விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூக்கம் கடிந்து செயல்!

எல்லைப் பாதுகாப்புப்படை (பி.எஸ். எஃப்.) மத்திய காவல் அமைப்புகளின் ஒரு முக்கிய பிரிவு.

News image
Updated On :20 அக்டோபர் 2016, 8:46 pm

ஆர். நட​ராஜ்

எல்லைப் பாதுகாப்புப்படை (பி.எஸ். எஃப்.) மத்திய காவல் அமைப்புகளின் ஒரு முக்கிய பிரிவு. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய எல்லைப் பகுதிகளில் ராணுவத்தோடு இணைந்து பணி புரியும் ஆயுதப்படை.
எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் ஊடுருவலைத் தடுத்தல், அந்நிய நாட்டு மக்கள் நடமாட்டத்தை தடுத்தல், போதை பொருட்கள் - ஆயுதங்கள் கடத்தலை கண்காணித்தல் போன்ற பல முக்கிய பணிகள் பி.எஸ்.எஃப். ஆளுகைக்கு உட்பட்டது.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சட்டம், கலால் சட்டம், போதைபொருள் தடுப்புச் சட்டம் போன்ற சட்ட பிரிவுகளில் அமலாக்க பொறுப்பும் உள்ளதால் எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு போலீஸ் அணியாகவே உருவாக்கப்பட்டது. இது முன்னாள் மத்திய பிரதேச காவல்துறை தலைவர் ருஸ்தும்ஜி உருவாக்கிய அணி. எல்லைப் பகுதியில் உள்ள காவல் துறையினரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால் பி.எஸ்.எஃப். காவல் அணியாகவே இருந்து வருகிறது.
1965-ஆம் வருடம் உருவாக்கப்பட்ட பி.எஸ்.எஃப். அணியின் பணிகளும் நடைமுறை விதிகளும் 1972-ஆம் வருட பி.எஸ்.எஃப். சட்டம் மூலம் வரையறுக்கப்பட்டது. 186 பட்டாலியன், விமானப்படை பிரிவு, கப்பற்படை பிரிவு என்று உலகிலேயே மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப்படையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாரமுல்லா துணை ராணுவ தளம், அக்டோபர் 2-ஆம் தேதி இரவு பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளானது. பாதுகாப்பு வளைய பங்கரில் பணியிலிருந்த நிதின் யாதவ் உடனடியாக எதிர் தாக்குதல் தொடுத்து எதிரிகளை முறியடித்தார். ஆனால் நடந்த துப்பாக்கி சண்டையில் அமரரானார்.
இதே வகையில்தான் உரியில் உள்ள ராணுவ தளம் தாக்கப்பட்டது. அங்கும் பாதுகாப்பு பங்கர்களில் பாதுகாப்பு வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் சுதாரிப்பதற்குள் தாக்குதல் நடந்து, தூங்கிக்கொண்டிருந்த 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த எல்லை தாண்டிய பயங்கரவாத செயல் நாட்டையே உலுக்கியது. பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கியது. அடித்து நொறுக்கும் அதிரடித் தாக்குதலை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்தியது எல்லோரின் வரவேற்பையும் பெற்றது.
உரி தாக்குதலும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பும் தவிர்த்திருக்க வேண்டியது என்பதை மேற்படி தாக்குதலுக்கு பிறகு நடந்த பாரமுல்லா தாக்குதலை பி.எஸ்.எஃப். திறமையாக சமாளித்ததை வைத்து உணர முடிகிறது.
உயிரை துச்சமாக மதித்து ஆயுதத் தளத்தைக் காப்பாற்றிய உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா கிராமத்தை சேர்ந்த நிதினுக்கு ஊரே திரண்டு மரியாதை செய்தது. உயிரிழப்பிற்கு மத்திய அரசிடமிருந்து தியாகிக்கான தகுந்த பஹுமானம் கிடைக்கவில்லை என்பதில் பி.எஸ்.எஃப். அணியினருக்கு வருத்தம்.
