இந்தியாவைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட்டுகள் கடைப்பிடிக்கும் ஒரே இலக்கணம் இருத்தலும், இருத்தல் நிமித்தமும். தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்துக்கான பின்னணியும் இதுதான்.
கம்யூனிஸத்தை வளர்க்கும் தொட்டிலாகக் கருதப்படும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், வலதுசாரிகள் என்று வர்ணிக்கப்படும் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரின் செல்வாக்கு சமீபகாலமாக வளர்ந்து வருகிறது. இதனால், தங்களது இருப்பை நிலைநிறுத்திக்கொள்வதற்காக மரணதண்டனை எதிர்ப்புப் போராட்டம் என்பதைக் கையில் ஏந்தியிருக்கிறது இடதுசாரி மாணவர் அமைப்பு.
ஆனால், இதற்குள்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது. மரண தண்டனையை அகற்றவேண்டும் என்று வலியுறுத்துவதற்கான முக அடையாளமாக கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் முன்னிறுத்தி இருப்பது யாரை? தில்லி நாடாளுமன்ற வளாகத்தின்மீது தாக்குதல் நடத்திய சூத்திரதாரியான அஃப்சல் குருவை.
மரண தண்டனை மூலம் மனித உரிமைகள் மீறப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுவதற்கு, மனித உயிர்களை ஈவுஇரக்கமின்றி பறித்த பயங்கரவாதியின் முகம்தானா இலட்சினை?
பயங்கரவாத ஆதரவு கோஷத்துக்காக தேசவிரோத வழக்குப் பிரிவுகளின்கீழ், இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டதும், மரண தண்டனை எதிர்ப்பு என்பது தேச விரோதச் செயலா என்று நியாயவான்போல் கேள்வி கேட்கிறார்கள்.
தேசபக்தி குறித்து எங்களுக்கு யாரும் நற்சான்றிதழ் தர வேண்டாம் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் முழங்குகிறார்கள். ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் பா.ஜ.க. அரசு ஒடுக்குவதாகச் சாடுகிறார்கள்.
ஆனால், வரலாற்றை கம்யூனிஸ்ட்டுகள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். 1942-ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது, பிரிட்டீஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன், சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இரண்டாம் உலகப் போரின்போது, மகாத்மா காந்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸயும் "குருட்டு தீர்க்கதரிசிகள்' என்றும் வசைபாடினார்கள்.
கம்யூனிஸ்ட்டுகளை காந்திஜி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். அதனால்தான், 1944-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி, அன்றைய ஒருங்கிணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சி.பி. ஜோஷிக்குத் தாம் எழுதிய கடிதத்தில் 5 முக்கிய கேள்விகளை மகாத்மா எழுப்பினார்:
= மக்கள் போர் என்று கம்யூனிஸ்ட்டுகள் கூறுகின்ற போரில் மக்கள் என்று குறிப்பிடுவது யாரை? அது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கானதா? இல்லையேல் ஆப்பிரிக்கா அல்லது அமெரிக்காவில் வாழ்கின்ற கருப்பின மக்களுக்கானதா? இல்லையேல் அனைவருக்குமானதா?
= கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் பண உதவிகள் பொதுத் தணிக்கைக்கு உட்பட்டதா? அவ்வாறெனில் அக் கணக்குகளை நான் காண இயலுமா?
= கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தும் தலைவர்களையும், ஒருங்கிணைப்பாளர்களையும் கைது செய்ய அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி உதவுகிறதாமே?
= தீய நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சிக்குள் தமது ஆட்களை ஊடுருவச் செய்யும் கொள்கையை கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிப்பதாகக் கூறப்படுகிறதே?
= கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாட்டுக்கு வெளியே இருந்து உத்தரவுகள் வருகின்றன அல்லவா?
இந்த 5 கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாத ஜோஷி, இந்தியாவின் ஏழை மக்களுக்குப் பொருளாதார பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைத்ததாக விளக்கம் அளித்தார்.
காந்திஜியைப் போலன்றி, ஜவாஹர்லால் நேருவுக்கு கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி நன்கு தெரியவில்லை. அதனால்தான் கம்யூனிஸ்ட்டாக இருந்த கிருஷ்ண மேனனை காங்கிரஸுக்குள் சேர்த்துக்கொண்டு, பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி கொடுத்தார். இதற்கான விலையை இந்தியா, 1962-இல் நடந்த சீனப் போரின்போது கொடுக்க நேர்ந்தது.
கம்யூனிஸத்தின் அடிப்படை சித்தாந்தமே, பாட்டாளி வர்க்கத்தினரின் சர்வாதிகாரம்தான். அதில் எங்கே இருக்கிறது ஜனநாயகம்? பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி என்ற பெயரில் ஒற்றைக் கட்சி ஆட்சியைத்தான் கம்யூனிஸம் வலியுறுத்துகிறது.
ஜனநாயக உணர்வுகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் எப்படி மதிப்பளிப்பார்கள் என்பதற்கு 1989-ல் சீனாவின் தியானென்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த படுகொலையே சான்று.
இடதுசாரி மாணவர் அமைப்பின் தாய்க் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் (சி.பி.ஐ.), நெருக்கடி நிலை காலகட்டத்தில் இந்திரா காந்தியை அப்பட்டமாக ஆதரித்தார்கள்.
அஃப்சல் குருவை தங்களது முக அடையாளமாக முன்னிறுத்தத் தயங்காத கம்யூனிஸ்ட்டுகள், மிகச் சிறந்த தேசபக்தரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஏற்க மறுத்து, 2002-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் கேப்டன் லட்சுமியை முன்னிறுத்தினார்கள்.
காரணம், அழிவு ஆயுதமான அணுகுண்டு சோதனையை (இந்தியாவுக்காக) நிகழ்த்தியதில் பங்காற்றினாராம் கலாம். அப்படியானால், ரஷியாவிலும், சீனாவிலும் இருக்கும் அணுகுண்டுகளை அழிக்குமாறு கம்யூனிஸ்ட்டுகள் இதுவரை ஏன் கோரவில்லை? தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை பீடத்திலோ, தங்களது அரசுத் தலைமைப் பொறுப்பிலோ கம்யூனிஸ்ட்டுகள் இதுவரை ஏன் அமர்த்தவில்லை?
மனப்பூர்வமான செயல்பாடுகளால்தான் மக்கள் மனங்களை நிஜமாகவே வென்றெடுக்க முடியும் என்பதை கம்யூனிஸ்ட்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தாம் போதிக்கும் ஜனநாயகம், மாற்றுக் கருத்துகளை மதித்தல், தேசாபிமானம் ஆகியவற்றை உண்மையாகவே தாம் கடைப்பிடிக்க கம்யூனிஸ்ட்டுகள் முன்வர வேண்டும். செய்வார்களா?
(கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து. இதற்கு எதிர்வினைகள்
வரவேற்கப்படுகின்றன - ஆசிரியர்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.