திருத்திக்கொள்ளச் சரியான தருணம் இது
விளையாட்டின் மீது துளியும் ஆர்வமற்ற விளையாட்டு சங்க நிர்வாகிகளால்தான் இன்றைக்கு


இந்திய ஒலிம்பிக் சங்கத்தைத் தொடர்ந்து இப்போது இந்திய குத்துச்சண்டை சம்மேளனமும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய விளையாட்டுத் துறைக்கு தலைக்குனிவையும், இந்திய வீரர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச சம்மேளனங்களின் இந்த அதிரடி முடிவை நாம் தேச அவமானமாகக் கருதினாலும், இந்திய விளையாட்டுத் துறையில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கான தருணமாகவே இதைப் பார்க்க வேண்டும். விளையாட்டின் மீது துளியும் ஆர்வமற்ற விளையாட்டு சங்க நிர்வாகிகளால்தான் இன்றைக்கு இந்த நிலை.
எனவே சர்வதேச சம்மேளனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கும்போதுதான் விளையாட்டுத் துறையில் உள்ள "கறுப்பு ஆடுகளை' ஒழிக்க முடியும்.
அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள், செல்வந்தர்கள், காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் போன்றவர்கள்தான் விளையாட்டு சங்க நிர்வாகிகளாக உள்ளனர்.
தங்களுக்குப் பிறகு தங்களின் வாரிசுகளையும், உறவினர்களையும் பதவியில் அமர்த்துகிறார்கள். பதவியில் இருப்பதன் மூலம் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதோடு, போட்டிகளை நடத்துவதாகக் கூறி "ஸ்பான்சர்களை' பெற்று சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நிர்வாகிகளாகத் தேர்வு செய்வதற்காக, விதிமுறைகளை மீறி முறைகேடான வகையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்குக்கூட போதிய அவகாசம் கொடுக்காமல் மூன்றே நாள்களில் முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவராக 3 முறை பதவி வகித்துவிட்ட அபய்சிங் செüதாலா, தனது உறவினரும், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ.வுமான அபிஷேக் மத்தோரியாவைத் தலைவராக்கிவிட்டு, தனக்கு சேர்மன் என்ற புதிய பதவியை உருவாக்கிக் கொண்டார்.
இதனால் ஏமாற்றமடைந்த மேற்கு வங்கம், மேகாலய மாநிலங்களைச் சேர்ந்த குத்துச்சண்டை சங்க நிர்வாகிகள் சர்வதேச சங்கத்துக்குப் புகார் அளித்ததன் பேரிலேயே இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதை வழிமொழியும் வகையில், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமும் அறிவித்துள்ளது.
இந்த அதிரடியான உத்தரவை சற்றும் எதிர்பாராத அபய்சிங் செüதாலா, "சர்வதேச சங்கத்தின் குற்றச்சாட்டை மறுத்ததோடு, சேர்மன் பதவியில் இருந்து வெளியேறவும், மறுதேர்தலை நடத்தவும் தயார்' என்று தெரிவித்துள்ளார். மறுதேர்தலை நடத்தத் தயார் என்று அவர் கூறுவதில் இருந்தே தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதையும், தங்களின் கையைவிட்டு சங்கம் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதையும் உணர முடிகிறது.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பிரதிநிதியாகவே, ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியை அபய்சிங் செüதாலா பிடித்துள்ளார். அதற்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதற்காகவே மறுதேர்தலுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பெரும்பாலான சங்கங்கள் தகுதியே இல்லாதவர்களுக்கு போலிச் சான்றிதழ் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்காமலேயே போலிச் சான்றிதழ் பெற்று பயிற்சியாளருக்கான படிப்பான என்.ஐ.எஸ். படிப்பை முடித்து பலர் பணியில் சேர்ந்துவிட்டதாக குத்துச்சண்டை வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பயிற்சி முகாம்களை நடத்தாமலேயே நடத்தியதாகக் கூறி அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவராக அசோக் மல்ஹோத்ரா 3 முறைக்கு மேல் பதவி வகித்துள்ளது போன்ற விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. ஆனால் மல்ஹோத்ராவோ அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது என்கிறார்.
தொடர்ந்து 10 முறை தலைவராக, சற்றேறக்குறைய 40 ஆண்டுகள் பதவி வகித்துவிட்டபோதிலும், பதவியை விட்டுக்கொடுக்க இன்னும் அவருக்கு மனம் இல்லை. இப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.
மத்திய அரசும் பணத்தைச் செலவிடுவதோடு நின்றுவிடாமல் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றனவா, அரசால் வழங்கப்படும் நிதியுதவி வீரர்களைச் சென்றடைகிறா என்பதைக் கண்காணிக்க வேண்டும். சரியாகச் செயல்படாத சங்கங்களை உடனடியாகக் கலைக்க வேண்டும். ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவதைத் தடுக்க இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...