கண்ணியம் காக்க...
காவல் நிலையம் என்பது அது இருக்கும் பகுதிக்கு வேலி போன்றது. ஏன் அப்பகுதியின் காவல் தெய்வம் இருக்கும் இடம் என்றுகூட கூறலாம்.


காவல் நிலையம் என்பது அது இருக்கும் பகுதிக்கு வேலி போன்றது. ஏன் அப்பகுதியின் காவல் தெய்வம் இருக்கும் இடம் என்றுகூட கூறலாம்.
வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்று காவல் துறையில் உள்ள பெரும்பாலானோரின் நடவடிக்கைகள் உள்ளன.
ஒரு சாமானியனால் எந்த ஒரு செலவும் இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்ய வைக்கமுடியுமா?
எப்படி கிளி காசை போட்டால்தான் சீட்டை எடுக்குமோ, அதேபோன்று காவல் துறையினரில் பலர் தங்கள் கடமையைச் செய்யக்கூட பணம் எதிர்பார்க்கின்றனர்.
எவரேனும் புகார் அளிக்கச் சென்றால் அவர்களிடமே ஒரு குயர் பேப்பர், பேனா, பென்சில் என வாங்கி வரச்சொல்லி செலவை அவர்கள் தலையில் கட்டி விடுகின்றனர்.
காவல் நிலையத்தில் எந்த ஒரு வேலை நடக்க வேண்டுமானாலும் அதற்கு குறிப்பிட்ட செலவு செய்துதான் ஆக வேண்டும் என மன நிலைக்கு பொதுமக்களும் வந்துவிட்டனர்.
தற்கொலை வழக்குகளை தீராத வயிற்று வலியால் தற்கொலை செய்துகொண்டார் என பதிவு செய்வது, வழக்கின் உண்மை நிலையை அறிய போதிய விசாரணை இல்லாமல் இருப்பது, திருட்டு வழக்குகளில் திருடுபோன பொருள்களின் உண்மையான மதிப்பை பதிவு செய்யாமை, உண்மையான மதிப்பு அதிகளவில் இருந்தால் அந்த வழக்கை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கருதி முடித்தல், சாதாரண மக்களின் மனுக்களை விசாரிக்கக்கூட நான்கு நாள்கள் அலைய விடுதல், சரியான பதில் சொல்லாமை என காவல் துறையினரில் பலர் அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
ஒருவர் எப்போதோ ஒரு முறை திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் அவர் திருந்தி வாழ்ந்தாலும், ஒரு வழக்குக்கு ஆள் தேவை என்றால் அவரை சேர்த்துக்கொள்வது, பல்வேறு திருட்டு வழக்குகளை முடிக்கும் பொருட்டு ஏதாவது ஒரு திருட்டில் தொடர்புடையவர் மீது அத்தகைய வழக்குகளைப் பதிவு செய்வது, குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவரைக் கைது செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு மிரட்டல் வழக்குகளைப் பதிவு செய்வது எனப் பல்வேறு வகைகளில் பொய் வழக்குகள் பதியப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனால், வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் சிக்குவதில்லை. மாறாக அப்பாவிகள் சிக்கி விழிபிதுங்கி நிற்கின்றனர். ஏழை, பணக்காரர்களிடையே வழக்குப் பதிவுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
வசதி படைத்தவர்களுக்கு, தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஒரு நீதியும், ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு நீதியும் என செயல்படுவதாக வருத்தப்படுகின்றனர் பொதுமக்கள்.
வாகனச் சோதனையில் 100 வாகனங்களைப் பிடித்தால், அதில் 70 வண்டிகளை உள்ளூர் பிரமுகர்களின் ஆசியோடு கையூட்டு பெற்றுக்கொண்டு விட்டுவிடுவது.
அப்பாவி மக்களிடம் ஆவணங்கள் முறையாக இருந்தாலும்கூட அதிக வேகம், முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் இல்லை, மதுப்பழக்கமே இல்லாதவர்களுக்குகூட போதையில் வாகனம் ஓட்டியது என பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுவது போன்ற அவலங்கள் நிகழ்வதாகக் கூறுகின்றனர் வாகன ஓட்டிகள்.
காவல் நிலையத்திற்குச் செல்லும் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்பதை காவல் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் தவிர வேறு எவர் காவல் நிலையம் சென்றாலும் அவர்களுக்கு உரிய மதிப்பு தருவதில்லை. ஒருமையில் பேசுவது, அநாகரிகமாக நடந்து கொள்வது போன்றவை தொடர்கதையாக உள்ளது. அங்கு செல்லும் சிலர் விவரம் தெரிந்தவர்களாக இருந்தாலும்கூட காவல் நிலையத்தில் அவர்களை உட்கார கூட சொல்வதில்லை.
அதுவே, காவல் துறையினர் கோயில் திருவிழாக்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் இருக்கை வசதி ஏற்படுத்தித் தரப்படுகிறது. அவ்வப்போது தேநீர் வசதி செய்து தரப்படுகிறது.
எந்த வழக்காக இருந்தாலும் முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்வதற்காகவே தங்கள் கற்பனைத்திறனை பயன்படுத்துகின்றனர். சாதாரன ஒரு சண்டையைக் கூட கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
காவல் துறையால் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை உண்மைச் சான்றாக கருதியே நீதிமன்றங்களில் தீர்ப்புகள் அமைகின்றன. காப்பீட்டு நிறுவனங்களில் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
எனவே, முதல் தகவல் அறிக்கையின் முக்கியத்துவத்தை காவல் துறையினர் கருத்தில் கொண்டு வழக்குகளை உண்மையாக பதிவு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மனு அளிக்கும் போதே உரிய விசாரணை மேற்கொண்டு அதற்கு தீர்வு கண்டால், மனுதாரர் தீர்வு கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மண்ணெண்ணெய் கேனுடன் குடும்பத்துடன் வந்து போராட வேண்டிய நிலை வராது. எஸ்.பி. அலுவலகத்துக்கு போய் புகார் செய்ய வேண்டிய நிலையும் வராது.
சாமானியன் அளிக்கும் புகாராக இருந்தாலும்கூட விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், காவல் துறை நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு உள்ளாகும் நிலை வராது.
காவல் துறை சீராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கால விரயம், பொருளாதார விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும். சாமானியனுக்கும் நீதி கிடைக்கும். காவல்துறை மீதான நம்பிக்கையும் மதிப்பும் அதிகரிக்கும்.
காவல் துறையினர் தங்கள் பணிக்கான கண்ணியத்தைக் காக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...