கலந்தாய்வுக்கு முன் ஆராய்வது அவசியம்
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாணவரும், அதைவிட அவர்களின் பெற்றோர்களும் ஆவலுடன் காத்திருந்த "கலந்தாய்வு நேரம்' நெருங்கிவிட்டது.


தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாணவரும், அதைவிட அவர்களின் பெற்றோர்களும் ஆவலுடன் காத்திருந்த "கலந்தாய்வு நேரம்' நெருங்கிவிட்டது.
பல ஆயிரம் மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்து, அதில் சில நூறு மதிப்பெண்களைக் குறைவாய் பெற்றநிலையில் எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சில உயர் வருவாய்ப் பிரிவு மாணவர்கள், பொறியியல் கல்லூரியில் "நிர்வாக ஒதுக்கீட்டில்' தங்களுக்கான இடத்தை "உறுதி' செய்துவிட்டு கோடை விடுமுறையை உற்சாகமாகக் கழித்து வருகின்றனர்.
நடுத்தர மதிப்பெண்கள் பெற்றுள்ள நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்களின் "கட்-ஆஃப்' மதிப்பெண்களைக் கொண்டு நல்ல கல்லூரியில் இடம்பெற முடியுமா, இல்லை - கலை, அறிவியல் கல்லூரியில் சேருவதா என்பது புரியாமல் இன்னமும் விழித்து வருகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை பொறியியல் கல்லூரிகள் ஏராளம். அதில் கடந்த ஆண்டுகூட பல ஆயிரம் இடங்கள் நிரம்பாமல் காலியாகவே இருந்தன. எனவே பொறியியல் கல்லூரியில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பது சாத்தியமே. ஆனால், கல்லூரியின் தரத்தை அறிந்து, ஆராய்ந்து அதில் சேருவதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.
பொறியியல் துறையைப் பொருத்தவரை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர், பெட்ரோ கெமிக்கல், மரைன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.
இதில் எதில் சேருவது என்பது தொடர்பாக உறவினர்களும் அக்கம் பக்கத்தாரும் கூறிய ஆலோசனைகளைக் கேட்ட மாணவர்கள் அத்துடன் நின்று விடாமல், எந்தப் பொறியியல் பிரிவினைத் தேர்வு செய்வது என்பது குறித்தும், வேலைவாய்ப்பில் அதன் எதிர்கால நிலை குறித்தும் கல்வியாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, "கலந்தாய்வு' மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வில்பெற்ற "கட்-ஆஃப்' மதிப்பெண்களுக்கு எந்தக் கல்லூரிகளில் கிடைத்துள்ளது என்பதை இணையதளம் மூலம் பார்வையிட்டு கல்லூரிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இதைக் கொண்டு ஓரளவுக்கு, எந்தக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக தர வரிசையில் 1,030 வரையுள்ள கல்லூரிகளைத் தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் "கலந்தாய்வு' நடைபெறும் நேரத்தில் அந்தக் கல்லூரிகளில் தங்களுக்கு வசதியான சூழல் உள்ள கல்லூரியைத் தேர்வு செய்து கொண்டால் எந்தவிதக் குழப்பமும் இன்றி பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட முடியும்.
கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, அதைப் படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு போன்றவற்றையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு அங்கீகாரமுள்ள பாடப்பிரிவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கு அதிக வாய்ப்புள்ள துறைகளையும் அவற்றைப் படிக்கத் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளையும் இலக்கு வைத்து தேர்வுசெய்ய வேண்டும்.
தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு உள்ள கல்லூரிகள் எவை, தங்களுடைய ஊருக்கு அருகில் இருக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் பாடப்பிரிவுகள் எவை என்பதையும் நன்றாகத் தெரிந்துகொள்வதன் மூலம் தேர்வு சுலபமாக இருக்கும்.
மாணவர்கள் தங்களுடைய தேர்வான பாடப்பிரிவுகளையும் கல்லூரிகளையும் 1, 2, 3 என்று பட்டியல்போட்டு வகைப்படுத்தி வைத்துக் கொண்டு கலந்தாய்வுக்குச் சென்றால் வேலை எளிதாக முடியும்.
கலந்தாய்வு மையத்தில் உள்ளவர்களும் இதில் உதவுவர் என்பதால் சந்தேகம் இருந்தால் அவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு முடிவு செய்யலாம். பதற்றமோ, அவசரமோ தேவையில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...