அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தங்கமான நேரம்...

தங்கத்தின் மீதான காதல், மனிதன் உயிருள்ளவரை குறையாது. அதன் விலையில் வேண்டுமென்றால் அடிக்கடி மாற்றம் வரலாம்.

News image
Updated On :31 மே 2013, 8:39 pm

எம். சடகோபன்

தங்கத்தின் மீதான காதல், மனிதன் உயிருள்ளவரை குறையாது. அதன் விலையில் வேண்டுமென்றால் அடிக்கடி மாற்றம் வரலாம். ஆனால், அதை எந்த விலை கொடுத்தும் வாங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது வரலாறு.

பெரிய பெரிய நகரங்கள் மட்டுமன்றி, பட்டி தொட்டிகளில்கூட ஏராளமான நகைக் கடைகள் வந்த வண்ணம் இருப்பதிலிருந்து இதை அறிய முடியும். பங்குச் சந்தையின் மூலமும் தங்கம் வாங்க முடியும். இதனால், தங்கத்துக்கு மவுசு குறையப் போவதில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதிச் சந்தையில் கடும் பாதிப்பு நிலவி வந்ததால் தங்கத்தின் மீதான மோகம் வெகுவாக அதிகரித்தது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்துக்குச் சென்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்து வருகிறது. இனி வரும் நாள்களில் அதன் விலை மேலும் குறையுமா? அல்லது மீண்டும் உயருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுவதே உண்மை. ஆனால், இந்தக் கேள்விக்கு விடை அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. சந்தையின் போக்கை அவ்வளவு எளிதாக, சரியாக யாராலும் கணிக்க முடியாது.

கடந்த சில ஆண்டுகளாக வேகமாகச் சென்ற தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இப்போது ஏற்பட்டுள்ள இந்தச் சரிவுக்குக் காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் சாதாரண மக்கள் குழப்பத்தில் உள்ளது இயற்கையே. சில ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து இந்த நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் நிலவியது. இதனால், யூரோவில் உள்ள முதலீட்டை திசை திருப்பும் விதமாக தங்கத்தில் போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், தங்கத்தின் விலை வெகு வேகமாக அதிகரித்தது.

ஆனால், யூரோ நெருக்கடி தாற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டதாக வல்லுநர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இதன் தாக்கம் சந்தையில் நன்றாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பலரும் தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, ஒவ்வொரு ஆண்டுமே ஜூலை முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களாக தங்கத்தின் விலை குறைந்தே இருந்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன.

உயரே சென்ற எதுவாகினும், மீண்டும் கீழே விழுந்தே ஆக வேண்டும் என்கிறது பாரம்பரிய ஞானம் (டிரெடிஷனல் விஸ்டம்). அது தங்கத்துக்கும் பொருந்தும் என்கின்றனர் வல்லுநர்கள்.

தங்கம் ஒவ்வொரு முறையும் மேலே சென்றவுடன் படிப்படியாகக் குறைந்து கீழே வந்து மீண்டும் புதிய விலையை பதிவு செய்து வெற்றி நடைபோடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டைப் பொருத்தவரை வல்லரசான அமெரிக்காவின் பொருளாதாரம் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. 2007-இல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய அமெரிக்கா படிப்படியாக மீண்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய பிராந்தியம் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும், மீள்வதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஐரோப்பிய யூனியனில் உள்ள சைப்ரஸ் நாட்டின் வங்கிகள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க கைவசம் உள்ள தங்கத்தை விற்று வருகிறது. இதனால், தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது. இதே நிலையை மற்ற ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களும் தங்கத்தில் கொண்டுள்ள முதலீடுகளை வாபஸ் பெறக்கூடும். இதன் காரணமாகத்தான் கோல்ட் ஈடிஎப் பண்டுகள் (கோல்ட் எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்) அதிகளவு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு வரை மற்ற கரன்சிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது. இதனால், டாலர் தேவைப்பாடு குறைந்தது. இதையடுத்து, பெரும்பாலான நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிக் குவித்தன. இதில் சீனா முன்னிலையில் இருந்தது. மேலும், பணவீக்கத்தை சமாளிக்க முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர் அதற்கு ஈடாக தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால், தங்கத்தின் விலை வெகுவாகவும், விரைவாகவும் உயர்ந்து உச்சாணிக் கொம்புக்குச் சென்றது.

ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. அமெரிக்காவின் பொருளாதாராம் வலுவடைந்து வருகிறது. உலக அளவில் பெரும்பாலான முன்னணி நாடுகளில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே குறைந்து வருகிறது. எனவே, தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளது. அமெரிக்க டாலர் மீதான மோகம் அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு டாலருக்கு ரூ.43 கொடுத்தால் போதும். ஆனால், இப்போது ஒரு டாலருக்கு ரூ.55.70 தர வேண்டிய நிலை உள்ளது. இதன் தாக்கமும் தங்கத்தில் எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் இப்போதுள்ள நிலையில் தொடருமேயானால் இந்த ஆண்டு தங்கத்தின் விலையில் மேலும் சரிவைக் காணலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஓராண்டுக்கு முன் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.3,280 ஆக இருந்தது. ஆபரணத் தங்கம் 22 காரட் 1 கிராம் ரூ.3,065 ஆக இருந்தது. ஆனால், இப்போது 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.2,680 ஆகவும், ஆபரணத் தங்கம் 1 கிராம் 22 காரட் ரூ.2,500 ஆகவும் உள்ளது.

அதாவது 1 கிராம் தங்கம் சுமார் ரூ.600 வரை குறைந்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.4,800 வரை குறைந்துள்ளது. இதற்கு மேலும் குறையலாம்.

ஆனால், முதலீடு என்று பார்க்கும்போது இப்போதிலிருந்தே தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்க்கலாம் என்கின்றனர் மார்க்கெட் வல்லுநர்கள். தங்கத்தில் போடும் பணம் வீண் போவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.