ஒரு ராணுவ வீரர் போரில் இறந்தால் செய்யப்படும் மரியாதை துணை ராணுவ வீரர்கள் உயிர் துறக்கும்போது அளிக்கப்படுவது இல்லை என்பதில் காவல் படையினருக்கு வருத்தம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
ராணுவமோ, காவல்துறையோ எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளை எதிர் கொள்வதில் ஒரே மாதிரியான ஆபத்தை சந்திக்கிறார்கள். மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு, உடலில் தாக்கும் கொடும் காயங்களில் வித்தியாசமில்லை. ஆனால் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் மரியாதை வீரதீரத்தில் உயிரிழக்கும் காவலர்களுக்கு கிடைப்பதில்லை.
முக்கியமாக எல்லைப் பகுதியில் மற்றும் நகஸ்லைட் ஊடுருவிய சத்தீஸ்கர்,ஜார்கண்ட் மாநிலங்களில் போராடும் காவல்துறையினருக்கு உரிய பஹுமானம் அளிக்க வேண்டும் என்பது மத்திய ரிசர்வ் படை, பி.எஸ்.எஃப். போன்ற துணை ராணுவ அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை பல வருடங்களாக மத்திய அரசு பரிசீலனை செய்து முடிவிற்கு வராமல் இருந்தது.
2011-ஆம் வருடம் தியாகி என்ற கௌரவம் உயிரிழக்கும் காவல்துறையினருக்கு அளிக்க நடைமுறையில் வழியில்லை என்று அப்போதைய மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார். இப்போது மத்திய அரசு மீண்டும் இதனை பரிசீலனைக்கு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் சுமார் ஆயிரம் காவல்துறையினர் பணியில் உயிர் துறக்கின்றனர். மன அழுத்தம் நிறைந்த பணி காவல் பணி. எப்போதும் சட்டவிரோத நிகழ்வுகளையே பார்த்து உணர்வுகள் மரத்து விடுகின்றன.
அதன் தாக்கத்தால் சிலருக்கு கட்டுக்கடங்காத கோபம் வருகிறது. கோபத்தை யார் மீதாவது காட்டி மேலும் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வார்கள். சிலர் தேவையில்லாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து மாட்டிக்கொள்வார்கள்.
எதற்கெடுத்தாலும் போராட்டம். சமீபத்தில் காவிரி பிரச்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து பல அரசியல் கட்சிகள் களமிறங்கின. அவர்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தேர்ந்தெடுத்த இடம் ரயில் தண்டவாளம்.
தண்டவாளத்துக்கு இடையிலோ கற்களுக்கு பஞ்சமில்லை. ஒரு பிரச்னை ஏற்பட்டால் போலீúஸாடு மோதுவதற்கு கற்கள் தயாராகயிருக்கும். அதனால்தான் எக்காரணம் கொண்டும் ரயில் மறியலுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் தடையை மீறினால், சட்டத்தை உடைத்தால் தான் போராட்டக்காரர்களுக்கு திருப்தி.
தடையை மீறுகையில் அவர்களோடு போலீஸ் மல்லுகட்ட வேண்டும். சமீபத்தில் நடந்த போராட்டத்தில் பல காவல்துறையினர் கீழே தள்ளப்பட்டார்கள். ஒருவரது தொப்பி கீழே விழுந்தது, அதை மிதித்துக்கொண்டு விஷமிகள் ஓடினர். இதில் வேடிக்கை என்னவென்றால் கைதுக்குப்பிறகு சிறைக்கு போகவேண்டும் என்றால் கூட்டம் சிதறிவிடும்
சட்டம் - ஒழுங்கு நேர்வுகளில், போராட்டத்திற்கு காரணம் என்னவாக இருந்தாலும், காவல்துறை போராட்டக்காரர்களின் எதிர்ப்பைத் தாங்கிகொள்ள வேண்டும். வசவுகளை கேட்டுக்கேட்டே செவி மரத்து விடுகிறது. அதனால் தானோ என்னவோ பொத்தி வைத்த உணர்ச்சிகள் சில சமயம் எரிமலையாய் வெடிக்கிறது.
மனநிலை தொய்வு அடையும் போது பொறுக்கமுடியாமல் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சமீபத்தில் கர்நாடகாவில் அடுத்தடுத்து ஐந்து காவல் இடைநிலை அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு இத்தகைய மனநிலை பாதிப்பே காரணம் என்பதில் சந்தேகமில்லை.
