நாடாளுமன்றத்தில் 273 இடங்களைப் பெறும் கட்சிதான் தனியாக ஆட்சியமைக்க முடியும். ஆனால், அத்தகைய தனித்த பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை என அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2014-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பா.ஜ.க. கூட்டணியோ 160 இடங்களைப் பிடிப்பதற்குக்கூட பெரும்பாடு பட வேண்டியிருக்கும். ஆனால், மற்ற கட்சிகள் 200 இடங்களுக்கு மேல் பெறக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 29 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 206 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கூட்டணி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் 28 விழுக்காடு வாக்குகளைப் பெற்றாலும் 131 முதல் 139 வரை உள்ள இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்றும் 2009-ஆம் ஆண்டில் 19 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 116 இடங்களைப் பிடித்த பா.ஜ.க. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் 27 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 156-164 இடங்கள்வரை கைப்பற்றக்கூடும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.
பா.ஜ.க.விற்கு வாஜ்பாய், அத்வானி கூட்டுத் தலைமை இருந்த 1998-ஆம் ஆண்டில் அது 25 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 27 விழுக்காடு வாக்குகளைப் பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடக்குமானால் அதற்குக் காரணமானவர் குஜராத் முதலமைச்சரான மோடியே என்பது நிலைநாட்டப்பட்டு, வாஜ்பாய், அத்வானி யுகம் பா.ஜ.க.வில் முடிந்துவிடும். அதைப்போல காங்கிரஸ் கட்சி எதிர்நோக்கியுள்ள சரிவுக்கு நேரு குடும்ப வாரிசான ராகுல் காந்தி பொறுப்பாக்கப்பட்டு அவருடைய சகாப்தமும் முடிந்து விடும்.
இவ்வாறு இந்திய அரசியல் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் நாளுக்கு நாள் சரிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சரிவு எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்குப் பெருமளவு உதவவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் என்ன?
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழி பேசும் மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைமை இரு கட்சிகளிலும் இல்லை. எதிர்காலத்தில் உருவாகுமெனவும் தெரியவில்லை.
இந்த நிலைமை இன்று நேற்று ஏற்படவில்லை. 1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய அரசில் எந்தக் கட்சியும் தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியவில்லை.
மாநிலக் கட்சிகளின் உதவியுடன்தான் 1998-இல் பா.ஜ.க. ஆட்சியில் அமர முடிந்தது. பல்வேறு மாநிலக் கட்சிகளின் உதவியுடனும் வெளியிலிருந்து இடதுசாரிக் கட்சிகளின் உதவியுடனும் 2004-இல் ஆட்சியை அமைத்த காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொண்டபோது அதை எதிர்த்து இடதுசாரிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர். அதன் விளைவாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
இரு கட்சிகளும் இவ்வாறு மாநிலக் கட்சிகளின் உதவியுடன்தான் ஆட்சியில் அமர முடிந்ததே தவிர தனியாக தங்கள் வலிமையினால் ஆட்சியில் அமரவில்லை. இனி தனியொரு கட்சியின் ஆட்சி என்பது இந்தியாவில் நடைமுறை சாத்தியமற்றது என்பது தெளிவாகிவிட்டது.
2009-ஆம் ஆண்டில் பிற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், கடந்த நான்கு ஆண்டுகளில் வரலாறு காணாத மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் அம்பலமாகி நிற்கிறது. இதை மறைப்பதற்காக உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சமூகநலத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவதற்கு முயலுகிறது.
அதைப்போல தங்கள் செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்காக மீண்டும் அயோத்தி பிரச்னையையும் இஸ்லாமிய பயங்கரவாத பிரச்னையையும் பா.ஜ.க. தனது கையில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனாலும் மக்களிடம் இவை எடுபடவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.-வுக்கும் இடையே பொருளாதாரக் கொள்கையில் பெருத்த வேறுபாடு எதுவும் இல்லை. தாராளமயக் கொள்கையை இரு கட்சிகளுமே பின்பற்றுகின்றன. அன்னிய முதலீட்டிக்கு நாட்டைத் திறந்து விடுவதில் இரு கட்சிகளிடையே போட்டா போட்டி நிலவுகிறது. கொள்கையற்ற கூட்டணி அமைப்பதில் இரு கட்சிகளின் அணுகுமுறை ஒன்றே. சிறுபான்மை மதங்களைப் பொருத்த பிரச்னையில் பா.ஜ.க. தீவிரவாத இந்துத்துவா கட்சியாகும். காங்கிரஸ் கட்சியோ மிதவாத இந்துத்துவா கட்சியாகத் திகழ்கிறது. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை.
