கனவுகளை நனவாக்கும் ஒரு நிதி ஆதாரம்

உங்களில் சிலர் திறமையான கவிஞராக, பாடகராக, கற்பனை வளம் நிறைந்தவராக இருக்கலாம்.
Updated on
3 min read

உங்களில் சிலர் திறமையான கவிஞராக, பாடகராக, கற்பனை வளம் நிறைந்தவராக இருக்கலாம். இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத நவீன தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். நோய் ஒன்றினை தடுப்பதற்கான விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். குறிப்பிட்ட விலங்கினம் அழிவதை தடுப்பதற்கான சிந்தனையோடு தவிக்கலாம். நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் உருப்படியான திட்டமுடைய சமூக ஆர்வலராக இருக்கலாம். எளிய முறையில் சுயதொழில் துவங்க நினைக்கும் தொழில்முனைவோராகவும் இருக்கலாம். தங்களுக்குள் பொதிந்திருக்கும் சீரிய சிந்தனைகளை செயல்படுத்துவதற்குப் பொருளாதார வசதிகள் பலருக்கு அமைவதில்லை. அதனால், அவர்களுடைய வளமான சிந்தனைகள், மலர்ந்து பயனளிக்காமல் முளையிலேயே கருகிவிடுகின்றன. பலருடைய திறமைகள் வெளிச்சத்திற்கு வராமல் புதைக்கப்பட்டுவிடுகின்றன.
இந்த இணையதள யுகத்தில், சிந்தனையாளர்கள் மற்றும் சாதிக்கத் துடிப்பவர்களின் கனவுகளை நனவுகளாக மாற்றும் வல்லமை படைத்த வசதிகள் பெருகிவருகின்றன. உறவினர்களும், நண்பர்களும், நிதி நிறுவனங்களும் இம்மாதிரி முயற்சிகளுக்கு உதவத் தயங்கும், அல்லது உதவ இயலாத, தருணங்களில், முன்பின் அறிமுகமில்லாத பலரை இணையதளம் மூலம் ஒருங்கிணைத்து, ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்கள், தங்கள் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான நிதியை திரட்டும் ஏற்பாடு crowd funding  என்றழைக்கப்படுகிறது. பல நபர்கள் அளிக்கும் சிறுசிறு தொகைகளைத் திரட்டுவதுதான் இதன் அடிப்படை.
இந்த ஏற்பாட்டின் முதல் கட்டமாக, நிதி திரட்ட நினைப்பவர், தன் திறமைகளை முன்னிறுத்தி, செயல் விளக்கம், அதை நிறைவேற்றுவதற்கான திட்டம், நிதி தேவையின் அளவு ஆகிய விவரங்களைப் பார்வையாளார்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக வடிவமைத்து, அதை இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். 
ஒவ்வொரு துறையிலும் நாட்டமுடைய பலர் இந்த தகவல்களை காண நேரிடும். அவர்களில் சிலர், உங்கள் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிதி உதவி செய்ய முன்வருவார்கள். உங்கள் செயல் விளக்கத்தினால் விளைந்த நம்பிக்கையும், தேவையானவர்களுக்கு தங்களால் முடிந்த சிறிய உதவிகளையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணமும்தான் இதற்கான உந்துதலாகும்.
சில திட்டங்களுக்காக, வெறும் ஒரு ரூபாய் நிதி உதவி கூட ஏற்றுக்கொள்ளப்படும். சிறு துளி பெருவெள்ளமாவது போல், ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து பெறப்படும் உதவி, பெருந்தொகையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி உதவியைத் தவிர, பலரிடமிருந்து பெறப்படும் திட்டத்திற்கான அங்கீகாரம், செயல் வெற்றிக்கு நம்பிக்கையூட்டும் உரமாகவும் அமைகிறது. மற்ற நிதி உதவி திட்டங்களில் லாப நோக்கு மட்டும் தலை தூக்கி நிற்கும். ஆனால், crowd funding  முறையில், உதவி மனப்பான்மை மற்றும் சமூக நலப் பார்வை ஆகிய குணநலன்களே தலை தூக்கி நிற்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் crowd funding  மூலம் நிதி திரட்டும் முயற்சிகள் தொடங்கி, சமீப காலங்களில் உலகில் பிற இடங்களிலும் பெருகி வருகின்றன.   Kickstarter.com, indiegogo.com போன்ற பிரத்யேக இணையதளங்கள் இதற்காக வடிவமைக்கப்பட்டு செயல்படுகின்றன. Kickstarter இணையதளம் 63,000-க்கும் மேற்பட்ட வரைவு திட்டங்களை பல்லாயிரக்கணக்கானவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. அவைகளில், தேவையான நிதி உதவி கிடைத்த 24ஆயிரத்திற்கு மேற்பட்ட திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரட்டப்பட்ட நிதியின் அளவு 300 மில்லியன் டாலருக்கு (சுமார் 2000 கோடி ரூபாய்) மேலாகும். ஐபோன் மற்றும் ஆன்ட்ராயிட் சாதனங்களைப் பற்றிய தகவல்களை வழங்கும்Pebble என்ற இ-பேப்பர், Double Fine விடியோ கேம் நிறுவனம் போன்ற பிரபல திட்டங்கள் crowd funding  மூலம் கணிசமான நிதி உதவியைப் பெற்று, வெற்றிகரமாக செயலாற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. Indiegogo  இணையதளம் மூலம், 196 நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான திட்டங்களுக்கு நிதி உதவி பெறப்பட்டிருக்கிறது. 
