சொன்னால் மட்டும் போதாது...!
உலக அளவில் மற்ற நாடுகளின் ஏற்றுமதி சற்றுக் குறைந்துள்ள நிலையில், ஏப்ரலில் 6.30 சதவீதமாக இருந்த இந்திய ஏற்றுமதி அக்டோபரில் 13.50 சதவீதமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி தரும் விஷயம்.


உலக அளவில் மற்ற நாடுகளின் ஏற்றுமதி சற்றுக் குறைந்துள்ள நிலையில், ஏப்ரலில் 6.30 சதவீதமாக இருந்த இந்திய ஏற்றுமதி அக்டோபரில் 13.50 சதவீதமாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால், இறக்குமதி இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாகும். நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், இது சாத்தியமில்லாமல் உள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நுகர்வோரிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாலும், வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் அந் நாடுகளில் பொருளாதார நிலை தொடர்ந்து சீரடைந்து வருகிறது. இதுவும் இந்திய ஏற்றுமதி உயர்வுக்குக் காரணமாகக் கூறலாம். குறிப்பாக ஜவுளி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளது கவனிக்கத் தக்கது.
இப்போது ஜவுளி ஆலைகள் முழு நேர உற்பத்தியில் உள்ளன. மேலும், பணி ஒப்பந்த அடிப்படையில் அயல் பணிகளுக்கும் அதிக அளவில் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இது தமிழகத்தில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும். திருப்பூர் ஜவுளி ஏற்றுமதி இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் ரூ.8,647 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.6,660 கோடியாக இருந்தது. இது ரூபாய் அடிப்படையில் பார்த்தால் 29.70 சதவீதமாகவும், மற்ற நாடுகளின் கரன்சி அடிப்படையில் பார்த்தால் 17 சதவீமாகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் திருப்பூரிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு 55 சதவீதம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 30-38 சதவீதம், ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு 10 சதவீதமாக உள்ளது. தற்போது சார்க் நாடுகள், தென் கிழக்கு ஆசியா, வட கிழக்கு ஆசிய நாடுகளுடன் வரி இல்லா ஒப்பந்த மூலம் ஏற்றுமதி நடந்து வருகிறது. இதன் மூலம் ஏற்றுமதி முன்பு இருந்ததைவிட இரட்டிப்பாகியுள்ளது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இந் நிலையில், அதிகம் ஜவுளி ஏற்றுமதி செய்யப்படும் ஐரோப்பிய யூனியனுடன் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், காலம்தான் இன்னும் கனியவில்லை.
இதற்கிடையே, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு கிடைத்து வந்த ஜவுளி ஆர்டர்கள் இப்போது இந்தியாவுக்கு திருப்பிவிடப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் நாணய மதிப்பு உயர்ந்ததும், தொழிலாளர் ஊதியம் அதிகரித்ததும் அங்குள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
வரி இல்லா ஒப்பந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சகத்துக்கும், வர்த்தக அமைச்சகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகத் தெரிகிறது. வரி இல்லா வர்த்தகம் நடைமுறைக்கு வந்தால் கண்டிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது வர்த்தக அமைச்சகத்தின் வாதம். இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள 325 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டும் என்று வர்த்தக அமைச்சகம் உறுதியாக நம்புகிறது.
ஏற்றுமதி அதிகரிப்பது மட்டுமே பிரச்னைக்குத் தீர்வல்ல. இறக்குமதி அதிகரிக்கும் போது பணவீக்கம் உயர்ந்து, அன்னியச் செலவாணி கையிருப்பு குறைகிறது. இதனால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும், வர்த்தக நிதிப் பற்றாக்குறையும் எகிறிச் சென்று பொருளாதாரச் சிக்கலுக்கு வழி வகுக்கிறது. இறக்குமதியைக் குறைத்தால்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஓரளவாவது சரிக்கட்ட முடியும்.
தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து கோரி வரும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். இப்போது கடனுக்கான வட்டி 10-12 சதவீதமாக உள்ளது. அவ்வப்போது நிலைமைக்கு தக்கவாறு இதில் சலுகை அளிக்கப்பட்டு குறைக்கப்படும். ஆனால், வட்டி விகிதத்தை நிரந்தரமாக ஏழு சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள், குறிப்பாக ஏற்றுமதி நிறுவனங்கள் கோரி வருகின்றன. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் துணிந்து நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தொழில் உற்பத்தி கண்டிப்பாக ஏற்றம் பெறும். இரட்டை இலக்க ஏற்றுமதி விகிதமும் தொடரும்.
ஏற்றுமதித் தொழிலை ஊக்குவிக்க நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் அதிக அளவில் கடன் உதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மத்திய நிதியமைச்சர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இது தேர்தல் வாக்குறுதியாக மாறிவிடாமல் இருக்க வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...