புதிய சிக்கலில் மாணவர் கல்வி?
நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், அந்தப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ந


நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், அந்தப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகின்றன.
இதில் கணக்கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். அதன்பின் மக்கள்தொகையைக் கணக்கெடுக்க வேண்டும். இந்தப் பணி அடுத்த ஆண்டு வரை நீடிக்கிறது.
இதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகிறது. கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பணி நேரத்தில் ஒரு மணி நேரம் கணக்கெடுக்கச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இதைப் பயன்படுத்தினால்தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதனால், காலை அல்லது பிற்பகல் நேரங்களில் முழுமையாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். ஏற்கெனவே அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக ஆசிரியர்களுக்குப் பள்ளி நாள்களில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அந்த நாள்களில் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலும் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் 1-ம் தேதி முதலே கணக்கெடுப்புப் பணியைத் தொடங்க வேண்டி உள்ளதால் மாணவர் சேர்க்கை, புதிய பாடங்கள் தொடக்கம் ஆகிய கல்விப் பணிகள் முடங்கும் நிலை உள்ளது.
குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இந்த வேளையில் ஆசிரியர்கள் பிறபணிகளுக்குச் சென்று விட்டால் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் தான் மாணவர்கள் காத்திருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.இவர்களில் பலருக்கு அரசு கருணைத் தொகையும் வழங்கி வருகிறது. இவர்களைக் கொண்டு மக்கள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டால் அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் கல்வி பணிகளும் பாதிக்காது.
அதிகாரிகள் ஏனோ இது பற்றி சிந்திக்காமல் உள்ளனர்.
ஏழை மாணவர்களின் கல்வியில் அலட்சியம் காட்டாமல் இந்தப் பிரச்னையில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...