வான்மழை பேண்மின்!
வான் மழையானது பூமியின் உயிர்கள் அனைத்துக்குமான நேரடி உறவாகத் தாரை தாரையாகத் தரைநோக்கி நீள்கிறது.


வான் மழையானது பூமியின் உயிர்கள் அனைத்துக்குமான நேரடி உறவாகத் தாரை தாரையாகத் தரைநோக்கி நீள்கிறது. உருண்டோடி வந்து ஒன்று கூடியும், ஒருங்கிணைந்தும் பயணிக்கிறது, தன் பயணப் பாதைகளையெல்லாம் உயிர்ப்பித்து உருவாக்கிச் செழிக்கச் செய்கிறது.
நீர் நிலைகள் என்பவை அந்தந்த பகுதி மண் பரப்புகளின் புவியியல் தன்மைகளுக்கு ஏற்ப, சிறிதும் பெரிதுமாகத் தானே அமைந்தவையாகவும், அப்படி அமைந்தவை மக்களால் ஒழுங்குப்படுத்தப்பட்டவையாகவும், சில இடங்களில் தேவையின் பொருட்டு சிறு சிறு அளவுகளில் உருவாக்கப்பட்டவையாகவும் அமைவதுண்டு. தமிழர்களின் மரபில் பல்லாயிரக்கணக்கான நீர்நிலைகள் அவ்வகையில் அமைந்தே பெயர் பெற்றன, மக்களுக்குப் பயன்பட்டன.
குறைந்து வரும் மழை நீரின் அளவு காரணமாகவே நீர் நிலைகளில் வறட்சி நிலவுகிறது என்கிற கருத்து உண்மைக்குப் புறம்பானதாகும். மறைந்து வரும் நீர் நிலைகளின் எண்ணிக்கையும், போக்கிடமின்றிக் கடலில் போய்ச் சேருகின்ற மழை நீரின் அளவு அதிகமாக இருப்பதுமே வறட்சிக்கான உண்மையான காரணங்களாகும்.
பெருமழை நாள்களில் தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னை படும்பாடுகள் விவரிக்க முடியாதவை. கடந்த 2015 டிசம்பர் பெருமழையில் மிக மோசமான நிலையைத் தொட்ட சென்னை மாநகரம், ஒவ்வொரு பருவமழைக்கும் நடுங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பழங்காலச் சென்னையாக இருந்த பாரிமுனை மற்றும் வடசென்னையின் சில பகுதிகள் தவிர்த்து தென்சென்னை, மத்திய சென்னை என்பதெல்லாம் மிகப் பெரும்பாலும் வேளாண்மை நிலப்பரப்புகள் மீதே அமைந்தன. இன்றைய சென்னை நகரம், மொத்தம் 35க்கும் மேற்பட்ட ஏரிகளின் மீது அமைந்திருக்கிறது.
மண்ணையே பார்க்க வாய்ப்பில்லாத வகையில் இன்றைய நமது சென்னை மாநகரம் தார்க்கலவை மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு தரைப்பகுதி முழுவதும் மெழுகப்பட்டிருக்கின்ற நிலையில், தரைக்குக் கீழே வடிகால் வசதிக்கான கால்வாய்கள் அனைத்தும் உடைபட்டும், அடைபட்டும், உருக்குலைந்தும் கிடக்கின்றன. இந்நிலையில் மழை நீர் எங்கேதான் போகும் என்பதுதான் இப்போதிருக்கிற பெருஞ்சிக்கலாகும்.
தற்போதைய அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீரை நிலத்தடி நீராக மாற்ற கொண்டுவரப்பட்ட திட்டம் இன்றைய நிலையில், கண்காணிப்பின்றியும் அக்கறையின்றியும் செயலிழந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
சென்னையின் பல லட்சக்கணக்கான, மிகப்பெரிய நிலப்பரப்புகளைக் கொண்ட கட்டடங்கள், தங்கள் வளாகத்தில் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக்கொண்டு அந்த நீரை அந்தக்கட்டத்தின் பயன்பாடுகளுக்கே ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்.
