தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வேதநாயகரின் காலப்பெட்டகம்

சமுதாய வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் தம் எழுத்தாலும், பேச்சாலும் சரியான பாதை காட்டிய சான்றோர் பலர். அந்த வகையில் வேதநாயகரின் எளிய, இனிய எழுத்துகள் பண்ணிசைப் பாடல்களின் கருத்துகள் எல்லாம் பண்பை வளர்க்

Updated On :20 செப்டம்பர் 2012, 3:04 pm

சமுதாய வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் தம் எழுத்தாலும், பேச்சாலும் சரியான பாதை காட்டிய சான்றோர் பலர். அந்த வகையில் வேதநாயகரின் எளிய, இனிய எழுத்துகள் பண்ணிசைப் பாடல்களின் கருத்துகள் எல்லாம் பண்பை வளர்க்க மட்டுமன்று, வாழ்க்கைக்கும் சரியான பாதையைக் காட்டுவனவாகவும் மிளிர்கின்றன.

  1948-இல் மாயூரம் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளை இயற்றியது, "சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்' என்னும் அரிய நூல். அறுபதாண்டுகளுக்கு முன் பி.இரத்தினநாயகர் சன்ஸ், திருமகள் நிலையத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூலில் ஐந்து பிரிவுகள் உள்ளன. அவை: தேவதோத்திரக் கீர்த்தனைகள், ஈசுவர வருடத்துப் பஞ்சத்தைப் பற்றிய கீர்த்தனை, ஹிதோபதேசக் கீர்த்தனைகள், உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள், குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகள்.

  ஒவ்வொரு கீர்த்தனைகள் குறித்த விவரங்கள், கீர்த்தனைகளின் இலக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளே ஒவ்வொரு பாட்டிலும் ராகம், தாளம் குறிக்கப்பட்டுள்ளன.

  தேவதோத்திரக் கீர்த்தனையில், இறைவனை வேண்டுகின்ற அழகிய அடிகள் நம் இதயத்தைத் தொடுகின்றன. அக்காலத்தில் மக்களை வாட்டிய, கொடிய பஞ்சம் பற்றி நெஞ்சை உருக்கும் நெடிய பாட்டொன்றைப் பாடியுள்ளார் வேதநாயகம்.

  ""பஞ்சம்தீர் ஐயா - உனையன்றித்

  தஞ்சம் ஆர் ஐயா''

  என்று இறைவனை வேண்டுகிறார்.

  முதுமை குறித்துக் கவலைப்படாதார் யார்? ஆனால், வேதநாயகர் அது குறித்து வேதனைப்படாமல் நகைச்சுவையாய்க் கூறுகிறார்.



  ""ஆசைக்கொரு கறுப்பு மயிரேனும் இலையே

  ஐயஹோ கொக்குப் போல் நரைத்தது தலையே

  காசுக்குதவாக் கிழமென்பது நிலையே

  கன்னியர்க்கும் இனிநாம் கசக்கும் வேப்பிலையே''

  ஹிதோபதேசக் கீர்த்தனைகள் மட்டுமன்றி, மற்ற எல்லாக் கீர்த்தனைகளிலும் வரும் அத்தனை பாடல்களும் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன. சமுதாயச் சீர்திருத்தம், சமரசக் கோட்பாடு என்பன வேதநாயகரின் போதனைகளில் அழகாய் வெளிப்படுகின்றன.



  ""போனது போகட்டும் நீ இனியாகிலும்

  புத்தியுடன் வாழ் மனமே''

  என்று நெஞ்சுக்கு நீதி சொல்லும் பாடல்களும், ""உடலை நம்பாதே மனமே!'' என்னும் தத்துவப் பாடல்களும் வேதநாயகரின் கைவண்ணத்திலே மிளிர்கின்றன.

  நியாய, அநியாயங்களை உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள் உணர்த்துகின்றன. கைநிறையச் சம்பளம் பெற்றும் கூட, கையூட்டுப் பெறுகின்ற அவல நிலையை அன்றாடச் செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இதை அன்றைக்கே சுட்டிக்காட்டியுள்ளார் வேதநாயகர்.

  ""சம்பள மிருக்கப்பின் மேல்வருமானம்

  தனைநாடி ஏன்அதன் மேல்நித்திய தியானம்''

  கையூட்டை மேல்வருமானம் என்கிறார்.

  குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகளைப் படித்தாலே போதும், ஆங்காங்கு முதியோர் இல்லங்கள் தோன்றாமலிருக்க வாய்ப்பேற்பட்டிருக்கும்.



  ""உற்றவரே எனைப் பெற்றவரேதினம்

  உமக்கோர் நமஸ்காரம்''

  எனத் தொடங்கும் நீண்ட நெடிய பாடல் நம் நெஞ்சைப் பிழிகிறது.

  ""மாந்தவியாதிகள் எனையணுகாமலே

  மருந்துகள் கொடுத்தீரே!

  வாந்தியும்மலஜல அசுத்தமும் சகித்தெனை

  மார்புற எடுத்தீரே!''

  என்ற வரிகள், தாய்மையின் பெருமையை உணர்த்துகின்றன.



  ""இளமைப்பருவத்தில் என்னால் வருந்துன்பம்

  எல்லாம் பொறுத்தீரே!

  தளர்ந்தபருவத்தில் உம்மால் வருந்துன்பம்

  சகிப்பது பெருஞ்சீரே!''

  என்ற அடிகள், பெற்றோரைச் சுமையாய் நினைத்து, முதியோர் இல்ல முகவரி தேடும் இன்றைய இளைஞர்களுக்குச் சரியான சவுக்கடி.

  தந்தை, மகனுக்கும் மகளுக்கும் புத்தி கூறல் பாடல்களைப் படித்து ஒழுகினாலே, அந்தக் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக நிச்சயம் மாறிவிடும்.



  ""மாமிநாத்திகளை மதித்துறவாடு

  மகளுந்தாயும்போல மகிழ்ந்துநீகூடு

  சாமியாகுங்கணவன் தயவைநீதேடு

  தலையணைமந்திரம் ஓதுதல் கேடு''

  புகுந்த வீட்டுக்குச் செல்லும் புதுமணப் பெண்ணுக்கு இதைவிடப் புத்திமதி யாரால் சொல்ல முடியும்?

  வாழ்க்கைத் துணைநலம் குறித்து திருவள்ளுவர் கூறுவார். வேதநாயகரும் நல்ல பெண்மணிக்கான இலக்கணத்தைக் கூறுகிறார். பெண் பார்க்கப் போகிறோம். அந்தப் பெண் எப்படி இருக்க வேண்டும்?

  ""நல்லவள் ஏழை யானாலுந்தட்டாதே

  நாநூறுபோனாலும் நீபின்னிடாதே''

  என்கிறார்.

  அத்துடன் உத்தம குணங்களே ஒரு பெண்ணுக்கு ஆபரணம் என்றும் அறிவுறுத்துகிறார். இப்படி நூல் முழுவதும் வருவன வெறும் பாடல்கள் அல்ல; அரும் பாடல்கள். ஒரு தந்தையாக, ஆசிரியராக வேதநாயகர் கூறும் அறிவுரைகள், அறவுரைகள் எல்லாம், இந்தச் சமுதாயத்தை நிச்சயம் பண்படுத்த உதவும் ஒரு காலப்பெட்டகமாகும்.

  வேதநாயகரின், பழம்பெரும் நூலான "சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்' இன்று அச்சு வாகனம் ஏறி, இந்தச் சமுதாய உலகில் உலா வரவேண்டும் என்பதே தமிழார்வலர்களின் விருப்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.