கமல்... சிறுமியைச் சிரிக்க வைப்பதெல்லாம் சரி தான், கூடவே பிக்பாஸ் தவறுகளையும் போல்டாக தட்டிக் கேட்டாலன்றோ தலைவர் ஆவார்!

பிக்பாஸ் என்பது கமலுக்கு அவரது அரசியல்வாதி எனும் புது அவதாரத்துக்கான எளிமையான விளம்பர கார்டாக இருக்கலாம். அதையும் நான் சொல்லவில்லை, அவரே தான் சொல்லி இருக்கிறார்
கமல்... சிறுமியைச் சிரிக்க வைப்பதெல்லாம் சரி தான், கூடவே பிக்பாஸ் தவறுகளையும் போல்டாக தட்டிக் கேட்டாலன்றோ தலைவர் ஆவார்!

கமல் சமீபத்தில் திருப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரைக் காணத் திரண்ட மக்கள் கூட்டத்தில் தன் தாயுடன் இருந்த சிறுமி ஒருவர்... கமலைப் பார்த்து பிக்பாஸ், பிக்பாஸ் என்று கத்திக் கொண்டே அவரது காரை நோக்கி விரைந்துள்ளார். சிறுமியின் தாய், சிறுமியைத் தூக்கிக் கொண்டு கமல் சென்ற காரின் பின்னே ஓடி வந்திருக்கிறார். அவர்களது நோக்கம் கமலைப் பார்ப்பது தான். இவர்களை கமல் கவனிக்கவில்லை என்றதும் சிறுமி அழத்துவங்கி விட்டார். விரைந்து கொண்டிருந்த காரில் இருந்து இந்தக் காட்சியைக் கண்ட கமல், தனது காரை நிறுத்தி அழுத சிறுமியை அருகில் வரச் செய்து, அவரை சமாதானப் படுத்தி, இப்படியெல்லாம் காரின் பின்னால் ஓடி வரக்கூடாது என்று அறிவுரை சொல்லியதோடு, காரின் ஜன்னல் கதவு சாத்தப் பட்டிருந்ததால், சிறுமி அழைத்ததைத் தன்னால் கேட்க முடியவில்லை என்றும், இதற்காகவெல்லாம் அழக்கூடாது, உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும், இப்போது நீ சிரிக்க வேண்டும். என்றும் அச்சிறுமியைச் சமாதானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்.

இந்தக் காட்சியை காணொளியாக்கி புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.

கமல் சிறுமியை சமாதானப் படுத்திய காணொளி இணைப்பு...

இச்சம்பவத்தில் சிறுமியின் தாயை நினைத்தால் சற்று வருத்தமாக இருக்கிறது. சிறுமி  'பிக்பாஸ்' என்று தான் கமலை அடையாளம் கண்டிருக்கிறார். அப்படியானால் பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த அளவிற்கு தமிழக இல்லங்கள் தோறும் சிறுவர், சிறுமியர் ஏன் குழந்தைகள் உள்ளங்கள் தோறும் கூட எப்படி ஊடுருவியிருக்கிறது என்று பாருங்கள்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 1 ஐ கலாச்சாரக் சீர்கேடு என்று எதிர்த்தவர்கள் அனேகம் பேர். ஆயினும் நிகழ்ச்சி படு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி டி ஆர் பியில் ஹிட் அடித்து இறுதிச் சுற்று அன்று வெற்றியாளராகப் பல லட்சக்கணக்கான பிக்பாஸ் ரசிகர்களின் ஏமாற்றத்தை சம்பாதித்துக் கொண்டு நிறைவடைந்தது. சீசன் 1 முடிவடைந்து பிக் பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வரும் இன்றைய தேதிக்கு அது வெற்றிகரமான ரியாலிட்டி ஷோவாக இருக்கலாம். ஆனால், அதனால் நம் தமிழ் சமூகத்துக்கு கிடைத்த லாபமென்ன? ஒரே ஒரு பாஸிட்டிவ் விஷயத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம். வெறும் பொழுது போக்கு அம்சங்களை மட்டுமே கொண்ட முற்றிலும் மனச்சிதைவைத் தூண்டக் கூடிய விதத்திலான இந்த நிகழ்ச்சியை நமது வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கண்டு களித்துக் கொண்டு கமலைப் பார்த்தால் பிக் பாஸ், பிக்பாஸ் என்று தங்கள் உயிரைக் கூட மதியாமல் விரைந்து கொண்டிருக்கும் காரின் பின்னால் ஓடத் தூண்டுதல் பெற்றவர்களாகவும் மாற்றி இருப்பதைத் தவிர இந்த நிகழ்ச்சி எதைச் சாதித்திருக்கிறது. 

