பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தேர்தல் அறிக்கை எனும் வாக்குறுதி ஆவணம்

இந்தியாவின் பெருமிதப் பண்புகளுக்கு நமது ஜனநாயகக் கட்டமைப்பும் ஒரு காரணம். நாம் பெற்றுள்ள தனிமனித உரிமைகளும் சுதந்திரமும் அளப்பறியன.

News image
Updated On :6 மார்ச் 2016, 8:17 pm

ஒப்பிலா மதிவாணன்

இந்தியாவின் பெருமிதப் பண்புகளுக்கு நமது ஜனநாயகக் கட்டமைப்பும் ஒரு காரணம். நாம் பெற்றுள்ள தனிமனித உரிமைகளும் சுதந்திரமும் அளப்பறியன. ஆனால், இந்திய ஜனநாயகம் எதிர்த்திசையில் பயணிப்பதாகச் சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் கருதுகிறார்கள்.
 நாடாளுமன்றமும் சட்டப் பேரவையும் வலிமை வாய்ந்த ஜனநாயகத் தூண்கள். இவ்விரு அவைகளுக்கும் உறுப்பினர்களாக வரப்போகிறவர்கள் இந்த நாட்டின் மரபையும் பண்பாட்டையும் கட்டிக்காத்து வளர்முக நோக்கில் அழைத்துச் செல்லும் கொள்கைத் திட்டங்களை உருவாக்கக்கூடிய சிந்தனைத் திறன் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும். அரசியல் கட்சிகளே இதற்கு முழுப்பொறுப்பு.
 அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒரு சடங்காக அமைந்துவிடக் கூடாது. மாறாக அரசியல் கட்சிகளின் கொள்கை, தத்துவம், உள்நோக்கம் முதலானவற்றை அறிவிக்கும் பொதுப்பிரகடனமாகும். தனிமனித வளர்ச்சி, குடும்பப் பொருளாதார முன்னேற்றம், கிராம வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைவருக்கும் சமத்துவ வாய்ப்புகள் போன்ற கூறுகள் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை அலங்கரிக்க வேண்டும்.
 தொலைநோக்குச் சிந்தனையோடும் செயல்படுத்தும் திறனோடும் அமையும் தேர்தல் அறிக்கைகள் ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிகளின் செயல்திட்ட முன்வரைவும் ஐந்தாண்டு ஆட்சியின் சட்ட ஆவணம் ஆகும். எனவே, வாக்கு வங்கியை மையப்படுத்தாமல் மக்கள் நலனையும் மாநிலத் தேவைகளையும் மனதிற்கொண்டு உருவாக்கும் தேர்தல் அறிக்கைகளே மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
 அயல்நாட்டுத் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்யும்போது, அவை தெளிவாகவும் நிறைவேற்றப் போகும் திட்டங்களை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளன. நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டம் தேவையில்லை எனில் அத்திட்டம் எதிர்காலத்தில் நீக்கப்படும் என்பதும், அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதும் அத்தேர்தல் அறிக்கையில் இடம்பெறுகிறது. இதுவொரு சிறந்த பண்பாடாக தோன்றுகிறது. இத்தகைய விவரங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் போது, அவை தேர்தலுக்கு முன்பே மக்களின் இசைவினையும் ஒப்புதலையும் பெறுவதற்கு வழிவகுப்பதாகும்.
 கடந்த காலத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது என்ன? அவற்றுள் செயல்வடிவம் பெற்றவை எவை? செயற்படுத்த முடியாமைக்குக் காரணம் என்ன? எதிர்காலத்தில் கட்சி ஆட்சிக்கு வருமானால் என்ன செய்யும் என்பன போன்ற கருத்துகளைத் தேர்தல் அறிக்கைகள் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும்.
 மக்களின் எதிர்பார்ப்புகள், கல்வியாளர்களின் சிந்தனைகள், மாணவர்களின் தேவைகள், குடிமக்களின் ஒட்டுமொத்த நலன் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கைகள் உருவாக்கப் படவேண்டும். ஐந்தாண்டுக்கால ஆட்சி நிறைவடையும்போது தமிழகம் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்னும் நம்பிக்கையைத் தேர்தல்அறிக்கை தரவேண்டும்.
