காலத்தின் கொடுமை!

இந்தியாவின் பெருமை மதச்சார்பின்மை. ஆனால் நடைமுறையில் அந்த மதச்சார்பின்மை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் வேதனை கலந்த
Updated on
2 min read

இந்தியாவின் பெருமை மதச்சார்பின்மை. ஆனால் நடைமுறையில் அந்த மதச்சார்பின்மை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் வேதனை கலந்த வேடிக்கை. இதற்கு ஓர் உதாரணம், "பாரத் மாதா கீ ஜே' என்ற முழக்கம் படுகின்ற பாடு.
 மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினரான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்பவர் "பாரத மாதா கீ ஜே' என்கிற கோஷத்தை தான் உச்சரிக்க மாட்டேன் என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
 இதற்கு ஆளும் பா.ஜ.க. - சிவசேனை கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினரான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஒருமனதாக உறுப்பினர் வாரிஸ் பதானை கூட்டத் தொடர் முடியும்வரை தாற்காலிக நீக்கம் செய்திருக்கிறார்கள்.
 "பாரத் மாதா கீ ஜே' என்பதற்கு "பாரத அன்னை வெல்க' என்றும் "பாரத அன்னை நீடூழி வாழ்க' என்றும் பொருள். இதில் எங்கே மத வழிபாடு வந்தது? ஆனால் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளும் அவர்களை ஆதரிக்கும் சில கட்சிகளும் பாரத மாதா என்பதே ஹிந்து மதக் கண்ணோட்டம் என்று கருதுகிறார்கள்.
 அந்த வகையில், பாரத மாதா என்ற கருத்தியலை எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு (அல்லாவுக்கு) இணையாக வைப்பதாகக் கூறி, தங்களது மத அடிப்படையில் பாரத் மாதா கீ ஜே எனச் சொல்ல முடியாது என்கிறார்கள். வாரிஸ் பதான் "பாரத் மாதா கீ ஜே' கோஷம் எழுப்பமாட்டேன் என்று கூறியதன் காரணம் இதுதான்.
 நாட்டை, நதியை, இயற்கையை அன்னையாகக் கருதிப் போற்றுவது, சிலரால் வணங்கப்படுவது இந்திய சமூகக் கண்ணோட்டமேயன்றி, மதக் கண்ணோட்டம் அல்ல. பாரத அன்னை மட்டுமல்ல, காவிரி அன்னை, தமிழ்த் தாய் போன்றவை எல்லாம் இந்தக் கண்ணோட்டத்தில் எழுந்தவையே.
 அன்பின், நன்றி காட்டுதலின் வெளிப்பாடுதான் தாயாகக் கருதி வணங்குதல். இது மதம் சார்ந்ததல்ல, மனம் சார்ந்தது. அதனால்தான் பாரத அன்னை என்பதை ஹிந்துக்கள் மட்டுமன்றி பெளத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள், ஏன் விடுதலைப் போராட்டக் காலத்தில் முஸ்லிம்களும்கூட ஏற்றுக்கொண்டார்கள். அன்றைய முஸ்லிம் தலைவர்கள் யாரும் "பாரத் மாதா கீ ஜே' சொல்ல மறுத்ததும் இல்லை, மறந்ததும் இல்லை.
 கடவுளே இல்லை என்று கூறும் தமிழக நாத்திகர்கள்கூட தமிழ்த்தாய் என்று போற்றுகிறார்கள். அது மதம் சார்ந்ததா? தமிழ்த்தாய் வாழ்த்து தமிழர்கள் அனைவரின் நாவிலும் ஒலிக்கப்படும்போது வராத மதத் தீட்டு, பாரத அன்னை வாழ்க என்று அனைத்து இந்தியர்களும் சொல்லும்போது மட்டும் வந்துவிடுமா?
 மதங்களைக் கடந்த மகோன்னத பாரத அன்னையை மதச் சிமிழுக்குள் அடக்குவதை உண்மையான மதச்சார்பின்மை வாதிகள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதற்கு அவர்களது எதிர்வினை என்ன?
 பாரத நாட்டை அன்னையாகக் கருதும் கருத்தியல் நோக்கில் மதம் எங்கே புகுந்தது? மாறாக, பாரத மாதா என்பதை ஏதோ ஹிந்துக்களின் கடவுள்களில் ஒன்று என்று கருதுவதில்தான் மதம் பிடித்துக்கொள்கிறது.