இந்த விடியோவில் கமல் அந்தச் சிறுமியின் தாயாரைக் கண்டித்தது மட்டுமே சற்று ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

பிக்பாஸ் என்பது கமலுக்கு அவரது அரசியல்வாதி எனும் புது அவதாரத்துக்கான எளிமையான விளம்பர கார்டாக இருக்கலாம். அதையும் நான் சொல்லவில்லை, அவரே தான் சொல்லி இருக்கிறார். தான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸில் இணைந்த பிறகு தான் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் பேசும் அத்தனை வீடுகளின் வரவேற்பறை வரை செல்லும் அளவுக்கு மக்களிடையே தொடர்ச்சியான நேரடி பரிச்சயம் தனக்குக் கிடைத்ததாக அவரே சொன்னது தான்.

அந்த நேரடி பரிச்சயத்தை கமல் போன்ற அதிபுத்திசாலிகள் இன்னும் கொஞ்சம் போல்டாகப் பயன்படுத்தலாமே! தான் நினைப்பதை பிக்பாஸில் செயல்படுத்த முடியவில்லை என்பது போல அல்லவா இருக்கிறது சில சமயங்களில் கமலின் பிக்பாஸ் உரையாடல்கள். 

நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு அதன் வியாபார வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்கலாம். ஆனால், கமலுக்கு அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்குப்  பின்னால் இன்றும் என்றும் அவரது செயல்களில் நியாயம் காணும், நியாயம் கற்பிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தரக்கூடிய பலமெல்லாம் வீண் தானா?

பிக்பாஸ் பிழைகளைக் கமல் தட்டிக் கேட்கக் கூடாதா?

பிக்பாஸைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கே தெரியும் அதில் என்னென்ன விதமான பிழைகள் தொடர்ந்து திட்டமிட்டு வேண்டுமென்றே மக்கள் பார்வைக்கு முன் வைக்கப்படுகிறது என்று. இது மக்களிடையே என்ன விதமான தாக்கங்களை வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். பிக்பாஸ் பொறுப்பேற்பாரா அத்தனைக்கும்?!

இன்று ஒரு அறியாச் சிறுமியை நடிகரின் காரின் பின்னால் ஓட வைத்திருக்கிறீர்கள். அவர் வெறும் நடிகராக மட்டுமே இல்லாமல் சற்று சமூக அக்கறையும் இருக்கப் போய் காரை நிறுத்தி புத்தி சொல்லிச் சென்றார். ஆயினும் நம் மக்கள் திருந்தி விடப் போகிறார்களா? அவர்களை மூளைச் சலவை செய்யத்தான் பிக் பாஸ் மாதிரியான வீணாய்ப்போன ரியாலிட்டி ஷோக்கள் நிறைய இருக்கின்றனவே நமது தொலைக்காட்சிகள் தோறும்.

பிக்பாஸில் சமூக அக்கறை இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று யாரேனும் கேட்டீர்கள் என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விஷயமுண்டு.  நாட்டில் குற்றவாளிகளை உருவாக்குவதும், அவர்களது துருப்பிடித்த சிந்தனைகளுக்குத் தீனியிட்டு வளர்ப்பதும் இப்படிப் பட்ட சமூக அக்கறையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான். நம் வீட்டில் பாதிப்பு நிகழ்ந்த பின் தான் நாம் பொங்கியெழ வேண்டும் என்பதில்லை. வரும் முன் காக்கவும் பொங்கி எழலாம் தவறில்லை.

Image courtesy: Puthiyathalaimurai TV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com