விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனம் திருந்த வழியுண்டு!

சிறைத்துறை நிர்வாகம், சிறைவாசிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைபற்றி உச்சநீதிமன்றம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2016, 11:38 pm

ஆர். நட​ராஜ்

சிறைத்துறை நிர்வாகம், சிறைவாசிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைபற்றி உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டதாலேயே ஒருவர் அவரது மனிதத்தன்மையை இழந்து விடுவதில்லை. அவருக்கு எல்லாவித மனித உரிமைகளும் உள்ளன என்றும் அந்த உரிமைகளை அவருக்கு மறுக்கலாகாது என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

சுதந்திரத்தை இழந்து சிறைவாசம் அனுபவிக்கும் ஒருவர் மேலும் துன்பத்திற்கு ஆளாகக்கூடாது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளது.

குற்றம் புரிந்தவர்கள் சிறையில் துன்பம் அனுபவிக்க வேண்டும், கொடுமை படுத்தப்பட வேண்டும் என்ற நிலை மாறி, செய்த குற்றத்திற்கு மனம் வருந்தி திருந்த வழி வகை செய்து சமுதாயத்தோடு அவர் இணைய வேண்டும் என்பதுதான் சிறை நிர்வாகத்தின் முக்கியக் குறிக்கோள்.

குற்றம் புரிந்தவருக்கு சிறை தண்டனை என்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் நடைமுறை. ஹமுராபி சட்டம் பாபிலோனில் கிறிஸ்து பிறந்ததற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே வரையறுக்கப்பட்டதாக சரித்திரம்.

குற்றம்புரிந்தவர் புரிந்த குற்றத்திற்கு அதே வகையில் தண்டனை அனுபவிக்க வேண்டும், பழிவாங்கப்பட வேண்டும், அதுவும் பாதிக்கப்பட்டவருக்கே பழிவாங்குவதற்கு வாய்ப்பளித்த நீதி முறை அந்த காலத்தில் இருந்தது. மத்திய கிழக்காசிய நாடுகளான இரான், ஈராக், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இன்னும் இத்தகைய பழிதீர்க்கும் தண்டனைகள் நடைமுறையில் உள்ளன.

ஐரோப்பாவில் தண்டனையடைந்தவர்கள் கப்பல்களில் அடிமைகளாக அமர்த்தப்பட்டனர். தண்டனை பெறும் சிறைவாசிகள் சிறைவாசத்தை உபயோகமான வகையில் பயன்படுத்தவும், விடுதலைக்குப்பின் சமுதாயத்தோடு இணைவதற்கு ஏதுவாக தொழிற்கல்வி கற்பதற்குமான வசதி பல நாடுகளில் போன நூற்றாண்டுதான் ஏற்படுத்தப்பட்டது.

கிரேக்க அறிஞர் ப்ளாட்டோ போன்றவர்கள் சமுதாயத்தில் நீதி நிலைப்பாடுகளில் மாற்றம் கொண்டு வர முயற்சி எடுத்தார்கள். குற்றவாளிகளை வசதி இல்லாத இடங்களில் அடைப்பது, பாழடைந்த கப்பல்களில் அடைப்பது போன்ற அவல நிலைஇருந்தது.

பதினேழாம் நூற்றாண்டில் லண்டன் பிரட்வில்லில் குற்றவாளிகள் அடைக்க ஒரு சிறைச்சாலை ஏற்படுத்தப்பட்டது. இது குற்றவியல் நடைமுறையில் முக்கிய சீர்திருத்தம். அங்கு மருத்துவ வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

சிறைச்சாலை கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கட்டட நிபுணர் ஜெரிமி பெந்தாம் என்பவர் வடிவமைத்தார். சிறை கண்காணிப்பும் கட்டுப்பாடும் இணைந்த பானாப்டிகான் என்ற சிறை வளாக வடிவத்தை உலகில் உள்ள எல்லா சிறைகளும் பின் பற்றுகின்றன.

