கலக்கமூட்டும் காலநிலை மாற்றம்

தற்போது உலகையே அச்சுறுத்தும் விஷயமாக காலநிலை மாற்றம் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் காலநிலை மாற்றம், ஒரு தனித் துறையாக செயல்பட்டு

தற்போது உலகையே அச்சுறுத்தும் விஷயமாக காலநிலை மாற்றம் பார்க்கப்படுகிறது. உலக நாடுகளில் காலநிலை மாற்றம், ஒரு தனித் துறையாக செயல்பட்டு வருவதையும் நாமறிவோம். பூமி சூடாகிக்கொண்டிருப்பதால், புவி வெப்பமாதலை 1.5 டிகிரி சென்டி கிரேடுக்குள் வைக்க வேண்டும் என்று ஐ.நா. சபை அறிவுறுத்தி வருகிறது. 
அதே சமயம் புதைபொருள் எரிசக்திப் பயன்பாட்டை, அதாவது நிலக்கரி, பெட்ரோல், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இவற்றின் பயன்பாட்டால்தான் தொழில்கள் வளர்கின்றன. புவி வெப்பமாவதற்கு மேற்கூறிய எரிசக்திப் பயன்பாடுகளே முக்கிய காரணம். 
சூரிய சக்தி, காற்றாலை எரிசக்தி, பயோமாஸ் எரிசக்தி, தாவர எரிசக்தி கொண்ட எத்தனால், பெட்ரோல், மசகு எண்ணெய், டீசல் போன்ற மாசற்ற மாற்று எரிசக்திகளின் செயல்பாடுகள் மிகவும் குறைந்து வருவதால், உலக அழிவு குறித்து சூழலியல் வல்லுனர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். 
இப்படி சூழல்வாதிகள் சொல்வதை, ஆன்மிகவாதிகள், ஆமாம் கலி முற்றிவிட்டது. தெய்வ நிந்தனை பெருகிவிட்டது. பாவ மூட்டைகளின் சுமை அதிகமாகிவிட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மீ டூ, ஊழல், கருப்புப் பணம், பொய்மை, ஏமாற்று வேலை ஆகியவை எல்லை மீறுவதால் பிரளயம் ஏற்பட்டு மக்கள் அழிவார்கள் என்கின்றனர்.
புவி வெப்பமாதல் காரணமாக, வட துருவ பனிமலை, ஆல்ப்ஸ் மலை, இமய மலை போன்ற குளிர் மண்டலப் பனிமலைகளும் உருகி உருகி வெள்ளம் ஏற்பட்டு, கடல் மட்டம் உயரும் என்றும், அதனால் பல கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 
அவர்கள் கூறுகிறபடி நடந்தால், சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொச்சி, கோவா, மும்பை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, டாக்கா, கராச்சி ஆகிய நகரங்கள் காணாமல் போய்விடும் (காவிரிப்பூம்பட்டினம், கொற்கை போன்ற கடற்கரை நகரங்கள் காணாமல் போனதும் காலநிலை மாற்றத்தால்தான்).
உலகில், விவசாயம் தோன்றுவதற்குக் காரணமே காலநிலை மாற்றம்தான். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியே பனிக்கட்டிகளால் மூடியிருந்தது. வட துருவம், தென் துருவம் என்றெல்லாம் எதுவும் இல்லை. பூமி முழுவதும் இமயத்துப் பனிதான். இதை பனிக்கட்டி காலம் என்பார்கள். கடல் மட்டம் இன்றுள்ள அளவைவிட 600 அடி கீழே இருந்தது. காலப்போக்கில் பனி உருகி வெள்ளமாகி, கடல் மட்டம் உயர்ந்து, இன்றுள்ள நிலையைப் பெற்றது. 
ஏறத்தாழ கி.மு. 12000 ஆண்டுஅளவில் இப்படிப்பட்ட காலநிலை மாற்றம் ஏற்பட்டு வட துருவமும் தென் துருவமும் -அதாவது அண்டார்ட்டிக், ஆர்ட்டிக் ஆகியவை - இன்றுள்ள அளவுக்கு சுருங்கின. இதை பின் வாங்கிய பனிக்கட்டி காலம் என்பர். இந்த நிகழ்ச்சி ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை. கி.மு. 12000-இல் தொடங்கி கி.மு. 6000 வரை சுமார் 6000 ஆண்டுகள் நீடித்தது. மீண்டும் அதுபோன்ற ஒன்றை நாம் எதிர்கொள்கிறோமா? 