 நடுநிலை நோக்கர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பெரும்பான்மைக் கருத்து இலவசங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே. ஆனால், இது இயலாதவொன்று. குறிப்பிட்ட எந்தவொரு அரசியல் கட்சியினையும் குறைசொல்ல முடியாது. காரணம், தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களே கூடாது என்பதை நடுவண் அரசு சட்டமாக்க வேண்டும். அச்சட்டத்தைத் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் அதனைப் பின்பற்றும்.
 ஆயினும், கல்வியும் மருத்துவமும் எல்லா நிலைகளிலும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதனை அறிஞர்களும் கல்வியாளர்களும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே வலியுறுத்தி வருகிறார்கள். நார்வே, ஸ்வீடன், ஈரான், இராக், கியூபா போன்ற நாடுகளில் மருத்துவமும் கல்வியும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. பள்ளிக்கல்வி முதல் உயர் கல்விவரை அனைவருக்கும் பாகுபாடின்றி இலவசமாகத் தரப்படவேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வுகள் மறையும்.
 அனைத்து கிராமங்களுக்கும் நல்ல குடிநீர், தடையில்லா மின்சாரம், தரமான சாலை, அனைவருக்கும் கல்வி, மருத்துவம், தனிமனிதப் பொருளாதார முன்னேற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, பழந்தமிழ்க் கலைகளை வளர்த்தெடுத்தல், மொழிவளர்ச்சி, மனிதவள மேம்பாட்டுத்திறன் போன்ற துறைகளில் புதிய செயல் திட்டங்களை உருவாக்கும் கூறுகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டும்.
 தொகுதிகளை ஆய்வு செய்து அந்தந்தத் தொகுதியின் மண்வளம், இயற்கைவளம் ஆகியவற்றை மனதிற்கொண்டு அதற்கேற்பத் தொலைநோக்குப் பார்வையோடு தொழிற்சாலைகளை உருவாக்கி, வேளாண்மைக்கு அறிவுரை கூறுதல் முதலான பணிகளை முன்னெடுத்துச் செல்லலாம். அந்தந்தப் பகுதியில் பரவலாக உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் வேலை வாய்ப்புக்கும் தனிமனிதப் பொருளாதார வளர்ச்சிக்கும் குடும்ப வருவாய்க்கும் வழிகோலும். ÷
 தொழிற்சாலைகள் இல்லாத தொகுதிகள் இல்லை என்னும் நிலைக்குத் தமிழகத்தை உயர்த்துவது கட்சிகளின் கோட்பாடாக இருப்பின் அது விரும்பத்தக்கதாகும். பள்ளிக்கல்வி முடித்து தொழில்கல்விப் படிப்பதற்கு மாணவர்கள் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. இயலாதவர்கள் வாழ்நாள் முழுதும் ஏங்கித் தவிக்கவேண்டியுள்ளது.
 பிள்ளைகளைப் பெற்றவர்களும் தவம்கிடந்து பொழுதைக் கழிப்பதும் இயல்பாகிவிட்டது. இந்த இழிநிலையைக் களைவதற்கு மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிகளை அரசே ஏற்றுநடத்தும் ஓர் உன்னதத் திட்டத்தை ஆட்சிக்கு வருபவர்கள் செயல்படுத்தவேண்டும்.
 அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் மற்றும் மாணவர் தாம் வாழும் மாவட்டத்திலேயே படிக்க வேண்டும் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். இதனால், தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மோகமும் தனியார் பள்ளிகளின் வணிக நோக்கும் தவிர்க்கப்படும். மகளிர்க்கு சுய உதவிக்குழு இருப்பது போன்று படித்துப் பட்டம் பெற்றுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் ஒரு சுயநிதி குழுமத்தை உருவாக்கலாம். கல்வியாளர்களால் முன்வைக்கப்படும் பொதுப்பள்ளிக்கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் பல சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆக்கிரமிப்பை அகற்றுதல், அபகரிப்பை மீட்டல், நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் புதிய நீர்வளப் பெருக்கத்திற்காக ஏரிகளை உருவாக்குதல், புதிய அணைகளைக் கட்டுதல் போன்ற நீர்வளத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
 அண்மையில், சென்னையில் மழைநீரால் ஏற்பட்ட பாதிப்பைப் படிப்பினையாகக் கொண்டு புதிய வடிகால் பெருந்திட்டத்தை வடிவமைக்கலாம். வேளாண் நிலங்களின் பரப்பு பிற காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பெற்று, சுருங்கிவரும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் வேளாண்மையில் பெரிதும் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்குப் புதிய திட்டங்கள் தேவை.÷மரபுவழி விவசாயத்தைப் பாதுகாப்பதோடு வேளாண்மைக்குரிய நீரை மின்சாரத்தைப் போல அரசே வழங்க முன்வரவேண்டும். இதனை மேற்கொள்வது நதிநீர் இணைப்புக்கு வழிகோலுவதாகும்.
 பண்ருட்டியில் பலாப்பழமும், சேலத்தில் மாம்பழமும், திருச்சி மாவட்டத்தில் முந்திரியும், வேர்க்கடலையும், தஞ்சை பகுதியில் நெல்லும் அதிகமாக விளைகின்றன. இதுபோன்று ஒவ்வொரு தொகுதிவாரியான விளைபொருள்களுக்கும் மண்ணிற்கு அடியில் கிடைக்கும் இயற்கைத் தாதுப்பொருள்களுக்கும் ஏற்பச் சிறுசிறு தொழிற்சாலைகளைத் தொடங்கி அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்கலாம்.
 நிலக்கரி, நீர், அணுசக்தி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மின்சாரத்தில் பெரும்பான்மை நடுவண் அரசு தொகுப்பிற்கும் பிற மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. அயல்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் மின்சாரம் தரப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நுகரும் மின்சாரத்தின் தேவைக்கேற்பப் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் தேவையாகும்.
 சூரிய மின்சக்தியிலிருந்து பெறப்படும் மின்சாரமே தமிழகத்தின் அத்தேவையை ஈடுகட்டும். இதனைக் கருத்திற்கொண்டு புதிய மின்பகிர்வுத் திட்டங்களை உருவாக்கித் தடையில்லா மின்சாரம் கிடைக்க வழிகாட்டலாம். மேலும், அனைத்துத் துறைகளிலும் செயல்பட வேண்டியிருந்தாலும் ஐந்து ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட ஏதாவது ஒரு துறையில் தமிழகத்தைத் தன்னிறைவு பெற்றதாக்கித் தலைநிமிரச் செய்ய வேண்டும் என்னும் சமூகப் பற்றாளர்களின் எண்ணத்தை தேர்தல் அறிக்கை ஈடுசெய்ய
 வேண்டும்.
 மொழிப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை தரலாம். மாவட்டந்தோறும் அரசின் நிதியுதவியோடு நூலகங்களுடன் கூடிய தமிழ்ச்சங்கங்கள் தொடங்கப்பெற்று, அதன்வழி கலைகளும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் தொழில்நுட்பத்திறனை வளர்த்தெடுப்பதற்கான திறன்கூறுகள் ஆராயப்பட வேண்டும்.
 தமிழகத்திற்கு அப்பால் அயல் மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் வாழ்ந்துவரும் தமிழர்களைப் பாதுகாக்கவும், அவர்கள் சுயமரியாதையோடு வாழவும் மொழிப்பயன்பாட்டை இழந்துவிடாமல் இருக்கவும் தேவையான பாதுகாப்புக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 அயலகத் தமிழர்களிடமே நிதி திரட்டி அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் திட்டமொன்றைத் தயாரிக்கலாம். சாலைமேம்பாடு, தொழிற்சாலை உருவாக்கம், காடுகள் அழிப்பு, சுரங்கம் தோண்டுதல் போன்ற காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
 ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களின் கோரிக்கைகள் மீது பரிவு செலுத்தவேண்டும். ஐந்தாண்டுகளில் நிறைவேற்றும் திட்டங்களையே தேர்தல் அறிக்கை சுமக்கவேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.