர்யா தான். இவர்களை ஒப்பிடும்போது கமலைவிட மார்க்கெட் உள்ளவர் சூர்யா.

கொடூரமான வில்லனாக அவர் நடிப்பதற்கு முழுக்க கதைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், வெளியான படத்தில் அப்படியான எந்த சிறப்பம்சங்களும் இல்லை. எளிதாக ஊகிக்கக் கூடிய காட்சிகள். 

அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு நடிப்பதற்கு கமல்ஹாசன் இருந்ததால் ஒப்புக்கொண்டார். அதே இடத்தில் விஜய் அல்லது அஜித் இருந்தால் சூர்யா நடித்திருப்பாரா என்பதும்  ‘அவர்களால்’ நடிக்க வைக்கப்பட்டிருப்பாரா என்பதையும் ஒருவேளை விக்ரமின் வெற்றி தீர்மானிக்கலாம்.

அந்த வேலையை இப்படம் செய்தால் நிச்சயம் பாராட்டுக்கள். மாற்றம் நிகழுமா இல்லை இதுவும் வழக்கமான வியாபாரம்தானா என்பதை வருங்காலங்களில் பார்க்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com