நமக்கு நாமேதான்...

நென்னிந்தியாவின் "மான்செஸ்டர்' கோயமுத்தூரில் இருந்து ஓர் நற்செய்தி. (தாமிரவருணிக் கரையில் இருந்தும் ஏற்கெனவே அப்படியொரு செய்தி தவழ்ந்து வந்துள்ளது. எங்கிருந்து வந்தாலும் இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவ வேண்டிய நல்ல செய்தி.)
Updated on
2 min read

நென்னிந்தியாவின் "மான்செஸ்டர்' கோயமுத்தூரில் இருந்து ஓர் நற்செய்தி. (தாமிரவருணிக் கரையில் இருந்தும் ஏற்கெனவே அப்படியொரு செய்தி தவழ்ந்து வந்துள்ளது. எங்கிருந்து வந்தாலும் இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவ வேண்டிய நல்ல செய்தி.)

ஓர் தொண்டு நிறுவனத்தின் முன்முயற்சியில் தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் ஒன்று கூடி கோவை பெரிய குளத்தைத் தூர்வாரி மராமத்து செய்துள்ளனர்.

தாமிரவருணி ஆற்றை, கடந்த ஆண்டு உள்ளூர் காவல்துறையினரும், தன்னார்வலர்களும் இணைந்து சுத்தம் செய்தனர். நாட்டுக்குத் தேவையான நற்பணி இதுவே என்றால் அது மிகையில்லை.

தமிழ்நாட்டில் நீர்நிலைகள் முறையான பராமரிப்பின்றி சீரழிந்துவரும் நிலையில், அனைத்து ஆறுகளும், அணைகளும், குளங்களும், கால்வாய்களும், ஓடைகளும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட வேண்டியது அவசியம். குளங்கள் மட்டும் சிறியதும், பெரியதுமாக மொத்தம் சுமார் 39,000 உள்ளன. இவற்றில் சுமார் 10,000 குளங்கள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. எஞ்சிய குளங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன. இந்தக் குளங்களின் மூலம்தான் சுமார் 69 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இப்போது ஆக்கிரமிப்பு இல்லாத குளங்களையும், கால்வாய்களையும் காண்பது அரிது. அதிலும் ஊருக்கு நடுவிலேயோ அல்லது ஊருக்கு அருகிலேயோ இருக்கும் குளங்களின் நிலை மிகவும் மோசம். கரையோரம் வீடுகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் என குளத்தை அவை நாளுக்கு நாள் சுருக்கிக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி குளங்கள் அறிவிக்கப்படாத குப்பைத் தொட்டிகளாகவும், கழிவுநீர் தேக்கங்களாகவும் மாறி வருகின்றன.

ஊருக்கு வெளியே இருக்கும் குளங்களின் புறகரைகள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு கான்கிரீட் காடுகளாகி உருமாறி வருகின்றன. குடி மராமத்து முறை கைவிடப்பட்ட நாள் முதல் எந்தக் குளமும் முறையாக தூர்வாரப்படவில்லை. ஆண்டுதோறும் அரசு பட்ஜெட்டில் குளங்களை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நிதி அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் "ஒதுக்கப்பட்ட' நிதியாகி வருவது கண்கூடு.

அரசு ஆவணங்களில் வேண்டுமானால் அவை தூர்வாரப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டிருக்கலாம். எந்தக் குளமும் உருப்படியாக தூர்வாரி சீரமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

குளங்கள் முறையாக மராமத்து செய்யப்படாததால் இன்று எந்தக் குளமும் அதன் முழு நீர் கொள்ளளவில் இல்லை. மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நீர் கொள்ளும் அளவில் அவை மண்மேடாகி விட்டன. பருவமழைக் காலங்களில், பலத்த மழை பெய்யத் தொடங்கிய ஓரிரு நாள்களிலேயே சில குளங்கள் நிரம்பி விடுகின்றன. தொடர்ந்து மழை பெய்தால் குளம் உடைந்து "செய்தி'யாகி விடுகிறது. ஆனால் ஒரு போக சாகுபடிக்குக் கூட குளத்தில் தண்ணீர் தேங்கி இருக்காது. விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். குளங்களின் நிலைதான் இதுவென்றால், குளங்களுக்கு நீர்வரும் கால்வாய்களின் நிலை இதைவிட பரிதாபம். அணைகளும் முறையாக தூர்வாரப்படுவதில்லை.

பெரும்பாலான அணைகளில் 20 அடி முதல் 25 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. அதை விவசாயிகள் அள்ளிச் செல்லவும் அனுமதிக்கப்படுவதில்லை. மொத்தத்தில் அணைகளின் கொள்ளளவும் குறைந்து வருகிறது.

இப்படி நீர்நிலைகள் பாழ்பட்டு வருவது விவசாயிகளை மட்டும்தான் பாதிக்கும் என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. நகர்மயத்தால் நிலத்தடி நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறைந்து வரும் நிலத்தடி நீரை ஈடுகட்ட நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். ஊரைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை நாமே மண்மேடாக்கி, கழிவுநீர்க் குட்டையாக மாற்றினால் நிலத்தடி நீருக்கு எங்கே போவது? எனவேதான் கோவை மக்கள் விழித்துக் கொண்டனர். தீர்வு கிடைத்துள்ளது.

இந்தியா ஓர் விவசாய நாடு என்ற பள்ளி பாடத்தை அரசு மறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எனவே, முன்னுரிமை எல்லாம் தொழிற்சாலைகளுக்கும், தொழிலதிபர்களுக்குமே மட்டுமின்றி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் அல்ல என்றாகி விட்டது. ஆதலால், அரசு நீர்நிலைகளைப் பற்றி கவலைப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்குள் காரியம் கைமீறிப் போய்விடும். நாம்தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

கிராமம் ஆனாலும் சரி, நகரமானாலும் சரி, அவரவருக்கு அருகில் உள்ள குளங்களையும், கால்வாய்களையும் சீரமைக்க பொதுமக்களே முன்வர வேண்டும். அது அவ்வளவு எளிதில் நடக்காத காரியமாகத்தான் தோன்றும். உண்மையான தொண்டு செய்ய விரும்பும் தொண்டு நிறுவனங்கள் முன்வந்தால் இந்தக் காரியம் கைகூடும்.

அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை மாணவர்களைத் திரட்டலாம். ஆர்வம் உள்ள பொதுநல அமைப்புகள் கை கோர்க்கலாம். அரிமா, சுழற்சங்கம் போன்றவை இணையலாம். அருகில் உள்ள சீருடை படைப் பிரிவுகளை உதவிக்கு அழைக்கலாம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் ஆறு, குளம், கால்வாய்கள் சுத்தமாகும். காலத்திற்கும் நமக்கு பயன்படும்.

இனிமேல் அரசுகளை நம்புவதைவிட நம்மை நாமே நம்புவதுதான் சிறந்த வழி. அதுதான் உண்மையான "நமக்கு நாமே' திட்டம். அரசு செயல்படுத்துவது, "நமக்கு நாமமே' திட்டம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com