மலேசியாவில் சிறைச்சாலைகளை பார்வையாளராக பார்த்தாலே ஒருவித பயம் ஏற்படும். அந்தளவிற்கு அடுக்கடுக்கு பாதுகாப்பு இருக்கும். ஒவ்வொரு அறையிலும் அளவிற்கு அதிகமான சிறைவாசிகள். எதற்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரியாமல் மருளும் முகங்களை பார்க்கலாம்.

போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க கடுமையான சட்டம் உள்ள நாடுகள் மலேசியாவும், இந்தோனேஷியாவும். இரு நாடுகளிலும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) திருட்டுகள் அதிகமாக நடைபெறும். கடவுச்சீட்டைப் பறிகொடுத்த பயணிகள் உரிய பயண சான்றாவணம் இல்லை என்று கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் நிலை வேதனைக்குரியது.

உலகிலேயே மிகவும் நெரிசலான சிறை ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள க்வீசான் நகர சிறை. எண்ணூறு சிறைவாசிகள் இருக்கக்கூடிய இடத்தில் 3,800 பேர் அடைக்கப்பட்டு ஒவ்வொரு அங்குல இடத்திற்கும் போராடும் அவல நிலை உள்ளது. மலம் கழிக்க இடமில்லை, சுத்தம் செய்யப்படாத கழிப்பறைகள், போதிய தண்ணீர், மருத்துவ வசதியற்ற கொடுமையான க்வீசான் சிறை என்று சர்வதேச குற்ற தண்டனையியல் ஆராய்ச்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் 138 சிறைகளில் 22,632 பேருக்கு இடவசதி உள்ளது. ஆனால், சராசரி சிறைவாசிகளின் எண்ணிக்கை 18,000 மட்டுமே.

இந்தியாவில் 131 மத்திய சிறை உட்பட 1,387 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் சிறைவாசிகளுக்கான இடவசதி 3.56 லட்சம். ஆனால், இருப்பவர்கள் எண்ணிக்கையோ 4.2 லட்சம். அதில் ஆண்கள் நாலு லட்சம், பெண்கள் சுமார் 18,000. மற்ற மாநிலங்களில் முக்கியமாக, உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், தில்லியில் சிறைவாசிகள் இருப்பு சராசரி 120 சதவீதம். நெரிசலான சிறைகள்.

தமிழகத்தில் சிறைகளில் இருக்கும் இல்லவாசிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி இடவசதி, அடிப்படை வசதி, மருத்துவ வசதி அளிக்கப்படுகின்றன.

புழல் சிறை முதலில் திறந்த வெளி சிறையாக அமைக்க திட்டமிடப்பட்டது. பின்பு சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகில் இருந்த மத்திய சிறை புழலுக்கு மத்திய சிறைக்கான வசதியுடன் மாற்றப்பட்டது.

புழல் சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகளுக்கு, தண்டனை கைதிகளுக்கு, பெண்களுக்கு என மூன்று சிறைகள் உள்ளன. திறந்தவெளி சிறையாக அமைக்கப்பட்டதால் இல்லவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

சிறை பராமரிப்பு, சிறைவாசிகளின் மனநலம், உடல் நலம், உணவு, குடிநீர், கழிவுநீர் வசதி எல்லாம் சிறப்பாக அமைந்து மனித உரிமை ஆணையத்தின் அறிவுரைகளை உறுதி செய்யும் சிறந்த சிறையாக மத்திய புழல் சிறை விளங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மத்திய சிறைகள் உள்பட 138 சிறைகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக உள்ள நிலங்களில் இயற்கை விவசாயத்திற்கான முயற்சி இயற்கை விவசாயியான மறைந்த நம்மாழ்வாரின் நல்லாசியுடன் துவக்கப்பட்டது. இப்போது நெல், கரும்பு, காய்கறி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் சிறைவாசிகள் ஈடுபடுவதால் அவர்களுக்கு மன நிம்மதியும் இயற்கையோடு ஒன்றி பணி செய்வதால் மன மாற்றமும் கிடைக்கிறது.

ஏழ்மை, கல்வியின்மை, சந்தர்ப்ப சூழல் குற்ற நிகழ்வுகளுக்கு வித்திடுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, சிறை இல்லவாசிகளுக்கு முழுமையாக கல்வி கொடுக்கும் உன்னத முயற்சியை சிறை நிர்வாகம் எடுத்து கொண்டுள்ளது.