இந்தியாவை பொருத்தவரை,crowd funding மூலம் நிதி திரட்டும் முறை இன்னும் பிரபலமடையவில்லை என்றுதான் கருத வேண்டும். அதைப் பற்றிய செயல்பாட்டு தகவல் பற்றிய விவரங்களை பலர் அறியாமல் இருப்பது அதற்கு ஒரு முக்கிய காரணாமாகும்.
இசையில் ஈடுபாடுள்ள ஒருவர் தனது பாடல்களை, இசையை உருவாக்கித் தன் சொந்த முயற்சியில் இசைத் தொகுப்பாக வெளியிடும் எண்ணமிருந்தால், அந்த அவாவை, நிதித் தேவையின் அளவைக் குறிப்பிட்டு, மற்ற முழு விவரங்களுடன் இணையத்தில் பதிவு செய்யவேண்டும். அதைக் காண நேரும் இசை ஆர்வலர்கள் பலர், தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பிற்கான உறுதிமொழியை(pledge) முதலில் பதிவு செய்வார்கள், குறிப்பிட்ட தொகைக்குத் தேவையான உறுதிமொழிகள் பதிவானதும், அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டு, உரியவரிடம் சேர்க்கப்படும். சமுதாய மற்றும் கலை மேம்பாடு சம்பந்தமான குறும்படம் தயாரிக்கும் சிந்தனையுடையவர்களும் இதே வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஏதாவது சில காரணங்களினால், முயற்சி கைவிடப்பட்டால், வசூலிக்கப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்பட்டுவிடும்.
நுண்ணறிவுடன் கூடிய சிறு தொழிலுக்கான ஆரம்ப மூலதனம் (start-up capital), உங்கள் பகுதியில் ஒரு பள்ளியை துவங்குவதற்கான ஆரம்ப கட்ட உதவி போன்ற குறிக்கோள்களைக் கூட இணையத்தில் பதிவு செய்து நிதி ஆதாரங்களைப் பெற முடியும். ஒவ்வொரு வகையான தேவைக்கும், அம்மாதிரி முயற்சிகளை ஊக்குவிக்க நினைக்கும் வேறுபட்ட மனநிலையுடையவர்கள் உங்களுக்கு கைகொடுக்க முன்வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட எல்லா முயற்சிகளுக்கும் போதிய நிதி ஆதாரம் கிடைத்துவிடும் என்று உறுதியாக சொல்வதிற்கில்லை. நம்பிக்கையூட்டும் வரைவுத் திட்டம், தேவையான நிதியின் அளவு ஆகியவைகளையும் பொருத்துத்தான் வெற்றி வாய்ப்புகள் அமையும்.
நிதி கோரும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பவரையும் நிதி உதவி செய்யக் கூடியவர்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக சில அமைப்புகள் இணையதளத்தில் செயல்படுகின்றன. இவைகள், திட்டத்தைப் பதிவு செய்பவரின் பின்னணியை ஆராய்ந்து நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, பதிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குகின்றன. ஒவ்வொரு பதிவுக்கும் கட்டணங்கள் தவிர, போதிய நிதி திரட்டப்பட்டவுடன், அதில் ஒரு பகுதியை சேவைக் கட்டணமாக கழித்துக்கொள்கின்றன. 
Impact Guru, Milaap, Ketto, Wishberry  போன்ற இணையதளங்கள் இந்தியாவில் crowd fund  மேடைகளாக செயல்படுகின்றன. இதில், சட்ட ஆலோசனைகள், நிறுவனத்தைப் பதிவு செய்யும் முறைகள், நிதி திரட்டும் பிரசாரத்திற்கான வழிகாட்டுதல்கள் ஆகிய உதவிகளையும் செய்வதாக அந்த அமைப்புகளின் தகவல் பலகை மூலம் அறிய முடிகிறது. 
கன்னட படத் தயாரிப்பாளரான பவன்குமார், தன்னுடைய 'லூசியா' என்ற பிரபலமான படத்திற்கான 50 லட்சம் ரூபாய் நிதியை  crowd funding  மேடை மூலம், முப்பது நாட்களில் திரட்டினார். இந்த வெற்றிக்குப் பிறகு, சினிமா, ஓவியம் போன்ற நுண்கலைகள், புத்தகம் வெளியிடுதல் போன்ற முயற்சிகளுக்காக catapooolt  என்ற இணையதள மேடை துவங்கப்பட்டது. 
இம்மாதிரி நிதிப் பங்களிப்புகள் நல்லெண்ண அடிப்படையில் தோன்றுவதால், வட்டி, லாபத்தில் பங்கு போன்ற கோரிக்கைகளுக்கு வாய்ப்பு குறைவுதான். தங்களுக்கு உதவியவர்களை கெளரவிக்கும் பொருட்டு, பயனாளிகள் தங்கள் தயாரிப்புகள், இசை வெளியீடுகள், குறும்பட முதல் பார்வை வசதி ஆகியவைகளை அவர்களுக்குப் பரிசாக வழங்கி, நன்றியை வெளிப்படுத்தலாம். 
தொழில் சார்ந்த திட்டங்களில், 200 அங்கத்தினர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு பங்குகள் (equity)  போன்ற பலன்கள் (securities) வழங்கப்பட்டால், அது கம்பெனி மற்றும் செபி சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். 
வளரும் கலைஞர்கள், கற்பனை வளம் மிகுந்த எழுத்தாளர்கள், தொழிலதிபர்களாக நினைக்கும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான ஆரம்ப நிதி ஆதாரங்களுக்கு இம்மாதிரி ஒரு வழிமுறை இருப்பது தெரிந்து செயல்பட்டு, தங்கள் கனவுகளை நனவாக மாற்ற முயற்சித்தால், அது அவர்களுடைய வாழ்க்கையையும் மாற்றும். 


முயற்சியாளர்களுக்கு நம் அட்வான்ஸ் வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com