நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம்

தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம்
Updated on
4 min read

தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் போன்ற சான்றுகளை முன்னிறுத்தி புதிய ஆய்வுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கொற்கை, முசிறி, அழகன்குளம், கொடுமணல், ஆதிச்சநல்லூர், பொருந்தல் மற்றும் பல ஊர்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு பல வரலாற்று உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொற்கை, அழகன்குளம், முசிறி கொடுமணம் ஆகிய நகரங்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே உலக நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன என்பது அகழ்வாய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம் நாணயங்கள் இவ்வூர்களில் கிடைத்துள்ளன.
ஆனால் இந்த நகரங்கள் இன்று குக்கிராமங்களாகக் காட்சித் தருகின்றன. நகர்ப்புற நாகரிகத்திற்கான தடயங்கள் இவ்வூர்களில் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது உள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் அமைந்துள்ளது. தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியியல் துறையைச் சேர்ந்த புலவர் செ. இராசு 1985-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை இங்கு மேற்கொண்ட அகழ்வாய்வில், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையும் சென்னைப் பல்கலைக் கழக ஆய்வுத் துறையும் பங்கு கொண்டன.
கொடுமணல் அகழ்வாய்வு பெரும் கற்படை சின்னங்களிலிருந்தும், குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளிலிருந்தும் கிடைத்த குறியீடுகள் தமிழ் பிராமி எழுத்துக்களாகும். இதிலிருந்து பல செய்திகள் கிடைத்துள்ளன.
பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ள கொடுமணம் என்ற ஊரே தற்போது கொடுமணல் என வழங்கப்படுகிறது என்பதும் தெரிகிறது. தன்னைப் பாடிய புலவர்களுக்கு கொடுமணத்தில் செய்யப்பட்ட அணிகலன்களை சேர மன்னன் பரிசாக அளித்தான் என்பது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வூரில் ரோமாபுரி நாணயங்களும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு - சிவப்பு மண் பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை கி.மு. முதல் நூற்றாண்டு மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். சங்க காலச் சேரர் தலைநகரமான கரூருக்கு மிக அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.
இவ்வூரிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள பாடியூர், ரோம் அரசுடன் மிக அதிகமான வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. படிகப்பச்சை, படிகக் கல், சூதுபவளம், நீலம், போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட அணிகலன்கள் இவ்வூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
கரூருக்கு அருகே உள்ள அமராவதி ஆற்றில் கடந்த நூறாண்டு காலமாக ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொடுமணம், பாடியூர் ஆகிய ஊர்களுக்கு மிக அருகில் இருந்த பழைய கரூர் நகரத்தின் அடிச் சுவடுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த கொற்கையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
1876-ஆம் ஆண்டு முனைவர் சாகர் என்னும் ஜெர்மானியரும் 1904-ஆம் ஆண்டு லூயிஸ் லேபிக்யூ என்னும் பிரெஞ்சுக்காரரும் முதன் முதலாக இங்கு அகழ்வாய்வு செய்தபோது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பொருட்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றுவிட்டனர்.
1889 முதல் 1905 வரை ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழ்வாய்வு நடத்தி வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த இந்தப் பகுதிக்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இடமும் கிடையாது என அறிவித்தார். இவர் 4,000-த்திற்கும் மேற்பட்ட பழம் பொருட்களை கண்டெடுத்தார்.
2004-ஆம் ஆண்டு நடைபெற்ற அகழ்வாய்வின்போது 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் அவற்றுக்குள் மனித எலும்புகளும் கிடைத்தன. 144 ஏக்கர் பரப்பளவு, ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள். இவை 3,800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
இவற்றில் தமிழ் பிராமி எழுத்தில் குறியீடுகளும் இருந்தன. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அதற்கருகே மக்கள் வாழ்ந்த நகரம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அதை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடரவில்லை.
புதுச்சேரி மாநிலத்தின் அருகே அரிக்கமேடு என்னும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் இங்கு வெளிநாட்டு வாணிபம் செழிப்புற்று வளர்ந்திருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரக்காணத்திற்கு 20 மைல் தெற்கே இவ்வூர் அமைந்துள்ளது. மரக்காணம் தமிழ்நாட்டின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்படும் சோழர் தலைநகரமான பூம்புகார் கடல் கோளில் அழிந்துபோனது.
1991-ஆம் ஆண்டில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம், பூம்புகார் நகர கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கடற்பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் தரங்கம்பாடி வரை இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சங்க காலத்தைச் சேர்ந்த சுட்ட செங்கற்களால் ஆன "ட' வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் 23 அடி ஆழத்தில் 85 அடி நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.
இவை ஒரு பெரிய நகரம் மூழ்கிக் கிடக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தின. ஆனால், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக்கழகம் தனது ஆய்வினை பாதியில் நிறுத்திவிட்டது.
