டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்படுமா?

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என பலராலும் போற்றப்படுபவை அரசுக்குச் சொந்தமான இந்திய பொதுத்துறை நிறுவனங்கள். ஆனால் அந்நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் அந்நிறுவனங்களை பலவீனப்படுத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:57 pm

வி.தேவதாசன்

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என பலராலும் போற்றப்படுபவை அரசுக்குச் சொந்தமான இந்திய பொதுத்துறை நிறுவனங்கள். ஆனால் அந்நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் அந்நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

  ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதுவும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அத்தகைய அணுகுமுறையே இன்றைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது.

  இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதும் தனியாரைவிட, பொதுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். 1967-ல் இந்திரா காந்தி மேற்கொண்ட வங்கிகளை தேசியமயமாக்கும் நடவடிக்கையால்தான் இன்றைக்கு பல இந்திய பொதுத்துறை நிதி நிறுவனங்கள் இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளன.

  கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையும், கடும் நிதி நெருக்கடியும் காணப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இதனால் கடும் பாதிப்புகளை அடைந்தன. ஆனால் இவை இந்தியாவைப் பெருமளவில் பாதிக்கவில்லை.

  உலக நிதி நெருக்கடி இந்தியாவைப் பாதிக்காததற்கு காரணம், இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் வலுவாக இருப்பதால்தான் என பிரதமர் மன்மோகன் சிங்கும், முந்தைய நிதியமைச்சர் ப. சிதம்பரமும் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர்.

  ஆனால் இதற்கெல்லாம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெருமை கொள்ள முடியாது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்காமல் தாங்கள் நான்கரை ஆண்டு காலம் தடுத்து நிறுத்தியதால்தான், இந்தியப் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது என இடதுசாரி கட்சிகள் கூறின.

  எது எப்படியோ, நமது வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிதி நிறுவனங்களும், பிற பொதுத்துறை நிறுவனங்களும் வலிமையாக விளங்கியதால்தான் உலக நெருக்கடி நம்மைப் பாதிக்கவில்லை என்பது மட்டும் உண்மை.

  இந்தியாவில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் 1990-ல் தொடங்கின. புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அதன் பின்னர் தனியார் துறை வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் புதிய முதலீடு எதுவும் இன்றி அரசாலேயே புறக்கணிக்கப்பட்டன.

  இதனால் கடந்த சுமார் 20 ஆண்டுகளில் நாட்டின் சராசரி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சார்ந்துள்ள வேளாண்மைத் துறை வளர்ச்சி என்பது பின்னோக்கிச் சென்றுள்ளது. நெருக்கடிகள் அதிகமானதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

  குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் உலகப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தது. அதே நேரத்தில் ஒரு நாளைக்கு ரூ.20 கூட வருமானம் ஈட்ட இயலாத நிலையில் 70 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தள்ளப்பட்டனர்.   ஆனால் இவ்வளவையும் மீறி எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய பொதுத்துறை நிதி நிறுவனங்கள் உலகிலேயே மிகவும் வலிமையானவையாகவும், அதிக லாபம் ஈட்டக் கூடியவையாகவும் திகழ்கின்றன.

  மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம், பி.எஸ்.என்.எல்., ஓ.என்.ஜி.சி. போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களும் இவ்வாறு வெற்றிகரமாக, அதிக லாபத்துடன் இயங்கி வருகின்றன.

  ஆனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு இந்நிறுவனங்களின் 51 சதவீதப் பங்குகள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் போதுமெனக் கருதுகிறது. பங்கு விற்பனை மூலம் ரூ. 80 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

  தனியார் முதலாளிகளோ, பொதுத்துறை பங்கு விற்பனையை விரைவுபடுத்தினால் அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்கும் எனக் கூறி, மத்திய அரசை அவசரப்படுத்துகின்றனர்.

  கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தது பொதுத்துறை நிறுவனங்கள்தான் என்ற நினைப்பெல்லாம் இப்போது ஆட்சியாளர்களுக்கு மறந்துவிட்டது.

  கூட்டணிக் கட்சிகளை அலட்சியப்படுத்தி, மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தினால், மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற தயங்க மாட்டோம் என திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி தொடக்கத்திலேயே எச்சரித்துள்ளார்.

  பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதை கனிமொழி தெளிவுபடுத்தியுள்ளார்.

  இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் உருக்காலை போன்ற பல பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.  தி.மு.க.வும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இந்த முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி, இந்திய பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.