மாற்றம் ஏமாற்றமே
மத்திய ரிசர்வ் வங்கியின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


மத்திய ரிசர்வ் வங்கியின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய கூட்டத்தின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் ரேப்போ ரேட்டை (கடன்களுக்கான வட்டி விகிதம்) 7.25 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக உயர்த்தியதோடு ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் 6.50 சதவீதத்திலிரும் 6.25 சதவீதமாகக் குறைத்துள்ளார்.
இதனால், அன்று காலையில் ஏற்றம்பெற்றிருந்த பங்குச்சந்தை, இந்த அறிவிப்புக்கு பிறகு 500 புள்ளிகள் வரை சரிந்தது. ரூபாயின் மதிப்பும் சிறிதளவு உயர்ந்தது.
பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் முக்கியக் காரணிகள் கடும் நெருக்கடியில் இருக்கும் நிலையில், ரகுராம் ராஜனின் இந்த அறிவிப்பு அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முக்கிய நேரத்தில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் இழந்துவிட்டார் என்று தொழில் துறையினர் கருதுகின்றனர். கடும் நெருக்கடியான இந்த நேரத்தில் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள் பெரும் தொழிலதிபர்கள்.
பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், தற்போது நெருக்கடியில் இருந்து வரும் தொழில் துறையினருக்கு இது மேலும் கூடுதல் சுமையை அளிக்கும் என்கின்றனர்.
வட்டி விகித உயர்வு அறிவிப்பால் வங்கிகளும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. இதனால், வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதமும் உயரக்கூடும்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ளன. தீபாவளியையொட்டி நிறுவனங்கள் போனஸ் வழங்கும். அந்தக் கூடுதல் தொகையில் வீட்டு உபயோகப் பொருள்கள், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், வீடு, வீட்டு மனை உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு சம்பளதாரர்கள் முயற்சி மேற்கொள்வர்.
ஆனால், ரகுராம் ராஜனின் அறிவிப்பால் பண்டிகைக் காலங்களில் வாகன விற்பனை, வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் நுகர்பொருள் விற்பனை ஆகியவை கடுமையாகக் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள், நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அவற்றின் நிகர லாபமும், வரும் காலாண்டுகளில் வெகுவாகக் குறையும்.
மேலும், வட்டி விகித உயர்வு, கட்டுமான நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும். புராஜெக்டுகளை நிறைவேற்றுவதற்கான செலவு அதிகரிப்பதுடன், அவற்றை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலைக்கும் தள்ளப்படும்.
வங்கிகளில் கடன் பெற்று வீடு வாங்கிய சம்பளதாரர்கள், தவணைகளை சரியாகச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந் நிலையில், இந்த அறிவிப்பு அவர்கள் மீது கூடுதல் பாரத்தை ஏற்றும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறையினர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த பல மாதங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து கடந்த ஆகஸ்டில் வரலாறு காணாத அளவாக ரூ.68.85 ஆகக் குறைந்தது. ஏற்கெனவே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறையால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் முந்தைய கவர்னரான சுப்பாராவ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வங்கி வட்டி விகிதத்தை பல முறை உயர்த்திப் பார்த்தார். பலன் ஏதும் கிடைக்கவில்லை. மாறாக விலைவாசி உயர்ந்தது. தொழில்துறைக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி ஏற்பட்டதுதான் மிச்சம். இந்நிலையில், புதிய கவர்னரின் அறிவிப்பும் அதுபோன்றே உள்ளது.
சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதான் இத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும். ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ஏனோ அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...