பணம் படைத்த பெரு முதலாளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற கூட்டு, நாட்டின் வளங்களை சூறையாட இடம் கொடுத்துள்ளது. இந்த கள்ளக் கூட்டின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து ஊராட்சி மன்றத் தேர்தல்வரை பணம் ஆதிக்கம் செலுத்துகிறது. நாட்டின் ஜனநாயக நெறிமுறைகள் பேரபாயத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.
கட்சிகள் என்பவை இன்று அரசியல் தனி நபர்களின் சொந்த நிறுவனங்களாக மாறிவிட்டன. அரசியல் கட்சிகளிடையே பரவி விட்ட வாரிசுரிமைப் போக்கும் பாசிசப் போக்கும் நிலைபெற்று சர்வதிகார ஆட்சிகள் உருவாவதற்கு வழி வகுத்து விட்டன.
ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நேர்ந்துவிட்ட ஊனம் உலகிற்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடுகிறது. இந்திய ஜனநாயகம் பதவி நாயகமாகவும் பண நாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அரசு அமைப்பது, கவிழ்ப்பது ஆகிய எல்லாமும் பண நாயகத்தின் உதவி இல்லாமல் நடைபெறாது.
இந்தப் போக்கு இறுதியாக சர்வாதிகாரத்தில் போய் முடியும். இப்படித்தான் பாசிச சர்வாதிகாரிகளான இட்லரும் முசோலினியும் உருவானார்கள். அன்றைய பிரதமர் நேரு வகுத்த அணிசேரா கொள்கையிலிருந்து காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிச் சென்று விட்டது. எந்த வல்லரசுடனும் கூட்டுச் சேர்வதில்லை என்ற நிலையிலிருந்து மாறி அமெரிக்காவுடன் பல்வேறு துறைகளில் இந்திய அரசு கூட்டு சேர்ந்துள்ளது. அமெரிக்க சார்பு வெளிநாட்டுக் கொள்கைக்கு பா.ஜ.க.வும் ஆதரவு தருகிற கட்சியேயாகும்.
மக்களோடு நெருங்கிய துறைகளான கல்வி, சுகாதாரம் போன்றவை வணிக மயமாவதற்கு மத்திய அரசு துணையாக நிற்கிறது. ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தொண்டாற்றிய இத்துறைகள் இன்று அவர்களுக்கு எட்டாத நிலைக்குச் சென்றுவிட்டன.
மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடு அடைந்திருப்பதைப்போல இதற்கு முன் எப்போதும் அடைந்ததில்லை. இந்தியா விடுதலை பெற்று 65 ஆண்டுகளான பிறகும் மத்திய, மாநில மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை.
மாநில அரசுகளைச் சிறிதளவுகூட மதியாத போக்கில் மத்திய அரசு தொடர்ந்து நடந்து கொண்டு வருவதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளாக உள்ள பல மாநிலக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மக்களிடையே செல்வாக்கு கொண்ட தேசியத் தலைமை இன்று இல்லை என்ற உண்மையை மத்திய ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் உணர வேண்டும். நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதனாலேயே, அவர்கள் வகித்த அதிகாரங்களைவிட கூடுதலான அதிகாரங்களை தாங்களும் வகிக்க முடியும் என்று எண்ணுவது பேதமையாகும். இதற்கு நேர் விபரீதமான நிலைமை மாநிலங்களில் காணப்படுகிறது. இன்று பல்வேறு மாநிலங்களிலும் மக்களின் பேராதரவைப் பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் பதவிகளில் வீற்றிருக்கிறார்கள். மாநிலக் கட்சிகள் வலிமை பெற்றுத் திகழ்கின்றன.