தனித்தனியாக இருக்கின்ற பெரிய பெரிய வீடுகளுக்கும், இது பொருந்தும். கட்டட பொறியியலில் இது சாத்தியமற்ற ஒன்றல்ல.
அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களும், கட்டடங்களுக்குரிய நிறுவனங்களும் இது குறித்துச் சிந்தித்ததாகவோ, கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. வந்து விழுகிற வருணபகவானைச் சேமித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்கிற வகையில், புதியதொரு வாஸ்து சாஸ்திர கலாசாரம் தகுதியுள்ள அனைத்துக் கட்டடங்களிலும் தொடங்கப்பட வேண்டும்.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், தொழிற்சாலைகளிலும், வாய்ப்புள்ள பிற பகுதிகளிலும் இப்படிச் செய்யமுடியும்.
தங்களுக்கு வேண்டிய தண்ணீரைப் பூமியில் இருந்து உறிஞ்ச வேண்டும், அரசாங்கம் கொடுக்க வேண்டும் அல்லது பணம் கொடுத்து லாரிகளில் வரவழைத்து, நிலத்தடித் தொட்டிகளில் ஊற்றி நிரப்பிக்கொள்ள வேண்டும் என்கிற மூன்று நிலைகளுக்கு அப்பால், நமது கட்டடத்தில் விழுகிற மழை நீர் நமக்கானது என்கிற உணர்வோடு கோடிக்கணக்கான கட்டடங்களின் நிர்வாகங்கள் களமிறங்கி மழைநீரைச் சேமிக்கத் தொடங்கினால், நகரங்களின் தண்ணீர் பஞ்சம் பெருமளவில் நீக்கிவிடும்.
தங்களுக்கான தண்ணீருக்கு, அதுவும் நல்ல தண்ணீருக்கு மிகப்பெரிய தேவை இருக்கும்போது இதுபோன்ற திட்டங்கள் குறித்து அரசுகளும், அமைப்புகளும், மக்களும் இன்னும் தீவிரமாக சிந்தித்துச் செயல்படத் தொடங்காமல் இருப்பதைச் சூழலியல் போதாமை என்றே கருதத் தோன்றுகிறது.
ஆற்றுமணல், கல்குவாரிகள், கிரானைட்கற்கள், பவளப்பாறைகள், தாதுமணல் போன்றவையல்ல, தங்கள் தலைமீது வலிய வந்து விழுகின்ற விசும்பின் துளி. மழை நீரே உண்மையான இயற்கை வளம் என்பது உணரப்பட வேண்டும்.
அரசுகளும், அமைப்புகளும், நிறுவனங்களும், தனி நபர்களும் ஒருங்கிணைந்து பல வழிகளில் மழை நீரைச் சேமித்தாக வேண்டிய அவசியம் இப்போது வந்துவிட்டது.
நீர் நிலை பராமரிப்பிலும் சேமிப்பிலும் தமிழகம் பின்தங்கியும், செயலற்றுப்போயும், தோல்வியடைந்தும் பல பத்தாண்டுகளாகிவிட்டன. இந்நிலை மாற்றப்பட்டால்தான் அடுத்த தலைமுறைக்குக் குடிநீர் கிடைக்கும். தற்போதைய உடனடித் தேவை, மழை நீர் சேகரிப்பு மற்றும் சேமிப்புக்கான புதிய புதிய திட்டங்கள். அதற்கான புதிய புதிய அமைப்புகள்.
சமூக அக்கறையோடு சிந்திக்கின்ற புதிய வல்லுநர்களின் களச் செயல்பாடுகள், அரசின் ஆதரவு மற்றும் நிதி ஒதுக்கீடு போன்றவையே ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் நமக்கு வாழக்கற்றுக் கொடுக்க வருகிறது வான்மழை. அதை அலட்சியப்படுத்தித் தரம் தாழக் கற்றுக் கொண்டிருக்கிறோம் நாம். மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...