மனிதநேயம் மலரட்டும்...
சில ஆண்டுகளுக்கு முன்னர், "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற தாரக மந்திரத்துடன், தானத்திலே சிறந்தது


சில ஆண்டுகளுக்கு முன்னர், "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற தாரக மந்திரத்துடன், தானத்திலே சிறந்தது ரத்த தானம் தான் என எண்ணும் அளவுக்கு சில நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் ரத்த தானக் கழகங்களாக மாறி ஆங்காங்கே ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.
பின்னர், படிப்படியாக பல்வேறு நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் ரத்த தானம் செய்வது; கல்லூரி மாணவர்கள் முக்கிய தினங்களில் ரத்த தானம் செய்வது என ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு மிக அதிக அளவில் ஏற்பட்டது.
இதனால், பெற்றோர்களே ரத்த தானம் செய்ய தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயாராகும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரத்த வங்கிகளில் போதிய அளவு ரத்தம் இருப்பு வைக்கப்படுகிறது.
ரத்த தானத்தைத் தொடர்ந்து கண் தானம் பிரபலமாகத் தொடங்கியது. குறிப்பாக, அரிமா சங்கங்கள் மூலமாக தென் மாவட்டங்களில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கண் தானம் செய்வதால் ஏற்படும் பயன்களை எடுத்துக் கூறி அதை சிறப்பாக முன் எடுத்துச் செல்வதை அரிமா சங்க நிர்வாகிகள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
பல்வேறு தானங்கள் குறித்த விழிப்புணர்வை அமைப்புகள் மக்களிடையே எடுத்துச் செல்வது வரவேற்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.
தற்போது தானங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார்போல உடல் உறுப்புகள் தானம் அமைந்துள்ளது.
உடல் உறுப்புகள் தானம் என்பது மூளைச்சாவு அடைந்த ஒரு நபரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகளும், கண்கள், இதய வால்வுகள், தோல், எலும்பு போன்றவற்றின் திசுக்களையும் தானம் செய்வதாகும்.
கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்ற 16 வயது சிறுவனுக்கு விபத்தால் ஏற்பட்ட மூளைச்சாவை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது, ஊடகங்கள் மூலமாக மக்கள் மத்தியிலே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தற்போது வரை 571 பேர் மூலமாக 3,133 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக 3,063 பேர் பயனடைந்துள்ளதாகவும் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அப்புள்ளி விவரத்தின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,178 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்ல, மக்களிடையே மனிதநேயம் அதிகரித்து வருவதையும் எடுத்துக் காட்டுகிறது.
இருக்கும்வரை ரத்த தானம்; இறந்த பின்பு உடல் உறுப்புகள் தானம் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கான அடிப்படை வழிமுறைகளை சாதாரண மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.
அண்மையில் தூத்துக்குடியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பிய அவரது குடும்பத்தினர், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் திணறியதை அனைவரும் அறிவர்.
அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, தேவைப்படுவோர் பதிவு செய்துவைத்துள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் மறு வாழ்வுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் தென் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், "மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்வது அதிகரித்துள்ளது.
இதுதொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் அதிகம் உள்ளதால் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நடைமுறைகளை எளிதாக்கி, அடித்தட்டு மக்களிடையே விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
குறிப்பாக, ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் உடல் உறுப்புகள் தானம் செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்து அறிவிப்புப் பலகைகள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
அதே நேரத்தில், ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் பெறப்படுவதால், மருத்துவமனைகளின் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மனிதநேயத்தோடு செய்யப்படும் உடல் உறுப்பு தானங்களை, வணிக நோக்கோடு வசதி படைத்தவர்களுக்கோ, வெளிநாட்டினருக்கோ விற்பனை செய்துவிடக்கூடிய சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவிடா வண்ணம் ஆரம்பத்திலேயே சட்ட வரைவுகளை ஏற்படுத்தி, அரசு மருத்துவமனைகளையும் தனியார் மருத்துவமனைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
தேவையேற்பட்டால் இதற்கென தனி ஆணையம் அமைத்து நெறிப்படுத்த வேண்டும். இதன் மூலமே ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
மேலும், குருதி கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...