பழைய பைபிள் கதையிலும் இந்திய புராணத்தில் மச்சாவதாரக் கதையிலும் உள்ள சில ஒற்றுமைகளைப் பகுத்தறிதல் நலம். பழைய பைபிள் கதையில் ஜெஹோவா அதாவது கடவுள், தன் பக்தனான நோவாவிடம், உலகம் பிரளயத்தால் அழியப் போகிறது. ஏழு இரவுகள் ஏழு பகல்கள் வெள்ளம் நீடித்து ஊர்களும் மக்களும் அழிவர். எனவே, உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள, படகு வீடு (ஆர்க் ) ஒன்றைக் கட்டிக் கொள் என்று கூறினார். அவ்வாறே பிரளயம் ஏற்பட, படகு வீட்டின் உதவியால் நோவாவின் குடும்பம் மட்டுமே தப்பியது.
இவ்வாறே இந்து மத புராணத்தில் மனு. ஒருநாள் மனு ஆற்றில் இறங்கி கையில் நீரை அள்ளியபோது, அந்நீரில் ஒரு குட்டி மீன் இருந்தது. அது நீ என்னைக் காப்பாற்றினால் நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று கூறியது. 
சம்மதித்த மனு, ஒரு பானையில் நீர் ஊற்றி அம்மீனை பானை நீருக்குள் விட்டார். மீன் வளர்ந்து பானை அளவு பெரிதானது. பின் அந்த மீனை மனு ஒரு குட்டையில் விட்டார். மீண்டும் பெரிதாகவே, கடலில் விட ஏற்பாடு செய்தார். அப்போது அந்த மீன், நீ ஒரு கப்பல் கட்டிக்கொண்டு அதற்குள் இரு. ஒரு பெரிய பிரளயம் வரும் என்றது. 
பிரளயம் வந்த போது, திமிங்கலம் போல் வளர்ந்த அம்மீன் தன் கொம்பால் அக்கப்பலைப் பிணைத்து பாதுகாப்பான இடம் தேடி ஓட்டிச் சென்றது. பின் ஒரு பெரிய மலையருகில் வந்து அக்கப்பலை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அந்த மலை மீது ஏறிச் சென்றது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு மனுவிடம் அந்தமீன் கூறியது. வெள்ளம் வடிந்ததும் கீழே வரலாம் என்றும் கூறியது. மகாவிஷ்ணுவான நாராயணரின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதாரம் கூறும் கதை இது. 
இந்திய மரபில், ஒவ்வொரு யுக முடிவிலும் ஒரு பிரளயம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இதன் பொருள் காலநிலை மாற்றம் என்பது புதிய நிகழ்ச்சியல்ல. அது நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது. பழைய யுகக் கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, காலநிலை மாற்றம் இயல்பானதுதான் என்றாலும், இப்படிக் கூறிவிட்டு அசட்டையாக இருந்தால் ஆபத்துதான் வரும்.
காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை ஐ.நா. கட்டுப்பாட்டில் இயங்கும் நிபுணர்குழு ஒன்று அறிவிக்கிறது. இந்த நிபுணர் குழு, தொழிற்புரட்சி கால கட்டத்தில் நிலவிய தட்ப வெப்ப அளவுக்கு மேல் இரண்டு டிகிரி சென்டிகிரேட் வரை புவி தாங்கும் என்ற கருத்து தவறு என்று அறிவித்துள்ளது. 