எல்லைப் பாதுகாப்பில் முதலில் உயிரிழந்தவர்கள் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த பதினோரு காவலர்கள். நடந்தது இந்தியா - சீனா சிஷூல் எல்லையில் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் என்ற இடத்தில். கரம்சிங்க் தலைமையில் ரோந்து சென்ற காவலர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இது ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ளது.
உலகத்திலேயே மிக உயரமாக 17,000 அடியில் அமைந்துள்ள சாலையை கடந்து ஐந்து நாள் நடையாக பயணித்தால் இந்த எல்லையை அடையலாம். வானிலையைப் பொருத்து ஹெலிகாப்டர் இயங்கும். இத்தகைய குளிர் பிரதேசத்தில் துணை ராணுவத்தினர் எல்லைப் பாதுகாப்பு பணி புரிகின்றனர். சியாச்சின் எல்லையை ராணுவம் பாதுகாக்கிறது.
எல்லையில் உயிர் நீத்த காவலர்களின் நினைவாய் அக்டோபர் 21 வீர வணக்க நாளாக 1960-லிருந்து அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாள் எல்லா மாநிலங்களிலும் பணியில் உயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தில்லியில் ஒரு போலீஸ் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் இந்தவருடம் தான் நிறவேறியுள்ளது.
காவலர்கள் உறங்காமல் பணி செய்தால் சமுதாயம் அமைதியாக உறங்க முடியும். வீட்டிலுள்ளோர் கண் விழிக்கும் முன்னரே வெளியேறி அவர்கள் கண்ணுறங்கும் வேளையில் வீடு திரும்பும் தமிழக காவலர் பணி சுமை நிறைந்தது.
அடுத்த வேளை உணவு எங்கு கிடைக்கும் என்ற உறுதி இன்றி கிடைத்ததை சாப்பிட்டு, கொடூரங்களையே பார்ப்பதால் வெறுப்புக்கும் கோபத்திற்கும் உள்ளாகி வியாதிகள் தான் எப்போதும் துணை என்று வாழும் காவலர்களின் துயர் துடைக்கும் தாய் தமிழக முதலமைச்சர்.
பல நலத்திட்டங்கள், மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள், இந்த வருடம் 2,673 வீடுகள் கட்டுவதற்கு ரூ.422 கோடி நிதி ஒதுக்கி, இது வரை குடியிருப்பின் திருப்திகர குறியீடு 47.17 சதவீதம் உயந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காவலர் குடியிருப்பு வளாகங்களில் கூட்டுறவு அங்காடிகள், இடர்படி, மருத்துவ வசதி, விடுமுறை நாள் பணிக்கு தினப்படி என்று பல வகையான சலுகைகள் அவர்களது நலனுக்காக வாரி வழங்கியுள்ளார்கள் மாண்புமிகு முதலமைச்சர்.
சமீபத்தில் - ஓசூரில் கொடியவர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் அளித்ததும் அவரது பெண்ணின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பும் வருந்தும் குடும்பத்திற்கு ஆறுதலாகவும் ஒட்டுமொத்த காவல்துறைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் விதமாகவும் அமைந்தது.
மஹாபாரதப் போரில் அதர்மத்தை அழிப்பதற்காக கண்ணன் பழி ஏற்று பாண்டவர் வெற்றிக்கு வழி வகுத்தான். சமுதாயத்தில் நீதியை நிலை நாட்ட பல நேர்வுகளில் காவல்துறை பழியை சுமக்க வேண்டியிருக்கிறது. பழி சுமந்தாலும் அதர்மத்தை அழித்து அமைதி காத்த ஆறுதல் தான் ஒரு காவலனை பணியில் மேலும் பயணிக்கவைக்கும் உந்து சக்தி.
கண்ணன் வஞ்சகன் என்றால் காவலனும் வஞ்சகன்தான். வஞ்சித்து கயவர்களை அடக்குவதில் காக்கிச்சட்டைக்
காரன் ரொம்ப கெட்டிக்காரன்.

கட்டுரையாளர்:
சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.