திசை மாறும் முதலீட்டாளர்கள்
கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் மீது மக்களிடையே அதிகரித்திருந்த மோகம் இப்போது குறையத் தொடங்கியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் மீது மக்களிடையே அதிகரித்திருந்த மோகம் இப்போது குறையத் தொடங்கியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்து வந்தவர்கள் சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில், குறிப்பாக 2008இல் அமெரிக்க வீட்டு அடமானக் கடன் சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில் கடும் சரிவைச் சந்தித்தது.
அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது ஓரளவு மீண்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழிலும் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது. 2008 - 2009 பிற்பகுதி வரை மிகுந்த எதிர்பார்ப்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிய பெரும் நிறுவனங்கள் அவற்றை விற்க முடியாமல் திணறியது கண்கூடு.
இந்நிலையில், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கடந்த ஆண்டு ஆரம்பத்தில் வெகுவாக அதிகரித்தது அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. குறிப்பாக இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்ததே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
எனவே, இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, இந்திய இறக்குமதியில் இரண்டாவதாக உள்ள தங்கத்தின் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து இதுவரை தங்கம் இறக்குமதிக்கான வரி மூன்று முறை உயர்த்தப்பட்டது. மேலும், எவ்வளவு இறக்குமதி செய்யப்படுகிறதோ அதே அளவு தங்கத்தை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றித் திரும்பவும் ஏற்றுமதியும் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இது தவிர தங்க நாணயங்களை வங்கியில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், தங்கத்தின் இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது. மேலும், தங்கத்தின் மீது கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால், 2008க்குப் பிறகு உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த தங்கத்தின் விலையும் குறையத் தொடங்கியது.
இதற்கிடையே, கடும் வீழ்ச்சியைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் 2010 முதல் படிப்படியாக மீண்டு எழுச்சி பெற்றன. இதனால், 2012இல் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் 26 சதவீதம் உயர்ந்தது.
ஆனால், 2013இல் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 10-12 சதவீதம்தான் உயர்ந்தது.
ரியல் எஸ்டேட் வர்த்தகத்துக்கு பெயர் போன மும்பையில் அத்துறைக்கான குறியீடு (ஹவுசிங் இன்டெக்ஸ்) கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் 222 புள்ளிகளாகவும், ஏப்ரல்-ஜூனில் 221 புள்ளிகளாகவும் குறைந்தது. ஆனால், தங்க இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மீண்டும் 222 புள்ளிகளாக உயர்ந்தது.
இதேபோல், இதே காலத்தில் ஹைதராபாதில் இக்குறியீடு 88லிருந்து 84ஆகக் குறைந்து, மீண்டும் கடந்த ஜூலை-செப்டம்பரில் 88க்கு உயர்ந்தது. கொல்கத்தாவில் 197, 189 ஆகக் குறைந்து மீண்டும் 199 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
ஆனால், பெரு நகராகவும் தேசியத் தலைநகராகவும் உள்ள தில்லியில் தொடர்ந்து கடந்த மூன்று காலாண்டுகளாக முறையே 202, 199, 190 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. சென்னை உள்பட மற்ற பெரும்பாலான பெரு நகரங்களில் ஹவுசிங் இன்டெக்ஸ் உயர்ந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 10 கிராம் சொக்கத் தங்கம் ரூ.33,500 ஆக இருந்தது. இறக்குமதியைக் குறைக்க அரசு எடுத்த தொடர் நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் தங்கம் ரூ.29,500ஆகக்
குறைந்தது.
அதாவது 6 மாதங்களில் 11 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இப்போது ரூ.29,000 - ரூ.30,000 என்ற நிலையில் தடுமாற்றம் நீடித்து வருகிறது. இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக முதலீட்டாளர்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறைந்ததை இதன் மூலம் அறிய முடியும்.
அதே சமயம், அவர்களில் பெரும்பாலானோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதை ஹவுசிங் இன்டெக்ஸ் உறுதி செய்கிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக கட்டிய வீடுகளை விற்க முடியாமல் திணறி வந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், இப்போது தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளன.
இந்நிலையில், மீண்டும் போலியான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முளைக்கக் கூடும். இவற்றை நம்பி ஏமாறாமல், நிபுணர்கள், வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலீட்டு ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...