புதிய அறிவிப்பு அடிப்படையில், வெப்பம் தாங்கும் சக்தி மேலும் 1.5 டிகிரி உயர்வுக்கு மட்டுமே அனுமதி. ஆகவேதான், உலக நாடுகள், புதைபொருள் எரிசக்திப் பயன்பாட்டிலிருந்து மாற்று எரிசக்திப் பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்களை நாம் நிறையவே சந்தித்திருக்கிறோம். அதற்கு நிரூபணம் தேவையில்லை. சென்னையில் ஏற்பட்ட பிரளயம், பின்னர் கேரள பிரளயம். இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வறட்சி. இப்படி ஒவ்வொரு உலக நாட்டிலும் நிகழ்ந்துள்ளது. அதிக வெய்யில் அல்லது அதிக மழை. இதற்கு என்னதான் தீர்வு? ஐ.நா. காலநிலை நிபுணர்கள் கூறுவது என்ன?
2030-ஆம் ஆண்டை நெருங்கும் போது 2010-இல் எந்த அளவு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டோமோ அந்த அளவைப் பாதியைக் குறைக்க வேண்டும். 2050-ஐ நெருங்கும்போது, மீதி 50 சதவீதத்தையும் குறைந்து, 2010-இல் இருந்த அதே நிலைக்குத் திரும்ப வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லாமல் உலக நாடுகள் அசட்டையாக உள்ளன. அமெரிக்கத் தலைமையோ புதைபொருள் எரிசக்திப்
பயன்பாட்டை அதிகரித்து வருகிறது.
எரிசக்திப் பயன்பாட்டில், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கை நீர்த்துவிட்டது. 2030-இல் எந்த அளவு கார்பன் வெளியேற்றம் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தோமோ அளவை இந்த ஆண்டே எட்டி விட்டோம். ஒருபக்கம், மக்கள் எரிசக்தியில்லாத வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் சிலர், வளர்ச்சியடைந்த பின்னும் வளர்ச்சி போதாது என்று தொடர்ந்து எரிசக்தியைத் துய்க்கிறார்கள். இது எங்கு போய் முடியுமோ? 
தொழில் வளர்ச்சிக்காக வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்சைடுகளை உள்வாங்கி சேமிக்கும் சாதனங்கள் கடல் நீரும் மரங்களும். மரங்களின் இயற்கையான சுத்திகரிப்பு ஓரளவுக்குத்தான் தாங்கும். எல்லை மீறும்போது பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. நிறைய கார்பன் காற்றை சுவாசிக்க க்கூடிய மரங்கள் வணிக நோக்கில் அழிக்கப்படுவதால் வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 
கடலுக்குள் பவளப் பாறைகளில் உள்ள பாசியினங்கள் கார்பனால் வளர்கின்றன. ஆனால் வெப்பம் மிகும்போது பவளப்பாறைகள் வெளுத்துப் போவதால் கார்பன் உறிஞ்சும் சக்தி குறைகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் வளர்ச்சியைக் குறைத்துக் கொண்டு வளர வேண்டிய நாடுகளுக்காக எரிசக்திப் பயன்பாட்டை விட்டுக் கொடுக்க வேண்டும். ஐ.நா. சபை அறிவுறுத்தும் எரிசக்தி சமதர்மக் கொள்கை மதிக்கப்பட வேண்டும். மாற்று எரிசக்தி தொழில் நுட்பங்களை ஏழை நாடுகளுக்கு வழங்குவதில் பணக்கார நாடுகள் லாப நோக்கம் பார்க்கும் போக்கும் தவறு. 
வாழு வாழவிடு என்ற கொள்கைப்படி எரிசக்திப் பயன்பாட்டை பணக்கார நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போது புவியில் நிகழ்ந்து வரும் சுனாமி, அடைமழை போன்ற பிரளய சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும். கடல்மட்டம் உயரும். மக்கள் அழிவைத் தவிர்க்க முடியாது. 
பழைய பைபிளில் கூறப்பட்ட நோவாவின் கதையும், இந்து புராணங்களில் கூறப்பட்ட மனு, மச்சாவதாரக் கதைகள் எல்லாம் மனித சமுதாயத்திற்கு ஆண்டவன் வழங்கிய எச்சரிக்கைகள் என்பதை ஒவ்வொரு நாடும் உணர்ந்து கொண்டு, சுற்றுச்சூழல் நெறிகளைப் போற்றினால்தான் இப்பூவுலகு காப்பாற்றப்படும்.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com