 தனிப்பட்ட முறையில் ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பொது விஷயங்களில் மதம் பார்க்கக் கூடாது, மதத்தைக் கடந்து சிந்திக்க வேண்டும் என்பதுதானே மதச்சார்பின்மையின் உட்பொருள்? அவ்வாறெனில், இஸ்லாமியர்களில் ஒவைஸி, வாரிஸ் பதான் போன்ற சிலர், பாரத நாடு என்ற பொது விஷயத்தைக்கூட மதம் சார்ந்துதான் சிந்திப்போம் என்றால் அதுதான் மதவாதம்.
 அவர்களை மதச்சார்பின்மை பேசுபவர்கள் ஆதரிப்பதும் "பாரத் மாதா கீ ஜே' கோஷம் எழுப்புவதும் எழுப்பாததும் அவரவர் தனியுரிமை என்று வக்காலத்து வாங்குவதும் போலி மதச்சார்பின்மையின் கோர முகமல்லாமல் வேறொன்றும் இல்லை.
 இவ்வாறாக சிந்திக்கத் தொடங்கினால், வேறு சில பொது விஷயங்களுக்கும் இனி மதச்சாயம் பூசப்படலாம். குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சிகளைத் தொடக்கிவைப்பது, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது ஆகியவைகூட ஹிந்து மதம் சார்ந்ததாகக் கூறப்படலாம்.
 பசுவைத் தாயாக வணங்குவதும், அதற்கு ஒரு தீங்கும் செய்யக்கூடாது என்று கருதுவதும் மதம் சார்ந்த கருத்து என்பதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். நான் பசுவைத் தாயாகக் கருதுவதால் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை, நீயும் அவ்வாறு கருதி சாப்பிடக்கூடாது என்று அடுத்தவரை நிர்பந்திப்பது தவறு என்பதில் நியாயம் இருக்கிறது.
 ஆனால் விடுதலைப் போராட்டக் காலத்திலும், அதற்கு வெகு காலம் முன்பிருந்தும் நமது இந்திய சமூகத்தை ஒன்றிணைக்கும் விஷயமான பாரத அன்னை என்ற கருத்தியலும், பாரத அன்னை வெல்க என்ற முழக்கமும் அப்படிப்பட்டதல்ல. உணவு சார்ந்ததல்ல, அடிப்படை தேசபக்த உணர்வு சார்ந்தது.
 ஐந்து வேளை தொழுகை நடத்தும் ஓர் இஸ்லாமிய நெறியாளர் "எனது தாய்நாடு நான் வணங்குகின்ற கடவுளுக்கு இணையானது' என்று பெருமை கொள்கிறார் எனில், அவர் மத விரோதி ஆகிவிடுவாரா? அவரை உடனடியாக மத நிந்தனையாளர் என்று கூறி தண்டிக்க வேண்டும் என்று கூறும்பட்சத்தில் அது மதச்சார்பின்மைக்கு விரோதம் ஆகாதா?
 இஸ்லாமியர்கள் எல்லா விஷயங்களையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடுதான் அணுக வேண்டும் எனும் நிலைமை ஏற்பட்டால் மதச்சார்பின்மை மடிந்துவிடுகிறது. பாரத் மாதா கீ ஜே என்று இஸ்லாமியர்கள் சொல்ல மாட்டேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதானே, அதனை ஏன் வலியுறுத்த வேண்டும் என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி! மதச்சார்பின்மை என்பது குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்குக் கிடையாது என்றால் அதற்குப் பெயர் மதச்சார்பின்மையா?
 இதுபோன்ற சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்படுகிறது. அது இந்துமத அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை ஏற்படுத்தக் காரணமாக இருக்கிறது.
 "பாரத் மாதா கீ ஜே' முழக்கமிட்ட அபுல் கலாம் ஆஸாதும் "காயிதே மில்லத்' இஸ்மாயில் சாயுபுவும் இஸ்லாமிய விரோதிகள். வாரிஸ் பதானும், ஓவைசியும் இஸ்லாமியப் பாதுகாவலர்கள். காலத்தின் கொடுமை இது!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com