2015-16ஆம் ஆண்டில் இல்லவாசிகளில் 61 பேர் முதுகலை பட்டப் படிப்பு, 73 பேர் இளங்கலை பட்டப்படிப்பு உட்பட மொத்தம் 6,781 பேர் கல்வி தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தனிச்சிறப்பு.

எல்லா மத்திய சிறைகளும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டது. 2015-16இல் 94 இல்லவாசிகள் 12-ஆம் வகுப்புத் தேர்விலும், 199 பேர் 10-ஆம் வகுப்புத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 155 இல்லவாசிகள் தொழில் கல்வி பயின்று வருகிறார்கள்.

தொழில் பயிற்சியும் சிறையில் ஊதியம் ஈட்டக்கூடிய பணியில் ஈடுபடவும் இல்லவாசிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. சிறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் "ஃபிரீடம்' (சுதந்திரம்) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

2011-12இல் ரூ.607 லட்சமாக இருந்த உற்பத்தி மதிப்பு, 2015-16இல் 40 கோடியாய் உயர்ந்து தமிழகம் இந்தியாவில் முதலிடம் வகிப்பது பெரிய சாதனை. திகார் சிறையில் திகார் ஹாத் என்று அங்குள்ள சிறைவாசிகள் வருடத்திற்கு தயாரிக்கும் பொருட்களின் மதிப்பு வெறும் ரூ.20 கோடிதான். தனி நபர் ஊதிய ஈட்டலிலும் தமிழகம்தான் முதலிடம்.

சிறைகளில் உள்ள தொழிற்கூடங்களை மேலும் மேம்படுத்தும் விதமாக கோயம்புத்தூர் சிறையில் உள்ள விசைத்தறியை நவீனமயமாக்க ரூ.150 லட்சம் மதிப்பில் ஏர் ஜெட் விசைத்தறி, திருச்சி மத்திய சிறைக்கு ரூ.75 லட்சம் மதிப்பில் நெசவுச்கூடத்திற்கு துணைக் கருவிகள், கைமுறை காகித உற்பத்திப் பிரிவுகளை மத்திய சிறைகளில் அமைக்க ரூ.90 லட்சம், சாம்பல் மூலம் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ ரூ.152 லட்சம், சேலம் மத்திய சிறையில் எவர் சில்வர் பாத்திரம் தயாரிக்க 90 லட்சம், வேலூர் மத்திய சிறையில் காலணி தயாரிப்புக் கூடத்திற்கு ரூ.10 லட்சம் நவீன எந்திரங்கள் வாங்கவும் விரிவாக்கப் பணிகளுக்கும் ரூ.18 லட்சம் ஒதுக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இல்லவாசிகள் கைவண்ணங்களை பொது மக்களுக்கு விற்பனை செய்யும் விதமாக சிறை அங்காடிகள் அமைப்பதற்கான ஆணை 2012-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. இது ஒரு திருப்புமுனை திட்டம். இதன்மூலம் இல்லவாசிகள் தங்களது தண்டனைக் காலத்தில் வருமானம் ஈட்டக்ககூடிய பணிகளில் ஈடுபடுவது அவர்கள் விடுதலைக்கு பிறகு திருந்தி வாழ சிறந்த வழி.

அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.60-லிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டடுள்ளது. அதுமட்டுமல்ல, அவர்கள் ஊதியத்தின் ஒரு பகுதி குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படுவது மிக சிறந்த ஏற்பாடு. 2015-16ஆம் வருடம் இந்த நிதி மூலம் கணிசமான தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறை வாசத்தை மாமியார் வீட்டு சுகவாசம் என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள்.

ஆம். தண்டனை பெற்று சிறைக்கு வருபவர்களை "வா' என்று அழைக்க முடியாது. விடுதலை பெற்றவரை "சென்று வா' என்று சொல்லாமல், "செல்லுங்கள் மீண்டும் இங்கு வராத வகையில் வாழுங்கள்' என்று விடை கொடுக்கும் மாமியார் வீடுதான் சிறை.

கட்டுரையாளர்: சட்டப் பேரவை உறுப்பினர்.

ஆர். நடராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.