பெரும்பாலான மாநிலங்களில் அகில இந்தியக் கட்சிகள் செல்வாக்கற்ற நிலையில் உள்ளன. மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் எதிர்காலத்தில் யாரும் மத்திய ஆட்சியை அமைக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்தச் சூழ்நிலையை மாநிலக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்த பொதுத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் 200 இடங்களுக்குமேல் பெறக்கூடும் என கருத்துக் கணிப்புக் கூறுகிறது. மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை அமைத்து மாற்று அரசியலைத் தருவதற்கு முன்வந்தால் 200 இடங்கள் என்பது 300 இடங்களாக மாறக் கூடும். இதை மனதில் கொண்டு அதற்கான முயற்சிகளில் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட வேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து 63 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த காலகட்டத்தில் 100 தடவைகளுக்குமேல் அதை திருத்தியாகியும் விட்டது. 1954-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்படுவது ஆரம்பமாகி இன்றுவரையில் தொடர்ந்து நடைபெறுகிறது. மொழிவழி மாநிலங்களாக நாடு பிரிக்கப்படுவதற்கு முன் வகுக்கப்பட்ட அரசியல் சட்டம் மொழிவழி மாநிலங்களின் தேவையை நிறைவு செய்யவில்லை. தற்போதைய சூழலுக்கு இந்த அரசியல் சட்டம் பொருந்தி வரவில்லை. எனவே மாநிலங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கும் வகையிலும் மத்திய ஆட்சிக்கு பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம் அச்சிடுதல் போன்ற சில குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டும் வழங்கும் வகையிலும் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சட்டம் கூட்டரசு அரசியல் சட்டமாகும். இது கூட்டாட்சி அரசியல் சட்டமாக மாற்றப்பட வேண்டும்.
தனித்தனி வளையங்களாக விளங்கும் முற்போக்கான மாநிலக் கட்சிகளை இணைத்து வலிமை வாய்ந்த சங்கிலியாக ஆக்குவது இன்றைய இன்றியமையாத கடமையாகும். இதன் மூலம் மாற்று அரசியல் உருவாகும். இந்த முயற்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்ட இடதுசாரிகள் முன்வர வேண்டும்.
அண்மையில் வேலூரில் பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, பின்வருமாறு கூறியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். "நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை பலப்படுத்துவதற்கும் ஒரு மாற்றுக் கொள்கை தேவைப்படுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மாற்றுக் கொள்கையுடைய அரசியல் அணியை உருவாக்க இடதுசாரிக் கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன. இது ஒரு தேர்தல் அணியாக இப்போதே உருவாகிவிடுமா என்று சொல்ல முடியாது. தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பையொட்டி, ஒரு மாற்று ஆட்சியை உருவாக்குவது பற்றி யோசிப்போம்' என்றார் ராஜா.
ராஜாவின் கருத்தை நாம் வரவேற்றபோதிலும் தேர்தலுக்குப்பின் மாற்று ஆட்சியை உருவாக்குவதைப் பற்றி சிந்திப்பதைவிட தேர்தலுக்கு முன்னாலேயே ஒரு மாற்று அணியை உருவாக்குவது இன்றியமையாததாகும். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகள் மீது நம்பிக்கை இழந்திருக்கும் மக்கள், புதிய மாற்று அணியின் மீது நம்பிக்கை வைப்பார்கள். இதன் மூலம் நீண்ட நாள்களாக நாம் விரும்பிய அரசியல் மாற்றம் வந்தே தீரும்.
நீண்ட நாள்களாக மாநிலங்களின் உரிமைக்குக் குரல் கொடுத்து வரும் மாநிலக் கட்சிகள் கூட்டாட்சி அணி (ஃபெடரல் ஃபிரண்ட்) ஒன்றினை அமைத்து மத்திய ஆட்சியை கைப்பற்றுவதன் மூலம் அரசியல் சட்டத்தைத் திருத்தி அதிக அதிகாரங்களைப் பெறவும் முடியும். மாநில உரிமைகளை மதிக்கும் உண்மையான கூட்டாட்சியை உருவாக்கவும் முடியும். மாற்று அரசியலுக்கான வழியும் பிறக்கும். இதுவே அதற்கு தக்க தருணமாகும்.
கட்டுரையாளர்:
தலைவர் - தமிழர் தேசிய இயக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.