2001-ஆம் ஆண்டில் பூம்புகார் கடல் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரகாம் ஹான்காக் ஆராய்ந்து கடலுக்கு அருகில் 75 அடி ஆழத்தில் ஒரு பெரும் நகரம் மூழ்கிக் கிடப்பதை கண்டறிந்தார்.
இதனுடைய காலம் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பூம்புகார் நகர நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மிகவும் மேம்பட்டது என்றும் அவர் கூறினார்.
ஆனாலும், கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகாரைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சி இன்னமும் நடைபெறவில்லை. கிரகாம் ஹான்காக்கின் ஆய்விற்குப் பிறகு இந்த ஆய்வு தொடரப்படவில்லை.
மதுரை நகரத்திற்குக்கருகே வைகைக் கரையில் உள்ள கீழடி என்னும் சிற்றூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தம், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகளும் வேறு அரிய வகை மணிகளும், அணிகலன்களும் கிடைத்துள்ளன.
மேலும் கட்டிடங்களின் தரைத்தளங்கள் மதில்சுவர்கள், கால்வாய்கள், பெரும் தொட்டிகளும் அவற்றின் உள்ளே தண்ணீர் செல்வதற்கும், வெளியேறுவதற்குமான அமைப்புகள், வட்டக் கிணறுகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்கள் போன்றவை முதன்முறையாகக் கிடைத்துள்ளன. ஒரு பெரும் நகர நாகரிகம் இருந்ததற்கான அடையாளச் சின்னங்களே இவையாகும்.
கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருக்கும் தொல்லியல் மேட்டில் வெறும் 50 சென்ட் பரப்பளவிற்குத்தான் அகழ்வாய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வினை மேற்கொண்டிருக்கும் இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பாளரான அமர்நாத் இராமகிருட்டிணன் கி.மு. 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இடமாக இந்த இடம் அமைந்திருக்கிறது. 2013-ஆம் ஆண்டில் நாங்கள் அகழ்வாய்வு பணியைத் தொடங்கியபோது, சங்கக் காலத்தைச் சேர்ந்த சுமார் 293 நகரங்கள் வைகை ஆற்றின் இருகரைகளிலும் அமைந்திருப்பதை கண்டறிந்தோம் தமிழ்நாட்டிலேயே 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர்ப்புற நாகரிகத்தின் முதல் தடயம் இதுவாகும்.
அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற தொன்மையான நகரங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. இங்கு ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அரப்பா நாகரிகம் போன்று சுடுமண், கழிவு நீர்க் கால்வாய், வசதியுடைய கட்டட அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இப்போதுதான் முதன்முறையாக சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. அக்கால மக்கள் வாணிக நோக்கத்திற்காக இந்த முத்திரைக் குறியீட்டை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆய்வுகள் முழுமையாக நிறைவேறுமானால் தமிழகத்தின் வரலாற்றையே திருத்தி எழுத வேண்டியிருக்கும். பழைய சேர நாடான இன்றைய கேரளத்தில் உள்ள துறைமுகமான முசிறியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதைத் திறந்து வைத்துள்ளார்.
அதைப்போல கீழடியில் நடைபெற்ற ஆய்வுகள் மூலம் கிடைத்த பழமையான பொருட்களை அதற்கருகிலேயே அருங்காட்சியகம் அமைத்து வைக்க வேண்டும். அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் வேண்டுமென தமிழக அரசிடம் இந்திய தொல்லியல் துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. விரைவில் அதை தமிழக அரசு வழங்க வேண்டும்.
அப்படி வழங்காவிட்டால் இந்த பொருட்கள் அனைத்தும் மைசூரிலுள்ள தலைமை நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அவை அங்கு பத்திரமாக பாதுகாக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
சங்க கால நகரங்களான மதுரை, உறையூர், கரூர், முசிறி போன்ற பழம்பெரும் நகரங்கள் அழிந்துவிட்டன. கொற்கை, பூம்புகார் ஆகியவை கடலுள் ஆழ்ந்துவிட்டன. உறையூர், திருச்சி மாநகரத்தில் ஒரு பகுதியாக ஒடுங்கிவிட்டது.
இப்போதுள்ள மதுரை நாயக்கர் கால மதுரையாகும். மேலே கண்ட நகரங்களில் மூதூர் மதுரை அமைந்திருந்த பகுதி மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடம் இதுவே.
எனவே, இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இதை கண்டறிந்த மத்திய தொல்லியல் ஆராய்ச்சி கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் மற்றும் அவரது துணை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தமிழ் மக்களின் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்களாவார்கள்.
இவர்களின் ஆய்வுப் பணிகள் தொடர்வதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் ஊக்கமளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்:
தலைவர்,
உலகத் தமிழர் பேரமைப்பு.
பழ. நெடுமாறன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com